பிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர் படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காக ‘ரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சி’ என்று தொலைக் காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள்.

இவ்வாறு பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ அல்லது செயல்களாலோ அல்லது ஏன் நாவால் கூடவோ இருக்கலாம். பிறரைத் துன்புறுத்தி மகிழும் இத்தகைய இழி செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிக கடுமையான தண்டணைகள் காத்திருக்கின்றது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்:

முஃமின்களே!

ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;

(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;

இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,

இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!

எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்-குர்ஆன் 49:11)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

“ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்” (அல்-குர்ஆன் 33:58)

முஸ்லிமை ஏசுவது பாவமாகும்!

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

திட்டியவரிடமே திரும்பிச் செல்லும் சாபம்!

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஃமின் திட்டுபவனாக இருக்கமாட்டான்!

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

பிறரை கேவலமாக எண்ணாதிருத்தல்!

தனது சகோதர முஸ்லிம் ஒருவனை கேவலமாக எண்ணுவது அவன் கெட்டவன் என்பதற்கு போதுமான (அடையாளமா)கும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

நாவைப் பேணுதல்!

‘முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்!

‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.

சகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்!

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.

உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.

நிந்தித்தவரையே சென்றடையும் நிந்தனை!

நாம் கோபத்தினால் ஒருவரைப் பற்றி பலவாறாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட கவலைப் படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: –

“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.

அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

அண்டை வீட்டாரை துண்புறுத்துபவன் இறை நம்பிக்கையாளரேயல்ல!

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அபூ ஷுரைஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் சுவனம் செல்ல முடியாது!

எவருடைய அண்டை வீட்டான் அவருடைய தீங்கை விட்டும் அமைதி பெறவில்லையோ அவர் சுவனம் செல்லமாட்டார் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *