குர்பானி கொடுப்பவர் பேணவேண்டிய ஒழுங்குகள்
குர்பானி கொடுக்க எண்ணியிருப்பவர் துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களில் தலைமுடியையோ நகங்களையோ களைவது கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி); ஆதாரம்: நஸயீ (4361)
“(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம்.”
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி); ஆதாரம்: முஸ்லிம் 3997
“தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம்.”
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி); ஆதாரம்: முஸ்லிம் 3998
ஒருவருக்கு துல்ஹஜ் மாதம் பிறந்து முதல் பத்து நாட்களுக்குள் சில நாட்கள் கடந்த நிலையில் இடையில் குர்பானி கொடுப்பதற்கு வசதி வாய்ப்புகள் ஏற்படின் அவர் தான் குர்பானி கொடுப்பதாக நிய்யத் வைத்த நிமிடம் முதல் மேற்கண்ட சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
குடும்பத்தின் தலைவர் தன்னுடைய குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பதால் அவர் தான் மேற்கண்ட சட்டங்களுக்கு உட்பட்டவராகின்றார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினர்களுக்கு கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால், அது போன்ற கட்டளைகளைப் பார்க்க முடியவில்லை!
வேண்டுமென்றேயல்லாமல் தானாக ஒருவரின் முடி உதிர்வதாலோ நகம் கழன்று விழுவதாலே தவறேதும் இல்லை! அதுபோலவே, ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக முடி, நகம் போன்றவற்றை நீக்குவதற்கு அவசியம் ஏற்பட்டால் அதனின்றும் தவறேதும் இல்லை!
இன்னும் சிலருக்கு நகம் ஒடிந்து தொங்கிக்கொண்டு அதில் வலியை ஏற்படுத்தி சிரமத்திற்குள்ளாக்கலாம். அந்த சிரமத்திலிருந்து விடுபடவும் தொல்லை தரும் அந்த ஒடிந்த நகத்தை நீக்குவதிலும் தவறு இல்லை!
ஏனெனில், ஒருவரின் சக்திக்கு அப்பாற்பட்டு எந்த உயிருக்கும் அல்லாஹ் சிரமம் ஏற்படுத்த மாட்டான்.
அல்லாஹ் அஃலம்.