தொழுகையின் செயல்களை விரைவாகச் செய்யலாமா?
ஒருவர் தொழும் போது அவர் தம்மைப் படைத்த அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்பதாக உணர்ந்து அவனுக்கு முற்றிலும் பணிந்தவராக மிகுந்த உள்ளச்சத்துடன் தொழ முயற்ச்சிக்கும் போது அவருடைய தொழுகை தானாகவே பணிவுள்ளதாக, உண்மையானதாக அமையும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே!’ ‘இஹ்ஸான்’ என்றால் என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) ஆதாரம்: புகாரி.
ஒருவர் மெதுவாகவும் நிதானமாகவும் தொழும் போது தான் அவர் அல்லாஹ்வின் சன்னிதானத்தின் முன் நின்று அவனை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடனும், பணிவுடனும் உள்ளச்சத்துடனும் அவனை வணங்க முடியும்.
மாறாக ஒருவர் அவசர அவசரமாக தொழுதால் மேற்கூறிய உணர்வுகளில் தொழ இயலாததோடல்லாமல் ஒருவர் தன் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற கடமையை நிறைவேற்றுவதற்காக வெறுமனே செய்கின்ற சடங்கைப் போலாகும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையில் உள்ளச்சத்துடன் தொழவேண்டிய அவசியம் குறித்துக் கூறுகிறான்.
“ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்” (அல்-குர்ஆன் 23:1-2)
மேலும் நபி (ஸல்) அவர்கள் வேகமாக தொழும் ஒருவரைப் பார்த்து அவரை திரும்பவும் தொழுமாறு கட்டளையிட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை” என்றும் கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு மூன்று முறை நடந்தது). அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்தியமார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.
“நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
நமது சகோதர சகோதரிகளில் சிலர் செய்யும் தவறு என்னவெனில் ருகூவிலிருந்து எழுந்ததும் அவசர அவசரமாக சஜ்தாவிற்குச் செல்கின்றனர். அதே போல் இரண்டு சஜ்தாக்களுக்களும் இடையில் இடைவெளியில்லாமல் அவசரமாக இரண்டு சஜ்தாக்களையும் செய்கின்றனர். இவ்வாறு செய்பவர்கள் மேற் கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான “நீர் தொழவே இல்லை” என்பதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தொழுதும் தொழாத பாவிகளைப்போல் இல்லாமல் முறையாக தொழுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம்மனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி தொழுகையை நிறைவேற்றுவதற்கு அருள் புரிவானாகவும்.