தியாகச் செம்மல் இப்ராஹீம் நபி அவர்களின் பிரார்த்தனைகள்

ஏக இறைக் கொள்கையின் பால் தேட்டம்!

தான் வாழ்ந்த சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த பல கடவுள் கொள்கைகளையும், விக்கிரக ஆராதனைகளையும் மிகக் கடுமையாக எதிர்த்த நபி இப்ராஹீம் (அலை) எல்லாம் வல்ல இறைவன், ஒருவனாகவே இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள்.

சிறுபிராயத்தில் இருக்கும் போதே தன்னையும் இந்த உலக மக்களையும் படைத்துப் பரிபாலிக்கும் உண்மையான கடவுள் யார்? என்ற ஆராய்ச்சியின் முடிவில் நபி இப்ராஹீம் கேட்ட பிரார்த்தனை.

“அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.

ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; ‘இதுதான் என் இறைவன்!’ என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், ‘நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்’ என்று சொன்னார்.

பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், ‘இதுவே என் இறைவன்’ என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், ‘என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்’ என்று கூறினார்.

பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது ‘இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது’ என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், ‘என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்’ என்று கூறினார்.

‘வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக – (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 6:75-79)

குழந்தை பாக்கியம் வேண்டி செய்த பிரார்த்தனை!

குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாமல் பல ஆண்டுகள் இன்னல் பட்ட நபி இப்ராஹீம் (அலை) எப்படியாவது ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என்று யோசிக்காமல், ஸாலிஹான சிறந்த குழந்தையாக எனது குழந்தை இருக்க வேண்டும் என்று குழந்தை பிறப்பதற்கு முன்னரே பிரார்த்தித்தார்கள்.

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்)” (அல்-குர்ஆன் 37:100)

தள்ளாடும் முதுமையை அடைந்த போதிலும் அல்லாலஹ்வின் அருளில் நிராசை அடைந்திடாது தொடர்ந்தும் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் அவர்களது பிரார்த்ததைனையை ஏற்றுக் கொண்டு மலக்குமார்களை அனுப்பி ஒரு ஆண்குழந்தை கிடைக்கும் என்று நன்மாராயம் கூறினான்.

“எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.” (அல்-குர்ஆன் 37:101)

சந்ததியினருக்காவும் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனைகள்!

அல்லாஹ் நபி இப்ராஹீமை மனிதர்களுக்கு தலைவராக நியமிப்பதாக கூறிய நேரத்தில், ‘யா அல்லாஹ் எனது சந்தியில் இருந்தும் தலைவரை உருவாக்குவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.

“இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; ‘நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்’ என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம்; ‘என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)’ எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.” (அல்-குர்ஆன் 2:124)

இந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட எல்லாம் வல்ல அல்லாஹ், அகிலத்தாருக்கும் நேர்வழி காட்டக் கூடிய தலைவராக நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நபி இப்ராஹீமுடைய மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்தியில் வரச் செய்தான்.

மக்கா மாநகரின் செழுமைக்காக இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனைகள்!

மக்கா நகரை பாதுகாக்கப்பட்ட நகராகவும் அந்த மக்களுக்கு கணிவர்க்கங்களை கொண்டு உணவளிக்குமாறும் பிரார்த்தித்தார்கள்!

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், தனது அன்பு மணைவி ஹாஜரையும் தனது அருமை மகனார் இஸ்மாயீலையும் அல்லாஹ்வின் கட்டளையோடு அவனது ஆலயமாகிய கஃபாவின் நழலில் விட்டுவிட்டு, பின்வருமாறு பிரார்த்தித்தார்கள் என்று அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

“இப்ராஹீம்; ‘இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக’ என்று கூறினார்” (அல்-குர்ஆன் 2:126)

சூரத்துல் இப்ராஹீம் என்ற அத்தியாயத்தின் 35வது வசனத்தில்,

“யா அல்லாஹ் இந்த தேசத்தை அபயமளிக்கப்பட்ட பூமியாக ஆக்குவாயாக!”

என்று பிரார்த்தித்து விட்டு அதே வசனத்தில் மக்களின் பாதுகாப்பு பறிக்கப்படுவதற்கான காரணத்தையும் கூறினார்கள். அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படும் நிலையே மேற்படி பாதுகாப்பான சூழ்நிலையை இல்லாமல் ஆக்கிவிடும் என்பதனை நபி இப்ராஹீம் சரிவர அறிந்து வைத்திருந்தார்கள்.

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ

“நினைவு கூறுங்கள்! ‘என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!’ என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).” (அல்-குர்ஆன் 14:35)

சிலை வணக்கத்திற்கு எதிராகவும் பிரார்த்தனை செய்தார்கள்!

சிலை வணக்கம் தான் மக்கள் அதிகமானவர்கள் வழிகெடுவதற்கு காரணம் என்பதனை நபி இப்ராஹீம் (அலை) பின்வருமாறு கூறினார்கள்.

“(‘என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.'” (அல்-குர்ஆன் 14:36)

நபி இப்ராஹீமை (அலை) ஏற்றுக் கொள்ளும் யூத, கிறிஸ்தவர்கள், நபி இப்ராஹீமுடைய (அலை) போதனைகளை சரிவர பின்பற்றினால் ஏகத்துவவாதிகளாக மாறி அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட ஒரு வாழ்க்கையை தேர்வு செய்து ஈருலகிலும் வெற்றி பெற்றிடலாம்.

சிலைகளை நிற்க வைத்து வணங்குவது மாத்திரம் தான் பெரும்பாவம் என்று விளங்கி வைத்திரும் சில பெயரளவு முஸ்லிம்கள், “ஜியாரத்துகள்” என்ற பெயரில் படுக்கவைத்து வணங்கிக் கொண்டு “தாங்களும் முஸ்லிம்கள்” என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

உண்மையில் நபி இப்ராஹீமுடைய (அலை) வார்த்தைகளை இவர்கள் சரிவர சிந்திப்பார்களேயானால், சிலைவணக்கத்தின் எல்ல வடிவங்களையும் நமது முஸ்லிம் சமுதாயத்தை விட்டும் துடைத்தெரிய முடியும்.

குடும்பத்தினரின் நலனுக்காவும் பிரார்த்தித்தார்கள்!

தனது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரார்தித்த நபி இப்ராஹீம் (அலை) தொடர்ந்து பட்டினியை போக்கிடவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விம் இரு கரம் ஏந்தினார்கள்.

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! – தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!'” (அல்-குர்ஆன் 14:37)

புனித கஃபாவின் புனர்நிர்மானப் பணிகளை பூர்த்தி செய்துவிட்டு இப்ராஹீம் (அலை) செய்ய பிரார்தித்தனைகள்:

அந்தப் பணியை ஏற்றுக் கொள்ளுமாறும் தன்னையும் தனது மகனையும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக ஆக்குமாறும், தமது சந்ததிகளையும் முஸ்லிம்களாக ஆக்குமாறும், தனது சந்திகளில் இருந்து ஒரு நபியை அனுப்புமாறும் பிரார்த்தித்தார்கள்.

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

“இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, ‘எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்’ (என்று கூறினர்).”

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

‘எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக. எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக. நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக. நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.’

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ۚ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

“‘எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.'” (அல்-குர்ஆன் 2:127-129)

மரணித்தவர்களை எப்படி உயிர் கொடுத்து எழுப்புகின்றாய்? அதனை எனக்கு காண்பிப்பாயாக! என்று நபி இப்ராஹீம் (அலை) அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

“இன்னும், இப்ராஹீம்; ‘என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!’ எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா?’ எனக் கேட்டான்; ‘மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)’ என்று கூறினார்; ‘(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்;. பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்’ என்று (அல்லாஹ்) கூறினான்.” (அல்-குர்ஆன் 2:260)

தொழுகை நிலைநிறுத்துவோராக ஆக்குவாயாக!

சூரத்துல் இப்ராஹீமில் கேட்ட பிரார்த்தனைகளை அல்லாஹ் நமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.

“என்னையும் எனது சந்ததியினரையும் தொழுகை நிலைநிறுத்துவோராக ஆக்குவாயாக என்றும் என்னையும் எனது பெற்றோரையும் அனைத்து நம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக”

என்றும் பிரார்த்தித்தார்கள்.

“‘எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.’

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது! அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.”

எடுத்த எடுப்பில் அதைத்தா! இதைத்தா! என்று பிரார்த்திக்காமல் மேற்படி அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு தனது பிரார்த்தனையை முன் வைத்தார்கள்.

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

“(‘என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!’

பெற்றோரையும் அனைத்து நம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக!”

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

“‘எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக’ (என்று பிரார்த்தித்தார்).” (அல்-குர்ஆன் 14:38-41)

அதிகமான பிரார்த்தனைகளை கேட்க கூடிய நம்மில் பலர், ‘எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!’

என்று பிரார்த்திப்பது குறைவு. ஆனால் நபி இப்ராஹீம் (அலை)

‘யா அல்லாஹ் எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!’

என்றும் பிரார்த்தித்தார்கள்.

தனது தந்தையின் நேர்வழிக்காக பிரார்த்தித்தார்கள்!

“(அதற்கு இப்ராஹீம்) ‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்’ என்று கூறினார்.

நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் நிர்ப்பாக்கியவானாகாமல் இருக்கப் போதும்’ (என்றார்).” (அல்-குர்ஆன் 19:47,48)

தனது சந்ததியினருக்காக கேட்ட பிரார்த்தனை!

“(‘என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!'” (அல்-குர்ஆன் 14:40)

உலக மக்களுக்காக கேட்ட பிரார்த்தனை!

“‘எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக’ (என்று பிரார்த்தித்தார்).” (அல்-குர்ஆன் 14:41)

நமது பிரார்த்தனைகளில் நமக்கும் நமது குடும்பத்திற்கும் மாத்திரம் கேட்பதோடு சுருக்கிக் கொள்ளாமல் மனித குலத்தின் நேர்வழிக்காவும் பிரார்த்திப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்பதை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகளில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நமக்கு மட்டும் எல்லாம் கிடைத்தால் போதும் என்ற சுயநலத்திற்கு அப்பால் நாம் வாழும் தேசம், நம்மைச் சுற்றி வாழும் மக்களின் நலனுக்காவும் பிரார்த்திப்பது இன்றியைமையாதது.

ஏகத்துவச் செம்மல் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முன்மாதிரியிருக்கிறது!

ஏகத்துவத்திற்கு எதிரான இணைவைப்பை விட்டும் முழுமையாக நீங்கியிருப்பதாக கூறி நபி இப்ராஹீம் (அலை) கடைசியாக செய்த பிரார்த்தனையை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுன்றான்.

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

“இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. தம் சமூகத்தாரிடம் அவர்கள்,

‘உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம். அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன’

என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி,

‘அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது. ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்’

எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது. அன்றியும், அவர் கூறினார்);

‘எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது.'” (அல்-குர்ஆன் 60:4)

நேர்வழியில் நிலைத்திருப்பதற்காகவும் பிரார்த்தித்த இப்ராஹீம் (அலை)!

உலகம் சார்ந்த விடயங்களில் மாத்திரம் நமது பிரார்த்தனைகள் சுருங்கி விடக் கூடாது என்பதற்கும் நபி இப்ராஹீமுடைய வாழ்க்கையில் நமக்கு படிப்பினை இருப்பதை அவதானிக்காலாம்.

நமது நேர்வழிக்காவும், கிடைத்த நேர்வழியில் இருந்து வழிதவறக் கூடிய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் அதிகமதிகம் பிரார்த்திப்பது கட்டாயமாகும்.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

“‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!’ (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)” (அல்-குர்ஆன் 3:8)

எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி
அல் கப்ஜி, சவுதி அரேபியா.
01/11/2018

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *