அறிஞர்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
“கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!” (12:76)
‘மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்களுக்கிடையில் இருந்த ஒரு சமயத்தில் ஒருவர் வந்தார். (மூஸா அவர்களே!) உம்மை விடச் சிறந்த அறிஞர் ஒருவரை நீர் அறிவீரா?’ எனக் கேட்டதற்கு மூஸா(அலை) அவர்கள் ‘இல்லை!’ என்றார்கள். அப்போது இறைவன் ‘ஏன் இல்லை? என்னுடைய அடியார் கிழ்று இருக்கிறார்களே!” என்று மூஸா (அலை) அவர்களுக்கு அறிவித்தான்” (புகாரி)
மேற்கண்ட திருமறை வசனம் மற்றும் நபிமொழி ஆகியவற்றின் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றது.
மனிதர்களின் சிந்தனைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே ஒரு அறிஞருக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் மற்றும் அவரது சிந்திக்கும் ஆற்றலுக்கேற்ப ஒரு விசயத்தைப் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் இருக்கும். அந்த வகையில், ஒரு விசயத்தில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பே!
எனவே ஒரு அறிஞரைப் பற்றித் தீர்ப்பளிப்பதற்கு முன் அவரது அகீதாவை உற்று நோக்க வேண்டும். அந்த அறிஞரின் அகீதா குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஏகத்துவத்தில் அமைந்திருக்குமேயானால், அவர் எந்தமொழி பேசுபவராக இருந்தாலும், எந்த மாநிலத்தைச் அல்லது தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரும் நம்முடைய மார்க்க சகோதரராவார் என்பதை நினைவில் இறுத்திக் கொண்டு, எக்காரணத்தைக் கொண்டும் அந்த அறிஞரின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற விதத்தில் அந்த அறிஞருக்கு எதிராக நம்முடைய விமர்சனங்கள் இருக்கக்கூடாது.
ஒரு அறிஞரின் கருத்து நமது கருத்துக்கு மாற்றமானதாக இருக்கின்றது என்பதற்காக அந்த அறிஞரை கேவலப்படுத்தும் வகையில் அவரைப்பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்வது நாம் போதிக்கும் குர்ஆன் ஹதீஸூக்கு மாற்றமானது என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை! இஸ்லாத்தின் உயிர்நாடியான ஏகத்துவ அடிப்படையிலான அகீதாவைத் தவிர்த்த ஏனைய சிறிய மஸாயில்களுக்கான தீர்வுகளில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயம் கருத்து வேறுபாடுகள் அதிகம் நிரம்பிய சமுதாயமாகவே இருக்கிறது. இத்தகைய கருத்து வேறுபாடுகள் நபி (ஸல்) அவர்கள் மறைவிற்கு பின்னர் சிறிது காலத்திலேயே துவக்கமாயிற்று என்பதையும், இவை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது என்பபதையும் இவைகளை அல்லாஹ் நாடினாலன்றி நம்மால் முடிவுக்கு கொண்டுவர இயலாது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். எனவே பாமர மக்களாகிய நாம் நடுநிலையோடு நடந்துக் கொள்வதே சாலசிறந்தது.
ஒவ்வொரு அறிஞரும் தத்தமது துறைகளிலே சிறந்து விளங்குகிறார்கள். ஆயினும் அவர்களும் மனிதர்கள் என்ற முறையில் அவர்களின் ஆய்வின் முடிவில், செயல்களில் தவறு இருக்கலாம். மனிதன் என்ற முறையிலே ஒருவரது ஆய்வில் தவறு இருக்குமானால் அதை கண்ணியமான முறையிலே சுட்டிக் காட்டலாம். ஒருவேளை அவரது ஆய்வு முடிவு சரியானதாக இருந்து சுட்டிக்காட்டுபவரின் ஆய்வு முடிவு கூட தவறாக இருக்கலாம். அவரது கூற்றில், கொள்கையில் தவறு இருக்குமானால் அதைச் சுட்டிக் காட்டத்தான் நமக்கு உரிமையிருக்கிறதே தவிர எக்காரணத்தைக் கொண்டும் அவரது கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கின்ற வகையில் அவரை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுவதும், விமர்சிப்பபதற்கும் நமக்கு எவ்வித உரிமையில்லை!
மேலும் தாம் கூறுவது மட்டும் தான் சரியானதாக இருக்கும்; மற்றவர்களின் முடிவு தவறானதாகத் தான் இருக்கும் என்ற தீர்க்கமான முடிவுக்கு வரக்கூடியவர்கள் திருமறையின் மேற்கண்ட 12:76 என்ற வசனத்தை நினைவில் கொள்ளவேண்டும். அதுபோல, நான் பின்பற்றும் அறிஞரே தலைசிறந்தவர்! அவரை மிஞ்சுவதற்கு உலகில் எவருமில்லை! அவரின் ஆய்வு முடிவுகள் எப்போதுமே சரியாகத் தான் இருக்கும்! – என்பது போன்ற சிந்தனைகள் நம் மனதில் தோன்றுமேயானால் அது ஆரோக்கியமான சிந்தனையாக இருக்காது. மேலும் இத்தகைய சிந்தனைகள் அவ்வறிஞரை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கும் வழிவகுக்கும். மனிதன் என்ற முறையில் அந்த அறிஞர் தவறு செய்திருந்தாலும் கூட அந்த அறிஞரின் மேல் உள்ள குருட்டு பக்தியினால் அந்த அறிஞரின் தவறுகள் குர்ஆன் ஹதீஸின் ஒளியில் சுட்டிக்காட்டப்பட்டாலும் அதையும் நிராகரிக்கின்ற துர்பாக்கிய நிலை ஏற்படும்.
ஒரு விசயத்தில் நாம் பின்பற்றும் ஒரு அறிஞருக்கும் மற்ற அறிஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்குமானால் இவ்விரண்டு கருத்துக்களில் எந்தக்கருத்து வலுவான குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்கிறது என்பதை ஆராயவேண்டுமே தவிர நம்முடைய அறிஞர் கூறுவது தான் சரியாக இருக்கும் என்ற குருட்டுத்தனமான முடிவுக்கும் வரக்கூடாது. எது சரி என நம்மால் தீர்மானிக்க இயலவில்லை எனில், குர்ஆன் மற்றும் நபிவழியைப் பின்பற்றக்கூடிய பிற அறிஞர்களின் கூற்றை நாம் ஆராய்ந்து இது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். இந்நிலையை நாம் அடைய வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நமது சிந்தனையைச் செலுத்தாமல் அவ்வட்டத்திற்கு வெளியில் வந்து திறந்த மனதுடன் குர்ஆன் ஹதீதுகளைப் பின்பற்றுகின்ற பல்வேறு அறிஞர்களின் கூற்றுகளை ஆராய முற்படவேண்டும். அப்போது தான் பலதரப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து சரியான தீர்வை எட்டுவதற்கு இயலும் இன்ஷா அல்லாஹ்.
அதுபோல ஒரு அறிஞரின் சில கொள்கைகளில், செயல்களில் நமக்கு உடன்பாடில்லை என்பதற்காக அவரின் அனைத்து செயல்களையும், கொள்கைகளையும் அவை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு உட்பட்ட நிலையில் இருப்பினும் அவற்றை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் சரியான செயல் அல்ல!
அதே நேரத்தில் அறிஞர் என்ற போர்வையிலே நடமாடும் போலிகளையும் நாம் அடையாளம் கண்டு அவர்களை முற்றாக ஒதுக்குவதோடு அவர்களின் நிஜமுகத்தை மக்களின் முன் தோலுரித்துக் காட்டுவதற்கும் நாம் தயங்கக்கூடாது. இவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது உங்களின் வினாவாக இருக்கலாம். அது மிக எளிதானது. திருமறையிலும், நபிவழி முறைகளிலும் மிகத்தெளிவாக ‘ஹராம்’ எனக் கூறப்பட்டுள்ளவற்றை இவர்கள் ‘ஹலால்’ எனக் கூறுவார்கள். அதற்காக திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸ்களுக்கு தம் மனம்போன போக்கில் விளக்கம் கூறமுற்படுவர். மேற்கத்தியர்களையும் இஸ்லாத்தின் விரோதிகளையும் திருப்திபடுத்துவதற்காக ஷரீஅத் சட்டங்களில் வளைந்து கொடுத்து தீர்ப்புக் கூறுவார்கள். இந்த நவீன முஃப்திகளின் நூதன ஃபத்வாக்களை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆய்வு செய்து இவர்களை அடையாளம் காணலாம்.
இறுதியாக, அறிஞர்களும் மனிதர்கள் தாம் என்பதையும், அவர்களிடமும் சராசரி மனிதர்களிடத்தில் ஏற்படும் தவறுகள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது என்பதையும் நாம் உணர வேண்டும். ஒரு அறிஞரிடத்தில் தவறைக் கண்டால் அதை கண்ணியமான முறையில் அவரிடமே நேரிடையாகவே (இமெயில், எஸ்.எம்.எஸ், தொலைபேசி, , இணைய தளம்…) நமது கருத்தை தெரிவிக்கலாம். அதைவிட்டுவிட்டு, “எனக்குப் பிடித்த அறிஞரின் தவறுகளை நீ பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தினால் உனக்குப் பிடித்த அறிஞரின் தவறுகளை நான் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்துவேன்” என்று செயல்படுவது எந்த வகையில் நியாயமானது சகோதரர்களே? இது தான் குர்ஆன், ஹதீஸ் நமக்குக் கற்றுத் தரும் பாடமா? இவ்வாறு எண்ணம் கொள்வது ஷைத்தானிய குணம் அல்லவா?
பதிலுக்குப் பதில் மாற்றுக்கருத்துடைய அறிஞரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரிலே அந்த அறிஞர்களின் தனிப்பட்டக் குறைகளை சுட்டிக்காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு அதன்மூலம் அவ்வறிஞர்களைப் பற்றிப் புறம்பேசுதல் என்ற பாவத்திற்கு அல்லவா நாம் தள்ளப்படுகின்றோம்! ஒரு அறிஞரைப் பற்றி தவறான கருத்துக்கள் மக்கள் மன்றத்தில் பரப்பப்படும் போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் புறக்கணிக்கக் கூடிய நிலை ஏற்படுமல்லவா? அதற்கு நாம் காரணமாக வேண்டுமா? இதை நாம் சிந்திக்க வேண்டாமா?
வல்ல இறைவன் நம் அனைவரையும் மார்க்க சகோதரர்களின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தாதவர்களாகவும், அறிஞர் பெருமக்களை மதிக்கின்றவர்களாகவும் ஆக்கியருள்வானாகவும்.
assalaamu alaikkum
I had watched this article (aringargalai…)in TMB presented
by Br.Burgan on same date.please conform that this article
is your own or copied from him?either the owner or director of this suvanathenral.com is suppose to be Br.Burgan?
plz conform.
Raja mohamed
kuwait
@Rajamohamed,
//either the owner or director of this suvanathenral.com is suppose to be Br.Burgan?//
உங்களின் யூகம் சரிதான் சகோதரரே! ஆனால் பெயரில் சிறிய மாற்றம். Correct name is Burhan not Burgan.
தங்களின் கருத்துக்காக அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாகவும்.