ஆயிஷா ரலி கழுத்து மாலை யும் தொழுகைக்கான தயம்மமும்

முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றில் அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) ‘பைதா’ என்னுமிடத்தை… அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்னுமிடத்தை… அடைந்தபோது, என்னுடைய கழுத்து மாலை ஒன்று (எங்கோ) அவிழ்ந்து விழுந்துவிட்டது. எனவே, அதைத் தேடுவதற்காக, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள். மக்களும் அவர்களுடன் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.

எனவே, மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து, ‘(உங்கள் மகள்) ஆயிஷா என்ன செய்தார் என்று நீங்கள் கவனிக்க மாட்டீர்களா? இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அவர்களுடன் மக்களையும் எந்த நீர் நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும், அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் ஆயிஷா தங்க வைத்துவிட்டார்” என்று கூறினார்கள்.

உடனே, அபூ பக்ர்(ரலி) என் மடியில் தலை வைத்துத் தூங்கி விட்டிருந்த நிலையில் வந்தார்கள். ‘நீ இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்களையும் எந்த நீர்நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும் அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் (தொடர்ந்து பயணிக்கவிடாமல்) தடுத்துவிட்டாயே!” என்று சொல்லி என்னைக் கண்டித்தார்கள். மேலும், அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னைத் தம் கரத்தால் என் இடுப்பில் குத்தலானார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடியில் படுத்துக் கொண்டிருந்தது தான் என்னை அசைய விடாமல் (அடி வாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை வரை தூங்கினார்கள். அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது, அல்லாஹ் ‘தயம்மும்’ உடைய (திருக்குர்ஆன் 04:43-ம்) வசனத்தை அருளினான்.

(இது குறித்து) உசைத் இப்னு ஹுளைர்(ரலி) ‘அபூ பக்ரின் குடும்பத்தாரே! (‘தயம்மும்’ என்ற சலுகையான) இது, உங்களால் (சமுதாயத்திற்குக் கிடைத்த) முதல் ‘பரக்கத்’ (அருள் வளம்) அல்ல. (இதற்கு முன்பும் பல நன்மைகள் உங்களின் மூலம் கிடைத்துள்ளன)” என்று கூறினார்கள். பிறகு, நான் சவாரி செய்து வந்த ஒட்டகத்தை (அது அமர்ந்திருந்த இடத்திலிருந்து) நாங்கள் எழுப்பியபோது, அதற்குக் கீழே (நான் தொலைத்துவிட்ட) கழுத்து மாலையை நாங்கள் கண்டோம்.

ஆதாரம்: புகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed