தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டுமா?
அபூ ஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –
திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்’ ‘என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்’ (ஆதாரம் : புகாரி)
அபூ ஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: உம்முல் குர்ஆனை (சூரத்துல் பாத்திஹாவை) (மற்றொரு அறிவிப்பில் ஃபாத்திஹத்துல் ம்தாபுவை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது) ஓதாது தொழுபவரின் தொழுகை குறைபாடுள்ளதாகும். ‘ (ஆதாரம் : புகாரீ, அஹ்மத், முஸ்லிம்)
உபாதா இப்னு ஸாமித் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, மற்றும் அஹ்மத்)
இமாமுக்குப் பின்னால் நின்று தொழுபவர்கள் என்ன செய்யவேண்டும்?
தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாத்திஹாவை அவசியம் ஓதவேண்டும். சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்று மேற்கண்ட நபி மொழிகளிலிருந்து விளங்க முடிகிறது.
இமாம் சப்தமில்லாமல் ஓதும் போது, அவருக்குப் பின்னால் தொழக் கூடியவர்கள் அனைவரும் ஓதவேண்டும். இமாம் சப்தமிட்டு ஓதும் போது அவருக்குப் பின்னால் தொழுபவர், அமைதியாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: –
‘குர்ஆன் ஓதப்பட்டால் அதை செவிசாய்த்துக் கேளுங்கள், மேலும் மௌனமாக இருங்கள் அதன் மூலம் நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள்’ (7:204)
7:204 வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ‘தமது தஃப்ஸீருப்னி அப்பாஸ்’ என்ற நூலில் விளக்கம் அளிக்கையில்,
”வஇதா குரிஅல் குர்ஆனு” எனும் வசனத்திற்கு பர்லான தொழுகையில் குர்ஆன் ஓதப்பட்டால் அதன் ஓதுதலுக்காக செவிமடுங்கள்! மேலும் அதன் ஓதுதலுக்காக வாய் மூடியிருங்கள்! என்பதாக விரிவுரை செய்துள்ளார்கள்.
7:204 வசனம் பற்றி இமாம் (ரஹ்) அவர்கள் விளக்கம் அளிக்கையில்,
இவ்வசனம் அன்ஸார்களைச் சார்ந்ததொரு வாலிபரின் விஷயமாக அருளப்பட்டதாகும். அவர் நபி(ஸல்) அவர்கள் கிராஅத் ஓதும் போது அவர்களுடன் தாமும் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது ”குர்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிமடுங்கள். மேலும், வாய்மூடியிருங்கள். நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள்” எனும் திருவசனம் இறங்கியது என்று கூறுகிறார்கள். (ஆதாரம் : இப்னுஜரீர்)
அபூமூஸல் அஷ்அரீ رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: – இமாம் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் வாய் மூடியிருங்கள்! (ஆதாரம் : முஸ்லிம்)
ஒரு ஹதீஸில், ‘தொழுகையில் இமாம் சப்தமிட்டு ஓதுவதே அவருக்குப் பின்னால் நின்று தொழுபவர் ஓதுவதாகும். இமாம் சப்தமில்லாமல் ஓதும் போது, அவருக்குப் பின்னால் தொழக் கூடியவர்கள் அனைவரும் ஓதவேண்டும்.
இதற்கு விளக்கமளிக்கையில் அபூபக்கர் அல்-அரபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: –
‘இமாம் சப்தமில்லாமல் ஓதும் போது பின்னால் தொழுபவர்களும் சப்தமில்லாமல் ஓதவேண்டும். ஆனால் இமாம் சப்தமிட்டு ஓதும் போது பின்னால் நிற்பவர்கள் மௌனமாக இருக்கவேண்டும்’ என்பது தான் மிகவும் வலுவான அபிப்பிராயமாகும்.
இதற்கு பின்வரும் மூன்று ஆதாரங்கள் அடிப்படையாக உள்ளன:-
-
இது குர்ஆனின் சட்டமாகும்.
-
இது தான் மதினாவில் உள்ளவர்களின் பழக்கமாகும்.
-
இரண்டு ஹதீஸ்களின் ஆதாரங்கள் இதற்கு உள்ளது.
இம்ரான் இப்னு ஹூஸைன் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: – ‘நான் ஓதினால் (எனக்கு போட்டியாக) உங்களில் சிலர் ஓதுகிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. குர்ஆன் ஓதப்பட்டால் நீங்கள் அமைதியாக கேட்க வேண்டும்”
அபூ ஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –
ஒரு முறை நபி صلى الله عليه وسلم அவர்கள் தாம் சப்தமாக கிராஅத் ஓதும் தொழுகையை(த் தொழவைத்து) விட்டுத் திரும்பினார்கள், அப்போது (அங்கிருந்தவர்களை நோக்கி) சற்று முன் உங்களில் யார் என்னுடன் ஓதியவர்? என்று கேட்டார்கள், அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! ஆம்! (நான் தான்) என்றார்.
அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் நான் (எனது) ஓதலில் (உங்களால்) குழப்பம் விளைவிக்கப்படுவதாக கருதுகிறேன் என்றார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், இவ்வாறு கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்த (ஸஹாபாக்களாகிய) அவர்கள், நபி صلى الله عليه وسلم அவர்கள் சப்தமாக ஓதும் தொழுகைகளில் தாங்கள் ஓதுவதை தவிர்த்து கொண்டார்கள். (அபூதாவூத், முஅத்தா, திர்மிதீ.)
எனவே மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி, இமாம் உரத்தக் குரலில் ஓதும் தொழுகைகளான பஜ்ர், மஃரிப் மற்றும் இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத் போன்றவற்றில் இமாமுக்கு பின்னால் நின்று தொழுபவர்கள், இமாம் ஓதுவதை கவனமாக கேட்க வேண்டும்.
இமாம் மெதுவாக ஓதும் தொழுகைகளான லுஹர், அஸர், மஃரிபுடைய மூன்றாவது ரக்அத் மற்றும் இஷாவுடைய கடைசி இரண்டு ரக்அத்கள் ஆகிய தொழுகைகளில் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுபவர்களும் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓதவேண்டும் என்பதாகும்.
அல்லாஹவே முற்றிலும் அறிந்தவன்.