மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை
விட்டுக் கொடுக்கும் தன்மை – முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள்.
ஷைத்தானைப் பொறுத்தவரை ஷிர்க், பித்அத் புரிபவர்களிடம் அவனுக்கு அதிகம் வேலையில்லை! ஏனென்றால் அவர்கள் வழிகேட்டில் தான் இருக்கின்றனர் என்பது அவனுக்கு நன்றாகவேத் தெரியும். எனவே அவன் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுபவர்களையும் பாவிகளாக்குவதிலேயே அதிக கவனமுடன் செயல்படுகின்றான். அவனுடைய சூழச்சிகளில் ஒன்று தான் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளை மறக்கடிக்கச்செய்து ஷைத்தானிய குணங்களான தற்பெருமை, ஆணவம், கர்வம் கொள்ளுதல், பலிவாங்குதல், பிரிவினைகளை ஏற்படுத்துதல் போன்ற தீய செயல்களை செய்வதற்கு தூண்டுவதாகும்.
இவைகளெல்லாம் வளர்ந்துவரும் ஏகத்துவத்தைக் குலைப்பதற்காக ஷைத்தான் செய்யும் செய்யும் சூழ்ச்சிகள் என்பதை உணராத நம்மவர்களும் அவனுடைய மாயவலையில் சிக்குண்டவர்களாக தம் சகோதரர்களின் சிறிய தவறுகளையும் பூதக்கண்ணாடியைக் கொண்டு மிகப் பிரம்மாண்டமானதாக பொதுமக்களின் முன்னிலையில் காட்டி அவர்களின் மானத்தைக் கப்பலேற்றி அவர்களின் தலை குனிவில் இவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் என்று போதித்துக் கொண்டே பிறர் மனம் புண்படும்படி நடந்துக் கொள்கிறீர்களே என்று அறிவுரை பகர்கின்ற வேளையிலே, எங்களுக்கே அறிவுரையா? நீங்கள் ரொம்பா ஒழுங்கா? என்ற ஆணவத்துடன் அறிவுரை பகன்றவர்களின் மானமும் சேர்த்து கப்பலேற்றப்படுகின்றது!
இவ்வாறாக ஷைத்தான், “நாங்கள் ஷிர்க், பித்அத்தை தவிர்ந்து குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வாழக்கூடியவர்கள்” என்று பெருமையடித்துக் கொள்பவர்களின் உள்ளங்களிலே ஆழமாகக் குடிகொண்டு அவனின் தீயகுணங்களை அவர்களின் மூலம் செயல்படுத்திக் கொண்டிருப்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.
ஆயினும் மனிதர்களின் உள்ளங்களைப் புரட்டி நேர்வழிப்படுத்துபவனான வல்ல அல்லாஹ்வின், “நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக” (87:9) மற்றும் “நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்” (51:55) போன்ற அறிவுரைகளுக்கேற்ப பகைமை உணர்வு, பலிவாங்கும் உணர்வு, பிரிவினைகளை ஏற்படுத்தும் செயல் ஆகிய அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற, இறைவனால் பெரிதும் விரும்பப்படுகின்ற பிறர் குறைகளை மன்னித்து விட்டுக்கொடுக்கும் தன்மையையும் அதன் அவசியத்தையும் பற்றிய இச்சிறிய நினைவூட்டலை பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நபி (ஸல்) அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட சத்திய சீலர்களான ஸஹாபா பெருமக்களின் பிறர் தவறுகளை மன்னிக்கும் தன்மையை நாம் உற்று நோக்கினால் ஆச்சரியப்படும் அளவிற்கான சிறந்த படிப்பினைகள் நமக்கு கிடைக்கின்றன.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்:
உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) கூறினார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. (ஆதாரம் : புகாரி)
தம் தந்தையைக் கொன்றவர்களிடத்திலும் ஹுதைஃபா (ரலி) அவர்கள் காட்டிய பரிவு மேலும் அவர்களின் பாவம் மன்னிக்கப்படவேண்டும் என்று அவர்கள் செய்த துஆ! – இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம்.
உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.
நிந்தித்தவரையே சென்றடையும் நிந்தனை!
“பிறர் தம்மைப் பற்றி சில செய்திகள் கூறிவிட்டார்; அவரை நான் பலிவாங்க வேண்டும்; அவரை நான் எவ்வாறு நோகடிக்கின்றேன் பார்” என்ற வெறியுடன் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பலவாறாக பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட நாம் கவலைப் படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: –
“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.
உண்மையான வீரன் யார்?
நம்மிடம் வம்புக்கிழுப்பவர்களோடு மோதி அவர்களை வீழ்த்துவதான் வீரமல்ல! மாறாக அவர்களின் தவறுகளை மன்னிக்கும் தன்மையே சிறந்த வீரமாகும். ஏனென்றால் தம்மோடு வம்புக்கு வருபவரோடு மோதுவது என்பது பொதுவாக அனைவரின் செயலாகும். ஆனால் அவற்றை மன்னித்து ஏற்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தி கோபத்தை அடக்கி கொள்பரை சிறப்பித்து பின்வருமாறு கூறுகிறார்கள்: –
“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.
மூன்று இரவு, மூன்று பகல்களுக்கு மேல் பகைமைகொண்ட நிலையில் மரணிப்பவன் நரகம் புகுவான்!
மேலும் சகோதர முஸ்லிம்களுக்கிமையில் மூன்று நாட்களுக்கு மேல் பகைமை கொண்ட நிலையிலேயே மரணிப்பவர் நரகம் புகுவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.
எனவே சகோதர சகோதரிகளே! சத்தியத் திருத்தூதரின் வாக்கை உண்மையென நம்பும் நாம் உடனடியாக நமது தவறுகளிலிருந்து விடுபட்டு சகோதர முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும்.
சகோதர முஸ்லிம்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் நாம் பேசாமல் பகைத்து இருக்கக் கூடாது என்ற நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையை அறிந்து உண்மையை நாம் உணர்ந்து கொண்ட போதிலும் ஷைத்தான் நம்மிடம் குறிக்கிட்டு அவர்கள் தானே முதலில் வம்புக்கிழுத்தார்கள்! எனவே அவர்கள் முதலில் பேசட்டும்; பிறகு நாம் பேசலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பான்.
ஷைத்தானின் இந்த மாயவலையில் நாம் சிக்கிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரியவர்களாக நாம் பெருந்தண்மையுடன் அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து மறந்து விட்டு நாம் முதலில் பேச ஆரம்பிப்போமேயானால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து அதற்காக நமக்கு நிறைய வெகுமதிகளை தருவான்.
இவ்வாறு பிணக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் வந்திருக்கிறது.
“ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.
பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?
நம்மில் சிலர், நான் ஒன்றுமே செய்யவில்லை! தவறுகள் முழுவதும் மற்றவருடையது தான். அவராகத் தான் என்னிடம் வம்புகள் செய்து பிரிந்துவிட்டார். நான் என்ன செய்வது? என்று கேட்கின்றனர். மேலும், இப்போது கூட நான் அவர்களைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை! ஆனால் அவர்களோ என்னைப் பற்றி அநியாயத்திற்கும் இல்லாததையும் பொல்லாததையும் பிறரிடம் கூறி என்னை மனவருத்தத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறி மன வருத்தமடைகின்றனர். இவர்களுக்கான அழகிய தீர்வை நம்மையும் அவதூறு கூறும் அவர்களையும் படைத்தவனும் நம் அனைவரது உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: –
“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)
அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்“. (அல்குர்ஆன் 3:134)
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் பிறர் குறைகளை மன்னிக்கும் தன்மையை அளித்து அதன் மூலம் நம் குறைகளை அவன் மன்னித்தருள்வானாகவும்.
usful article.
jazakallah.