ஹராமை ஹலாலாகவும் ஹலாலை ஹராமாகவும் ஆக்குதல்
ஜுல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையம், சவூதி அரேபியா, வெளியிட்ட,
‘மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்!’ எச்சரிக்கை! என்ற நூலில் இருந்து…
நூலாசிரியர்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
ஹராமை ஹலாலாகவும் ஹலாலை ஹராமாகவும் ஆக்குதல்
இன்று பரவலாகக் காணப்படக்கூடிய மிகப் பெரும் இணைவைத்தலுக்கு மற்றொரு உதாரணம்,
அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாகவும், அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராமாகவும் ஆக்குவது.
அல்லது,
‘ஹலால், ஹராம் ஆக்குகின்ற இந்த உரிமை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கும் இருக்கிறது’ என்று நம்புவது.
அல்லது,
அஞ்ஞான காலத்தின் அடிப்படையிலான நீதிமன்றங்களையும் சட்டங்களையும் நாடிச் சென்று முழு திருப்தியுடனும் விருப்பத்துடனும் வழக்குத் தொடுப்பது. அது ஹலால் – ஆகுமானது என்று கருதுவது.
இதனை அல்லாஹ், ‘மிகப் பெரும் குஃப்ர் – இறைநிராகரிப்பு’ என பின்வரும் வசனத்தில் கூறியுள்ளான்:
“அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் கடவுளராக ஆக்கிக் கொண்டார்கள்” (9:31)
(முன்பு கிறிஸ்தவராக இருந்த) அதிய்யுப்னு ஹாதிம் (ரலி) இந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிடக் கேட்டபோது,
‘அந்த மக்கள் அவர்களை (பாதிரிகளையும், துறவிகளையும்) வணங்கிக் கொண்டிருக்கவில்லையே!’
என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
‘சரிதான்! ஆனால் அந்த பாதிரிகளும், துறவிகளும் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலால் என்றும், அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராம் என்றும் கூறும்போது அவர்களும் அவ்வாறு ஏற்றுக் கொண்டார்களே! அதுதான் அவர்களை அவர்கள் வணங்குவதாகும்.’ (திர்மிதி, பைஹகி)
மேலும், இணை வைப்பவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,
“அவர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலக்கியவற்றை விலக்கப்பட்டவை என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்கள்…. (9:29)
என்று கூறியுள்ளான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
“(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) சிலவற்றை விலக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை ஆகுமாக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே! (நபியே! இவர்களிடம்) கேளுங்கள் ‘இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கிறீர்களா?’” (10:59)