விலங்குகளின் உரிமைகள் குறித்து இஸ்லாம்
விலங்குகளும், பறவைகளும் நம்மைப் போன்ற இனங்களே!
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும”. (அல்-குர்ஆன் 6:38)
விலங்குகளும், பறவைகளும் கூட மனிதர்களைப் போலவே இறைவைனத் துதிக்கின்றன:
“(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.” (அல்-குர்ஆன் 24:41)
உயிருள்ள ஒவ்வொரு பிராணிக்கும் உதவினால் அதற்கும் நற்கூலி உண்டு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது.
அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்”
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள்,
“விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.”
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மிருகவதை தண்டணைக்குரிய குற்றம்:
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.”
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் விலங்குகள் மீதான கருணை:
ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு முறை ஒரு குதிரையின் மீது சவாரி செய்தார்கள். அக்குதிரை அவர்களுக்குச் சிரமத்தை அளித்தது. அதற்காக அவர்கள் அதனுடைய கடிவாளத்தைத் திரும்பத் திரும்பப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தார்கள். அதைக் கண்ட நபியவர்கள், ‘நீ அதனிடம் மென்மையாக நடந்துகொள்’ என்றார்கள். (முஸ்லிம் 2598)
ஒரு முறை நபியவர்கள் ஓர் ஒட்டகத்தைக் கடந்து சென்றார்கள். அது பசியால் வயிறு ஒட்டிப்போய் மெலிந்திருந்தது. அப்போது நபியவர்கள், “உங்கள் கால்நடைகள் குறித்து அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். அதற்குத் தீனி கொடுங்கள். அது நல்ல நிலையில் இருக்கும்போது சவாரி செய்யுங்கள்” என்றார்கள். (அபூதாவூது 2548)
ஒரு முறை மக்கள் சிலர் தங்கள் கால்நடைகள் மீது உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதை நபியவர்கள் பார்த்துவிட்டு, “இவற்றை நீங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து சவாரி செய்துகொள்ளுங்கள். பிறகு அதை விட்டுவிடுங்கள். உங்கள் தெருவோரங்களிலும் சந்தைகளிலும் அதனை இருக்கைகளாக ஆக்கி உட்கார்ந்துகொண்டு பேசாதீர்கள். சவாரி செய்யப்படும் பிராணி, அதன் மீது சவாரி செய்பவரைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கலாம். அவரை விட அது தன் இறைவனை நினைவு கூர்ந்து கொண்டிருக்கலாம்.” (முஸ்னது அஹ்மது 15629)
குறிப்பிட்ட தேவை ஏதுமின்றி ஒரு பறவையைப் பொழுதுபோக்குக்காக வேட்டையாடுவதை நபியவர்கள் தடை செய்தார்கள். “யாரேனும் ஒரு பறவையைக் காரணமின்றி கொன்றால், அது மறுமை நாளில் ‘அல்லாஹ்வே, இந்த மனிதன் தன் மகிழ்ச்சிக்காக என்னைக் கொன்றான். அவனது தேவைக்காக அல்ல’ என்று முறையிடும் எனக் கூறினார்கள். (சுனன் நசாயீ 4446)
ஒருவர் ஆடு ஒன்றை அறுப்பதற்காக அதனைக் கிடத்திவிட்டு கத்தியைப் பதப்படுத்திக்கொண்டிருந்தார். அதைக் கண்ட நபியவர்கள், “நீ அந்த ஆட்டை இரண்டு முறை கொல்ல விரும்புகிறாயா? அதனைக் கிடத்துவதற்கு முன்பே நீ கத்தியைப் பதப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்கள். (தபரானீ 4.53)