தொழாதவனின் நோன்பு, தர்மம் போன்ற நல்லறங்களின் நிலை என்ன?
ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருபாலர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: –
“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
மேலும் இத்தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாம் இடத்தைப் பெருகின்றது. எக்காரணத்தாலும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் இடமே கிடையாது. எந்தளவுக்கென்றால் யுத்தக்களத்திலும் கூட தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். ஒழுச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் தயம்மும் செய்யுமாறு ஏவப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல காரணங்களால் பெரும்பாலான உலமாக்கள், ‘வேண்டுமென்றே தொழுகையை விடுவது ஒருவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும்’ எனக் கூறியுள்ளனர். எனவே தவ்பாச் செய்து மீளுவது கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி) தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள்” (அல்-குர்ஆன் 9:5)
மேலும் அல்லாஹ் கூறுகையில்: –
“அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே” (அல்-குர்ஆன் 9:11)
எனவே இஸ்லாமிய சகோதரத்துவம் தொழுகை மூலமாக நிலைப்பது போன்று, தொழுகையை விடுவதன் காரணமாக அது இல்லாமல் போவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
அபு தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: -“எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”
ஒருவன் நோன்பு நோற்கிறான், ஆனால் தொழுவதில்லை. இவன் நிலை என்ன?
தொழாதவனுடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்று ஒருவன் தீர்ப்பளித்தால் அவன் குற்றவாளியா? என இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்ட போது, பின்வருமாறு பதிலளித்தார்கள்: –
நோன்பு நோற்றாலும் தொழாததன் காரணத்தால் அத்தீர்ப்பு சரியானதே. ஏனென்றால் தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். தொழுகையில்லாமல் இஸ்லாம் நிலைபெறாது. எனவே தொழுகையை விட்டவன் நிராகரிப்பவனாகின்றான். மேலும் நிராகரிப்பாளனின் நோன்போ, தர்மமோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: –
“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)
மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொழுகையற்ற நோன்பானது எவ்விதப் பயனும் அளிப்பதில்லை என்பது தெளிவாகின்றது. எனவே முதலாவதாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்ததாக தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.