சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன?

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது பெரும்பாவங்களுல் ஒன்றாகும். இது சிறிய இணைவைப்பில் அடங்கும் எனவும் மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, சத்தியம் செய்வதாயின் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வேண்டும். (நூல்: திர்மிதீ : 1455 & முஸ்லீம் : 72 & நஸயீ : 3713)

ஆனால் இன்று நம்மவர்களில் பலரிடம் காணப்படும் குர்ஆன் மீது சத்தியம் செய்வது, காபாவின் மீது சத்தியம் செய்வது அல்லது வேறு ஏதேனும் பொருளின் மீது சத்தியம் செய்வது போன்ற சத்தியங்கள் எல்லாம் தடைசெய்யட்ட ஹராமான சத்தியங்களாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும் அல்லது வாய்மூடி இருக்கட்டும்” (புகாரி : 2679)

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது தவறுதலாக சத்தியம் செய்துவிட்டால், உடனே,

‘லா இலாஹ இல்லல்லாஹ்’

பொருள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை
(நூல் : புகாரி : 4860)

என்று கூற வேண்டும்.

மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்வதாக சத்தியம் செய்தால் அல்லது வீணான சத்தியம் செய்தால் அல்லது உறுதி அற்ற சத்தியம் செய்தால் அதை நிறைவேற்ற வேண்டியதில்லை! ஆனால், ஒன்றை உறுதிபடுத்துவதற்காக அல்லாஹ்வின் மீது செய்கின்ந சத்தியத்தை அவசியம் நிறைவேற்ற வேண்டும்.

சத்தியத்தை முறித்தால் பரிகாரம்:

சத்தியத்தை நாம் முறித்து விட்டால் அதற்கான பரிகாரம் கட்டாயம் செய்ய வேண்டும்! அவை,

1) 10 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது,
2) 10 ஏழைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்!
3) மேலே உள்ள இரண்டையும் செய்ய முடியவில்லை என்றால் நாம் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்!

“உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான்; எனினும், (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே, சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு, பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது, அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்; அல்லது, ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால், (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால் இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, அவன் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்” (அல்குர்ஆன் 5:89)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *