திருமணத்தின் அவசியம்
அகிலங்களின் இநைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஏன் மரம், செடி கொடிகளும் கூட ஜோடி, ஜோடியாகத் தன் படைக்கபட்டிருக்கின்றன. அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:
“நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.” (51:49.)
ஒவ்வொன்றையும் ஜோடி, ஜோடியாகப் படைத்திருப்பதற்கான நோக்கம் அந்த இனம் பல்கிப்பெருகுவதற்காக என்பதை அறியலாம். இது போல மனித இனமும் பல்கிப்பெருவதற்காக முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்தே அவருடைய ஜோடியாகிய ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்த இறைவன் அதன் மூலம் இந்த மனித இனம் பல்கிப்பெருகியதை தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்.
“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;” (4:1)
மனித குலம் செழித்தோங்க வேண்டுமென்றால் அவன் இல்லற உறவில் ஈடுபடவேண்டும்! அதிலே விருப்பத்தை ஏற்படுத்துவதற்காக பொதுவாகவே மனிதன் காம இச்சையுடன் தான் படைக்கப்பட்டிருக்கின்றான். நன்றாக சாப்பிட்டு, உடவை திடகாத்திரமாக வைத்திருக்கும் ஒரு ஆண்மகன் தன்னால் தனது காம இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு தனது ஆயுள்காலம் முழுவதும் வாழ இயலுமென்றால் நிச்சயமாக அது முடியாது. அவ்வாறு கூறுபவன் பொய் கூறுவதாகத்தான் கருத முடியும்.
திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.
வழிகெட்டக் சூஃபிகளில் சிலர் திருமணம் முடிப்பது அவசியமன்று என்றும் தாங்கள் என்றும் இறை நினைவில் இருப்பதற்கு திருமணம் தடையாக இருக்கின்றது என்றும் கூறி மக்களை வழிகெடுக்கின்றனர். பிற சமயங்களைச் சேர்ந்த மத குருமார்களே அவர்களாகவே உருவாக்கி வைத்துக்கொண்ட துறவித்தனத்தை பேணமுடியாமல் அவ்வப்போது தங்களிடம் ஆண்மீகம் வேண்டி வரும் பெண்களை பாலியல் தொந்தரவுக்குள்ளாக்குவதை அன்றாட தினசரிகளில் நாம் பார்க்க முடிகிறது.
மேலும் திருமண வாழ்க்கை என்பது ஒருவனின் உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த செயலாக இருப்பதால் அவனுடைய செயல்திறனில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பொதுவாகவே திருமணமாகதவர்களைவிட, திருமணமானவர்கள் தான் அதிக அளவில் செயல் திறன் மிக்கவர்களாகவும், சுறுசறுப்புடனும் இருப்பதாக ஆய்வு கூறுகின்றது. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
திருமணம் செய்வதன் அவசியத்தைப் பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:
“இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் – அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை – அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்.” (24:32.-33)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள்” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்
மேற்கண்ட வசனத்தில் ‘விவாகம் செய்து வையுங்கள்’ என்ற இறைக் கட்டளையும் அடுத்துவரும் நபிமொழியில், ‘சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும்‘ என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையும் இடம் பெற்றிருப்பதன் மூலம் முஸ்லிம்கள் திருமணம் செய்து வாழ்வதன் அவசியத்தை உணரலாம்.
துறவறத்தைக் கண்டித்த நபி (ஸல்) அவர்கள்:
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்” என்றார்.
இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார்.
மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒரு போதும் மணந்து கொள்ளமாட்டேன்” என்று கூறினார். புகாரி
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி); ஆதாரம்: புகாரி.
ஒருவர் ஆண்மை நீக்கம் செய்து கொண்டு ஆசைகளின்றி வாழ்வதற்கும் தடை!
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள விரும்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள். அவருக்கு (மட்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால், (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக்கொண்டிருப்போம். ஆதாரம்: முஸ்லிம்
மேற்கண்ட திருமற வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் ஒருவர் திருமணம் செய்துகொண்டு வாழ்வதன் அவசியத்தையும், எந்த நோக்கத்திற்காக திருமணம் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்தோம். இனி திருமணம் செய்து வாழ்வதனால் ஏற்படும் பிற நன்மைகளைப் பார்ப்போம்!
திருமண வாழ்வினால் ஏற்படும் நன்மைகள்!
திருணம் ஒருவருக்கு ஆரோக்கியமான வாழ்க்கையைத் தந்து அதன் மூலம் அவன் தம் குடும்பத்தாருடன் அன்புடனும் பாசத்துடனும் செயல்படுவதற்கு வழிவகை செய்கிறது.
திருமணத்தின் மூலம் ஒருவருடைய சந்ததி பல்கி பெருகி அதன் மூலம் அவனுடைய பெயர் அவருடைய சந்ததியினர்களால் நினைவு கூறப்படுகிறது.
காம இச்சையுடன் படைக்கப்பட்டிருக்கின்ற மனிதன் திருமணத்தின் மூலம் இறைவன் அனுமதித்த வழிகளில் தன்னுடைய காம இச்சையைத் தீர்த்துக்கொள்கிறான். அதன் மூலம் அவன் இறைவனால் தடை செய்யப்பட்ட, இஸ்லாத்தின் பார்வையில் கடும் தண்டணைக்குரிய விபச்சாரத்தை விட்டும் தவிர்ந்துக் கொள்கின்றான்.
பருவவயதில் திருமணம் செய்து அதன் மூலம் ஒருவர் தன்னுடைய காம இச்சைகளை இஸ்லாம் அனுமதித்த ஹலாலான வழயில் நிறைவேற்றிக் கொள்வதால் இஸ்லாம் தடை செய்த ஆபாசம், அறை குறை ஆடைகளுடன் இருக்கும் பிற பாலினத்தவர்களை பார்ப்பது போன்ற பாவமான செயல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
(எனவே அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பும் ஒரு முஸ்லிம் காம இச்சை அதிகமாக உடையவர்களாக இருந்தால் அவர் அதை மடடுப்படுத்த நோன்பிருக்க வேண்டும்; அல்லது திருமணம் செய்துகொண்டு இஸ்லாம் அனுமதித்த வழியில் அந்த இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமேயல்லாது ஹராமான வழிகளான ஆபாசம், விபச்சாரத்தின் பக்கம் நெருங்கி அதன் மூலம் மறுமை வாழ்வை வீணடிக்கக்கூடாது.)
திருமணத்தின் மூலம் மனிதர்கள் தாய், தந்தை, பிள்ளைகள் போன்ற உறவுகளை அடைந்து அந்த உறவுகளின் பாசப்பினைப்பின் மூலம் ஏற்படுகின்ற சந்தோசங்களை அடைகிறார்கள். ஒரு தாயோ அல்லது தமந்தையோ தனது மழலைச் செல்வங்களைக் கொஞ்சி விளையாடும் போது ஏற்படுகின்ற சந்தோசத்தை திருமணமாகதவர்கள் ஒருபோதும் அனுபவிக்க இயலாது.
வாழ்க்கைத் துணையின் மூலம் ஆனோ அல்லது பெண்ணோ கஷ்ட துன்பங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதன் மூலம் தம்முடைய வாழ்வில் ஒரு பாதுகாப்பை உணர்கிறார்கள். திருமணம் செய்வதற்கு முன்னர் பொறுப்பற்றவர்பளாக ஊதாரித்தனமாக இருந்தவர்கள் கூட திருமணத்திற்குப் பிறகு தம் குடும்பத்திற்காக, தம் சந்ததியினர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுள்ளவர்களாக மாறுகிறார்கள்.
திருமணம் ஒருவருக்கு வாழ்வில் தன்னம்பிக்கையைத் தோற்றுவித்து திருமணத்திற்கு முன்பிருந்த ஒரு வெற்றிடத்தை நிரப்புகின்றது.