ஒரு நிமிடம் – கவிதை
தூண்களின்றி உயர்த்தப்பட்ட வானம்,
பிடிமானமின்றி சுழழும் பூமி,
பூமி அசைந்து விடாமலிருக்க முளைகளாக அறையப்பட்ட மலைகள்,
மண்ணின் செழிப்பை ஊக்குவிக்கும் மழை,
உயிர் நாடியான காற்று,
பச்சைப் பசேலென்ற போர்வையை பூமிக்குப் போர்த்திக் கொண்டிருக்கும் ஒளிக் கற்றைகள்…
இப்படி இறைவனின் படைப்பில் அனைத்துமே சிந்தனையைத் தூண்டிக் கொண்டிருக்கும் அதிசயப் படைப்புக்களாகும். இவை யாவும் சர்வசாதாரனமாக எம் கண்முன்னே காட்சி தருவதாலும், அவற்றின் கொடைகளை நாளாந்தம் அனுபவிப்பதாலும் அதன் மகிமையை நாம் உணர மறந்து விட்டோம்.
இறைவனின் படைப்பில் யாவுமே காரண காரியத்துடனேயே படைக்கப்பட்டுள்ளன. அணுத்துகள்கள் முதல் அண்டம் வரை யாவுமே ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்படையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏன் மனிதனின் உருவாக்கமான சாதாரன செருப்புக்குக் கூட ஒரு நோக்கம் இருக்கத்தான் செய்கின்றது.
உலகின் அதிபதியான உயர்படைப்பான மனிதன் மட்டும் காரணமின்றி படைக்கப் பட்டிருப்பானா? இல்லை அவன் மட்டும் இறைவனின் படைப்பில் விதிவிலக்கா? பதில் காண வேண்டும். பதில் கண்டு செயலாற்றவே பகுத்தறிவு கூட எமக்குத் தரப்பட்டுள்ளது.
மரணிக்கு முன் கீழ்காணும் இச்சிறு கேள்விகளுக்கேனும் ஒரு முறை விடை கண்டு விட்டு உன் இறுதி மூச்சை விடு.
எம்மைப் படைத்தவன் யார்?
பல கடவுளர்கள் இருக்கிறார்கள் என்பது சாத்தியமானதா?
நாம் எதற்காகப் படைக்கப் பட்டோம்?
உண்மையான நீதி இவ்வுலகில் சாத்தியப் படாதபோது அந்நீதி எங்கு கிடைக்கும்?
நம் இறுதி முடிவு என்னவாயிருக்கும்?
நிம்மதியற்ற இம்மை முடிவடைந்தால், நிம்மதியைத் தரும் மறுமை என்று ஒன்று இருக்குமா?
நரகம், சுவர்க்கம் என்பனவற்றின் யதார்த்த நிலை யாது?
சுவனத்திற்கான, நித்திய ஜீவனுக்கான உண்மையான வழி எது?
இது போன்ற அநேக கேள்விகள் நம் மனக்கண் முன்னே நிழலாடுகின்றன. உறங்கிக் கொண்டிருக்கும் நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பி நாம் தான் விடை காண வேண்டும். நோக்கமற்ற வாழ்க்கை அழிவிற்கே இட்டுச் செல்லும்.
சிறிய தவறு இழைத்தாலும் நம் மேலதிகாரி நம்மைப் புரட்டி எடுக்கும் போது, படைக்கப்பட்ட நோக்கத்தையே நாம் மறந்து வாழ்ந்து விட்டு மரணித்தால் நம்மைப் படைத்தவன் சும்மா விட்டுவிடுவானா?
உனக்குள் சுற்றிச் சுழலும் இக்கேள்விகளுக்கு நீயே விடை காண முயறிச்சி எடு!