ஆசைகளைக் கட்டுப்படுத்தும் புனித மாதம்

இந்த உலகில் படைக்கப்பட்ட ஜீவராசிகளில் மிகச் சிறந்த படைப்பாக எல்லாம் வல்ல இறைவன் மனிதனைப் படைத்து அவனை ஏனைய படைப்பினங்களைவிட கண்ணியப்படுத்தியுள்ளான்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا

“நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கறையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்” (அல்-குர்ஆன் 17:70)

மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவுக்கும் இச்சிறப்புக்கும் நேரடி தொடர்பு உள்ளதை அவதானிக்க முடிகின்றது. மனிதன் தனது எல்லா செயற்பாடுகளின் போதும் படைப்பாளனின் அனுமதிக்கும், வழிகாட்டால்களுக்கும் முரணில்லாத ஒரு வாழ்கையை அமைத்துக் கொள்ளும் போது அவனது இவ்வுலக வாழ்க்கை மற்றும் முடிவே இல்லாத மறுமை வாழ்க்கை என்பன வெற்றிகரமாக அமைந்து விடுகின்றது.

மனிதனது இயற்கைத் தேவைகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களுக்கு எந்த ஒரு வரையரைகளையும் ஏற்படுத்திக் கொள்ளாது மனோயிச்சைக்கு முழுமையாக கட்டுப்பட்டு தான் நாடியதையெல்லாம் செய்யும் நிலைக்கு மனிதன் மாறுகின்ற போது அவனிடம் படைப்பாளன் எதிர்பார்க்கும் உயரிய பண்புகள் எடுபட்டு போய் ஒரு கீழ்த்தரமான நிலைக்கு செல்ல வேண்டிய துர்பாக்கியம் ஏற்படுகின்றது.

இறைவழிகாட்டலில் இருந்து வெளியேறி தனது மனோயிச்சைக்கு கட்டுப்படும் போது இறைவனால் வழங்கப்பட்ட கண்ணியம் தனக்கு தேவை இல்லை என்பதனை செயலால் பறைசாற்றுகின்ரான். நம்மை படைத்தவனிடம் இருந்து வரும் நேர்வழியே நமக்குரிய வழியாகும் என்பதனை ஆதம் (அலை) அவர்களை படைத்து அவர்களை இந்த உலகிற்கு அனுப்பும் அந்த தருணத்திலே இறைவன் மிகத் தெளிவாக சொல்லி விட்டான்.

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

“(பின்பு, நாம் சொன்னோம்; ‘நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” (அல்-குர்ஆன் 2:38)

இறைவன் புறத்தில் இருந்து வரும் நேர்வழியை யாரெல்லாம் தமது மனோயிச்சைக்கு அப்பால் எடுத்துக் கொள்கின்றனரோ, அவர்களுக்கு இறந்த காலத்தைப் பற்றிய கவலையோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ இல்லாத மகிழ்சிகரமான வாழ்கை கிடைக்கும் என்பது இறை வாக்குறுதியாகும். பகுத்தறிவை கொடுத்த இறைவன் ‘நீ எல்லாவற்றைம் பகுத்து அறிந்துகொள் என விட்டுவிடாமல் இறை வழிகாட்டலின் பிரகாரம் உனது எல்லா விருப்பு வெறுப்புக்களை அமைத்துக் கொள்ளவேண்டும்’ என கட்டளை இடுகின்றான். இதனை உறுதிப்படுத்தி மனித சமுதாயத்திற்கு பாரிய விழிப்புனர்வை ஏற்படுத்தவே தூதர்களையும், வேதங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

மனிதன் தனது ஆசைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்கும் அந்த ஆசைகளுக்கு கடிவாளம் இட்டு புடம் போடுவதற்கும் தன்னை பயிற்றுவித்துக் கொள்ளும் முகமாக இறைவழிகாட்டல் இருதித் தூதர் (ஸல்) மீது அருளப்பட்ட பாக்கியம் மிக்க மாதமாகிய ரமழான் மிகவும் உசிதமானது என்பதனை இறைவன் நமக்கு உணர்துகின்றான்.

காரணம் இம்மாதத்தில் மனிதன் தனக்கு ஆகுமாக்கப்பட்ட உணவு, குடிபானங்கள் மற்றும் தாம்பத்திய வாழ்கை என்பற்றை இறைவனுக்காக கிட்டத்தட்ட 15 மணி நேரங்கள் தவிர்த்து மிகப்பெரிய தியாகப் பயிற்சியைப் பெறுகின்றான். இந்த காலப்பகுதியில் தனிமையில் மேற்படி விடயங்களை அடைந்து கொள்ளுவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்த போதிலும் இறைவன் என்னை கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற பயம் அவனில் மேலோங்கி இறைவனுக்காக தனது எல்லா விதமான ஆசைகளுக்கும் கடிவாளம் இடுகின்றான்.

மனிதனிடம் ‘இறை கண்கானிப்பு’ என் மீது இருக்கின்றது என்ற எண்ணம் மேலோங்கவே அவனிடம் பாவகாரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலையில் பெரும் மாற்றம் ஏற்படுகின்றது. எனவே தான் இறைவன் இந்த நோன்பை கடமையாக்கியதைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்…

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (அல்-குர்ஆன் 2:183)

இவ்வாறு கூறி இந்த நோன்பை இறை வழிகாட்டல் அருளப்பட்ட கண்ணியம் பொருந்திய மாதமாகிய ரமழான் மாதத்தில் நோற்குமாறு மனிதகுலத்திற்கு கட்டளை இடுகின்றான்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ…..

“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)

‘சுவையான உணவுகளை உண்ண வேண்டும்’ என்பது மனிதனிடம் காணப்படக் கூடிய ஆசைகளில் ஒன்றாகும். ஆனால் சுவையான அனைத்துமே அவனது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. அவனிடம் குடிகொண்டுள்ள சில நோய்கள், தான் விரும்பும் சுவையான உணவை புசிப்பதற்கு தடையாக இருக்கலாம். இது குறித்த விழிப்புணர்கள், மருத்துவ எச்சரிக்கைகள் செய்யப்பட்ட போதிலும் குறித்த மனிதனுக்கு அந்த உணவை தவிர்ப்பது கடினமாக இருக்கும்.

அவ்வாறே குடிபானங்கள் மீது அதீத பிரியம் உடையவர்களுக்கு அதை விட்டும் தூரமாக முடியாது. ஆகுமாக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை ஒரு நோயிலிருந்து விடுபட அல்லது தனது ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள ‘விடமுடியாது’ என அடம்பிடிப்பவர்களும் நோன்பு என்று வந்து விட்டால் இறைவனுக்காக அனைத்தையும் குறிப்பிட்ட மணி நேரங்கள் தவிர்த்து விடுகின்றனர். ‘டாக்டர் பார்க்கவில்லை’ என்று நினைத்து தமது உணவுப் பழகக் வழக்கங்களை விடமுடியாதவர்கள் ‘அல்லாஹ் பார்கின்றான்’ என்பதற்காக குறித்த ஆசைகளை அடக்கி வாசிக்க முற்படுகின்றான்.

இன்றைய யுகம் ‘நுகர்வுக் கலாசாரம் மேலோங்கி விளம்பர மாயையில் மனிதன் மூழ்கியிருக்கும் காலம்’ என்பதனால் எது ஆகுமாக்கப்பட்டது? எது தடுக்கப்பட்டது? என்பதைக் கூட சிந்தித்து செயற்படுவதற்கு மனிதனது ஆசைகள் இடம் கொடுப்பதில்லை. கட்டுக் கடங்காத ஆசைகளின் வெளிப்பாடே உணவு முறையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டு fast food மற்றும் மேற்கத்திய உணவு முறைகளுக்கு முஸ்லிம் சமூகம் அடிமைப்படும் அவலம் தொடர்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் உணவு உண்ணும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகளை சொல்லியிருந்தும் அதுவெல்லாம் மறக்கடிக்கப்பட்டு மதிமயங்கிய நிலையில் உணவருந்தும் நடைமுறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யுத்தகாலத்தில் பாவிக்கப்படும் ஏவுகனைகளின் பெயர்களை உணவுக்கு வைத்து ஆயுதங்கள் எப்படி ஒரு சமூகத்தையே அழித்து விடுமோ அவ்வாறே மனித ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் உணவுகள் பல்கிப்பெருகி அவற்றை நுகர்வதை பெருமையாக கருதும் நிலை ஏற்பட்டு விட்டது.

يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை (ஆடைகளால்) அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள்; பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 7:31)

உணவு முறையிலும் எல்லை கடந்து மனோயிச்சைக்கு கட்டுப்படும் நிலையை அல்லாஹ்வின் நேசத்தை விட்டும் தூராமாக்கிவிடும் என்று சொல்லப்பட்டும் கூட அளவாக சாப்பிடும் நடைமுறையில் இருந்து வெளியேறி அதிகம் சாப்பிடுங்கள் (Dine more) என்ற பெயரிலே உணவங்கள் திறக்கப்பட்டு அங்கே நமது சமூகம் அலை மோதுகின்றமை பெரும் கவலை தரும் விடயமாகும்.

நாய், பன்றி போன்றவை ஹராமாக்கப்பட்ட மார்க்கத்தில் இருந்து கொண்டு hotDog ஆசையாசையாக பரிமாறிக் கொள்ளும் மக்கள் நமது சமூக அமைப்பில் ஏராளம். இந்த உணவில் உண்மையில் நாய் இறைச்சி இல்லாவிட்டாலும் DOG என்ற பெயரில் குறித்த உணவு வழங்கப்படுகின்றமையை கண்டு கொள்ளாத அளவுக்கு நவீன உணவு முறையில் நமக்குள்ள மோகத்தை படம் பிடித்துக் காட்டுகின்றது.

இவ்வாறே பானங்கள் அருந்தும் விடயத்திலும் நமது இளைஞர்கள் தமது ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் மட்டும் முதலிடம் வழங்குவதையும் மார்க்க அங்கீகாரம் எனும் சட்டங்களை முதுகுக்குப் பின்னால் போட்டுவிடுவதையும் இங்கு நினைவுபடுத்தியாக வேண்டும். Boost Drink, Body Build Beverage போன்ற பெயர்களில் மதுபானக் நிறுவனங்களில் தயார் செய்யப்படும் சில பானங்களில் குறிப்பிட்ட அளவு போதை கலந்து உள்ளதையும் கண்டுகொள்ளாத அளவுக்கு நுகர்வுக் கலாசாரம் மேலிட்டுள்ளதை அவதானிக்கலாம். நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை நாம் மறந்துவிடலாகாது.

“மறுமை நெருங்கும் போது மதுவை மக்கள் சர்வசாதாரணமாக அருந்த ஆரம்பிப்பர்; கொலை, கொள்ளை, விப்பச்சாரம் என்பன அதிகரிக்கும்” (ஹதீஸின் சுருக்கம் – புகாரி)

என 1500 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கதரிசனமாக சொன்னார்கள். இன்று அதனை உண்மைப்படுத்தக் கூடிய மனிதர்கள் முழுமையாக தமது மனோயிச்சைக்கு மதிப்பளித்து இவ்வாறான பஞ்சமாபாதகங்களை செய்வதில் முண்டியடித்துக் கொள்கின்றனர்.

மேலும் உடல் ரீதியான ஆசைகளுக்கு மதிப்பளித்து இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கும் அமைப்பில் கணவன் – மனைவியாக வாழ்வதற்கு நமக்கு நல்வழி காட்டியிருக்க, ஆசைகளுக்கும் கீழ்தரமான இச்சைகளுக்கும் அடிபணிந்து மனித சமுதாயத்தின் மிகப் பெரும் அவலமாக இன்று விபச்சாரமும், விபச்சாரத்திற்கான வழிகளும் மிகவும் இலேசாக்கப்பட்டுள்ளமை உலகறிந்த விடயமாகும்.

திருமணம் எனும் இயற்கை தேவைக்கும் கடிவாளம் இடுமாறு இஸ்லாம் நமக்கு பணிக்கின்றது. ஒரு மனைவியுடன் போதுமாக்கிக் கொள்ள முடியாதவர்கள் கள்ளக் காதல், சின்ன வீடு என்று வேலி பாயாமல் நான்கு வரைக்கும் மனைவிகளை அடைந்து கொள்ளுவதற்கும் அனுமதியளிக்கின்றது. ஆனால் அங்கே மனைவிகளுக்கிடையே நீதியாக நடந்து கொள்வதனை பெரும் நிபந்தனையாக இறைவன் நமக்கு சுட்டிக்காட்டுகின்றான். நீதியாக, நேர்மையாக நடக்க முடியாதவன் ‘ஒரு மனைவியுடன் போதுமாக்கிக் கொள்ள வேண்டும்’ என எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு வழிகாட்டுகின்றான்.

وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَىٰ فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَلَّا تَعُولُوا

“அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.” (அல்-குர்ஆன் 4:3)

ஆசை மேலிட்டு தன்னால் திருமணம் முடிக்கும் அளவுக்கு வசதியில்லாத போது ‘அவன் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் அது அவனுக்கு கேடயத்தை ஒத்ததாகும்’ (புகாரி) என நபியவர்கள் கூறியமை நோன்பு எந்த ஆளவுக்கு ஆசைகளை கட்டுப்படுத்தி கேடயத்தை போன்று நம்மை காக்கின்றது என்பதை விளங்களாம். உண்ணாமல், பருகாமல் வெரும் வயிற்றுடன் பல மணி நேரங்கள் இருக்கும் போது கீழ்தரமான மனோயிச்சைகள் வெளிப்படாமல் இருப்பதுடன் இப்லீஸூக்கு அந்த மனிதனிடம் வேலை இல்லாமல் போகின்றது.

இப்படி மனிதனின் பிரதான ஆசாபாசங்களுக்கு கடிவாளமிட்டு தன்னையும் தனது ஆரோக்கியம், தனது குடும்பம், சமூகம் என எல்லா கோணங்களிலும் நன்மை பயக்கும் விதமாக புனித ரமழான் மாதத்தில் பூரண பயிற்சியை இறைவன் நமக்குத் தரவிரும்புகின்றான்.

இறைவனின் மிகப் பெரும் கருணையின் வெளிப்பாடே ரமழானில் நாம் பெறுகின்ற பயிற்சி என்பது இன்று பலரால் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக நமது இளைய சமுதாயத்தினர் நோன்பு நோற்பதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. நோன்பின் மகத்துவத்தையும், இறையச்சத்தையும் மறக்கடிக்க வைக்க இப்லீஸ் எடுத்துக் கொண்ட மிகப் பெரிய ஆயுதம், சமூக வலைத்தளங்களாகும்.

இன்று எல்லா வீடுகளிலும் என்பதை விட எல்லோரது விரல் நுனியிலும் உலகம் சுருக்கப்பட்டுள்ளதை நாம் பார்கின்றோம். குறிப்பாக FB, TwiTer, whatsapp, you tube, snap short என ஏரளமான சமூக வலைத்தளங்களில் நம்மவர்கள் அலைந்து திரிந்து நேர காலங்களை வீணடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இறைவழிகாட்டல் வந்த மாதத்தில் அதை விட்டும் தூரமாகி தமது ஆசைகளுக்கு முதலிடம் கொடுத்து செயற்படுகின்றவர்கள் இந்த மாதம் நம்மிடம் எதிர்பார்க்கும் மாற்றங்களைப் பற்றி ஒரு கணம் சிந்திக்க வேண்டும். இப்புனித மாதத்திலும் நமது கட்டுக்கடங்காத ஆசைகளை புடம் போட்டு அவற்றை நெறிப்படுத்த தவறுவோமேயானால் வேறு எந்த மாதத்தில் நம்மை நாமே மாற்றிக் கொள்ளப் போகின்றோம்?

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ

“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?’ (என்றும் இறைவன் கேட்பான்.)” (அல்-குர்ஆன் 23:115)

அல்குர்ஆன் நெடுகிலும் மரணம் மற்றும் மறுமை தொடர்பான எச்சரிக்கைகளை அல்லாஹ் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றான். இந்த எச்சரிக்கைகள் நமது செவிப்புலன்களை எட்டி நமது இதயங்களை அடையவில்லை என்றால் என்றுமே நஷ்டம் அடைந்த சமுதாயமாகவே வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

…إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ

“எந்த ஒரு சமூதாயத்தவரும் தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால் அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை” (அல்-குர்ஆன் 13:11)

இந்த இறைவசனங்களின் ஆழ அகலங்களை கொஞ்சம் கரிசனையோடு சிந்தித்து நம்மில் இருக்கும் பாரிய குறைகளையும் பாவக் கறைகளையும் இனம் கண்டு அவற்றை போக்கிக் கொள்வதற்கு புனித மாதத்தை பெரும் சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்வோம். மனோயிச்சைக்கு முழுமையாக கட்டுப்பட்டு தனது வாழ்கையை அமைத்துக் கொள்ளும் மனிதனின் வாழ்நாளில் மதங்களுக்கோ, கொள்கைக் கோட்பாடுகளுக்கோ எந்த வேலையும் இல்லாமல் போகும். இறை வழிகாட்டுதல்களுக்கு செவிசாய்த்து ஆசைகளுக்கு புடம் போடும் பட்சத்தில் நமது எல்லாவிதமான செயற்பாடுகளும் உயரிய நிலைக்கு சென்று மனிதன் புனிதன் என்ற அந்தஸ்திற்கு தன்னை மேலோங்கச் செய்யலாம்.

எனவே எல்லா விதமான பாவங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத ஆசைகளுக்கு எதிர்வரும் புனித ரமழான் காலப்பகுதியிலாவது கடிவாளமிட்டு சிறந்த பயிற்சிகளை பெற்று இறைத் திருப்தியையும் அவனது மேலான சுவனபதியையும் பெற்றுக் கொள்ளும் நன்மக்களாக மாறுவோம்.

M. ரிஸ்கான் முஸ்தீன் மதனி
அழைப்பாளர்,
அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்,
அல்-கப்ஜி, சவூதி அரேபியா
18-04-17

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *