துற்குறி, சகுனம், நல்ல நேரம், சாஸ்திரம் பார்த்தல்
ஜுல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையம், சவூதி அரேபியா, வெளியிட்ட,
‘மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்!’ எச்சரிக்கை! என்ற நூலில் இருந்து…
நூலாசிரியர்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
துற்குறி, சகுனம், நல்ல நேரம், சாஸ்திரம் பார்த்தல்
துற்குறி என்பது அபசகுனமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“அவர்களுக்கு ஒரு நன்மை வந்து விட்டால் இது எங்களுக்கு வரவேண்டியதுதான் என்று கூறுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டாலோ மூஸாவையும் அவர்களுடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாகக் கருதுவார்கள்” (7:131)
அரபுகள் பயணம் மேற்கொள்ள அல்லது வேறு ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் ஒரு பறவையைப் பிடித்து பறக்க விடுவார்கள். அது வலது பக்கமாகப் பறந்தால் அதை நற்குறியாகக் கருதி அந்த காரியத்தைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அது இடது பக்கமாகப் பறந்தால் அதைத் துற்குறியாக – அபசகுனமாகக் கருதி செய்ய நினைத்த காரியத்தை விட்டு விடுவார்கள்.
இவ்வாறு செய்வதின் சட்ட நிலையை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
‘சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும்’
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: திர்மிதி, அபுதாவூத்
தடுக்கப்பட்டதும் தவ்ஹீதின் நிறைநிலைக்கு எதிரானதுமான இத்தகைய நம்பிக்கையில் பின்வருபவையும் அடங்கும்:
- சில மாதங்களையும் சில நாட்களையும் பீடையாகக் கருதுவது. உதாரணமாக,
- ஸபர் மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்களைத் தவிர்த்தல்,
- ஒவ்வொரு மாதத்திலும் கடைசிப் புதன் நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய நாள் என்று நம்புதல்.
- அதுபோல சில எண்களை அபசகுனமாகக் கருதுவது.
- உதாரணமாக 9,13, 103
- சில பெயர்களை அல்லது சில நபர்களை அபசகுனமாகக் கருதுவது. உதாரணமாக,
- ஒருவர் தன் கடையைத் திறக்கச் செல்லும்போது வழியில் ஒரு குருடரைக் கண்டால் அவரைத் துற்குறியாகக் கருதி திரும்பி விடுதல்.
ஆக இப்படிப்பட்ட அனைத்து நம்பிக்கைகளும் ஹராமான, ஷிர்க்கான காரியங்களாகும். இவ்வாறு செய்வோரை விட்டும் நபி (ஸல்) அவர்கள் விலகிக் கொண்டனர்.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அறிவிக்கிறார்கள்:
- ‘ஒருவர் சகுனம் பார்ப்பாரெனில் அல்லது
- அவருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதெனில்,
- ஒருவர் ஜோசியம் பார்ப்பாரெனில் அல்லது
- அவருக்காக ஜோசியம் பார்க்கப்படுகிறதெனில்,
- ஒருவர் சூனியம் செய்தாரெனில் அல்லது
- அவருக்காக சூனியம் செய்யப்படுகிறதெனில்
இப்படிப்பட்டவர்கள் நம்மைச் சேர்ந்தோர் அல்லர்’
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானி)
இந்தச் செயல்களில் ஒன்றை யாரேனும் செய்து விட்டால் பின்வரும் ஹதீஸில் வந்துள்ளது போல அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
‘ஒருவர் சகுனம் பார்த்து தான் நாடிய காரியத்தைச் செய்யாது பின்வாங்கினால் அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்’
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும்,
‘அல்லாஹ்வின் தூதரே! அதற்குப் பரிகாரம் என்ன?’
எனத் தோழர்கள் வினவினர்.
“அல்லாஹும்ம லா கைர இல்லா கைருக வலா தைர இல்லா தைருக வலா இலாஹ கைருக”
என்று கூறுவதாகும்’
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), (அஹ்மத்)
(பொருள்: இறைவா! நீ வழங்கும் நன்மையைத் தவிர வேறு எதுவும் நன்மையாக இருக்க முடியாது. நீ ஏற்படுத்தும் சகுனத்தைத் தவிர வேறு எதுவும் தீய சகுனமாக இருக்க முடியாது. வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது)
துற்சகுனம் பார்ப்பது மனிதர்களின் இயல்பாகும். அது அதிகரிக்கவும் செய்யும், குறையவும் செய்யும். இதற்குரிய முக்கியமான சிகிச்சையாவது,
‘தவக்குல் – அல்லாஹ்வையே முழுவதுமாகச் சார்ந்திருத்தல்’ எனும் பண்பாகும்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியது போல:
‘நம்மில் எவருக்கும் இத்தகைய எண்ணம் ஏற்படாமலில்லை. எனினும் தவக்குல் – அல்லாஹ்வையே முழுவதுமாகச் சார்ந்திருப்பதன் மூலம் அல்லாஹ் அதனைப் போக்கி விடுகிறான்’ (அபுதாவூத்)