எல்லாம் இறைவனே என்ற அத்வைதமே சூஃபித்துவ தரீக்காக்களின் கோட்பாடு
“மக்களை ஆத்மீகப் பாதையில் பயிற்றுவிக்கும் பள்ளி” எனும் போலி பெயரில் மக்களிடையே அறிமுகமாகியிருக்கும் சூபித்துவ அத்வைத தத்துவம் எந்தளவுக்கு இஸ்லாத்தைத் தகர்க்கும் விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வது அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்டிருக்கும் உண்மை முஃமின்களுக்கு அவசியமாகும்!
“முன்னோர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம்” என்ற பெயரிலே குருட்டுத் தனமாக ‘அவர்கள் அறியாமையில் உழன்ற அந்த வழிகேடுகளிலே நானும் உழல்வேன்‘ என்று அடிம்பிடிக்காமல் இந்த தரீக்காக்கள் ஒருவனை எப்படியெல்லாம் வழிகெடுத்து நிரந்தர நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை கொஞ்சம் பொறுமையுடனும் நிதானத்துடனும் படித்துப்பாருங்கள்!
சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதபடி எந்தளவுக்கு மிக்க தந்திரமாக இந்த நச்சுக் கருத்துக்களை மக்கள் இதயங்களில் புகுத்தியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் எந்த அளவுக்கு மார்க்கத்தில் புகுந்து விளையாடியிருக்கின்றார்கள் என்ற ஆதங்கமாகவும் இருக்கிறது! இருக்கின்றது. எனவே இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
“எல்லாம் அவனே!” எனும் தத்துவமே சூபித்துவத்தின் அடிநாதமாகும். சூபித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த விசயத்தில் உடன்பட்டுக் காணப்படுகின்றன. ஆனால் இதை ஆரம்பப் படித்தர மக்களுக்குச் சொல்வது கிடையாது.
தமிழகத்தில் உள்ள ஷாதுலிய்யா, சிஷ்திய்யா, காதிரிய்யா போன்ற அனைத்துத் தரீக்காக்களுமே இவ்வத்வைதத்தை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அத்தரீக்காக்களின் மௌலீது நூல்களில் கூட இவை மலிந்து காணப்படுகின்றன. இந்த அனைத்துத் தரீக்காக்களும் முன்னைய சூபித்துவவாதிகளால் எழுதப்பட்ட ஒரே வித நூல்களிலிருந்தே தமது சரக்குகளை எடுத்திருக்கின்றன. இப்போதும் எடுக்கின்றன. இந்த தரீக்காக்களில் பெயர்கள் சமீபத்திய சூபித்துவ வாதிகளினாலேயே தோற்றுவிக்கப்பட்டன.
“எல்லாம் அவனே!” எனும் கருத்தில் சில முற்கால சூபிகள் சொல்லி வைத்த தத்துவங்கள்? இல்லை! வழிகேடுகள் சிலதைப் பார்ப்போம்.
பிரபலசூபியான கஸ்ஸாலி இமாம் அவர்கள் திருவுளமாகின்றார்கள்??..
தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களாக வகைப்படுத்தலாம்!
முதலாவது: நாவினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது,
இரண்டாவது: அதன் அர்த்தத்தை கல்பால் இதயத்தால் உண்மைப் படுத்துவது, இது பாமரமக்களின் படிநிலையாகும்,
மூன்றாவது: இறை ஒளியினால் கஷ்புடைய ஞானத்தைக் காண்பதாகும். இது இறைநெருக்கம் பெற்றவர்களின் நிலையாகம்,
நான்காவது: பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத்தவிர எதையுமே காணாத நிலையாகும். தன்னையும் அவர் கடவுளாகவே காண்பார். இந்நிலைக்கு சூபியாக்களிடத்தில் பனாஃ — இறைவனுடன் சங்கமித்து விடுதல் என்று கூறப்படும். இந்த நிலையை அடைந்தவர் தான் உண்மையான தவ்ஹீத் வாதியாவார்.
(இஹ்யா உலூமுத்தீன் . 245-4 ம் பாகம்)
இவ்வாறு கஸ்ஸாலி கூறி விட்டு பின்வருமாறு வினாவெழுப்புகின்றார்.
ஒருவன் வானம் பூமி கடல், கரை, பறவை, மிருகம் இப்படிப் பல்வேறு படைப்புக்களைக் காணும் நிலையில் எங்ஙனம் அனைத்தையும் ஒன்றாக ஒரே கடவுளாகக் காண்பது சாத்தியமாகுமென? நீ வினவலாம்! எனினும் இது கஸ்புடைய ஞானத்தின் உச்ச கட்ட நிலையால் ஏற்படுவதாகும்! இந்த ஞானத்தின் ரகசியத்தை எழுத்துக்களால் வடிக்க முடியாது! ரப்பின் இந்த ரகசியத்தை பகிரங்கப்படுத்துவது குப்ராகுமென ஆரிபீன்கள் கூறுவார்கள்.
(அதே நூல் அதே பக்கம்)
மன்ஸூர் அல் ஹல்லாஜி என்பவன் வழி கெட்ட சூபிகளில் ஒருவன். இவனது காலத்தில் தீனூர் எனும் ஊரில் ஒருவர் மடமொன்றில் தனிமையில் இருந்து வந்தார். இவரது மடத்தைச் சிலர் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்ட போது அங்கிருந்து கடிதமொன்றைக் கண்டெடுத்தனர். அக்கடிதத்தில்,
‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான மன்ஸூர் அல்கல்லாஜியிடமிருந்து இன்னாருக்கு’
என்று எழுதப்பட்டிருந்தது. இக்கடிதம் அரசரிடம் சமர்ப்பிக்கப்பட அவர் ஹல்லாஜியை வரவழைத்து, ‘இதுவரை நீ நபியென்றுதான் வாதாடி வந்தாய்! இப்போது நீதான் கடவுள் என்று கூறத் துணிந்து விட்டாயா?’
எனக் கேட்க, “நான் அப்படிக் கூறவில்லை! எனினும் ‘அனைவரும் கடவுள்’ என்பதே எங்கள் தத்துவம்! இக்கடிதம் எனக்குரியதே! அதே வேளை ‘இதை எழுதியவனும் அல்லாஹ்வே” என்றான்.
(இக்கொள்கை காரணமாகவே அவனுக்கு இஸ்லாமிய அரசால் மரணதண்டனை விதிக்கப்பட்டது)
(தல்பீஸூ இப்லீஸ் பக்கம் 171)
மற்றுமொரு சூபித்துவ வழிகேடனாகிய இப்னு அரபி என்பவன் ஒரு கவிதையில் கூறுகின்றான்:
மனிதனே கடவுள்! கடவுளே மனிதன்! இப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது?
நீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும் இரண்டுமே ஒன்றுதான்! இப்படியிருக்க யார் யாரை வணங்குவது?
(அல்புதூஹாத்துல் மக்கிய்யா 213)
இப்னு அரபியின் மற்றுமொரு உளறலைப் பாருங்கள்:
ஒரு மனிதன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதும் அல்லாஹ்வுடனேயே உறவு கொள்கின்றான்! நான் அவனை அல்லாஹ்வை வணங்குகின்றேன்! அவன் என்னை வணங்குகின்றான்!
(ஸூபிய்யா 17)
அபூ யஸித் அல் புஸ்தாமி எனும் மூடச் சூபி பின்வருமாறு பிரார்த்திக்கின்றான்:
‘உனது வஹ்தானியத்தை எனக்கும் தருவாயாக! உனது ரப்பு எனும் கிரீடத்தை எனக்கும் அணிவிப்பாயாக! என்னையும் உனது ஒருமைத்துவத்துடன் சேர்த்துக் கொள்வாயாக! என்னை மக்கள் கண்டால் உன்னைக் கண்டதாகவே சொல்ல வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்றான்!
நவூதுபில்லாஹி மின்ஹா!
இந்த சூஃபித்துவ வழிகேடர்களின் பைத்தியக்காரத்தனமான, ஷைத்தானிய உளறல்களை விட்டும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிகப்பரிசுத்தமானவன்! இந்த முஷ்ரிக்குகளின் இணைவைப்பை விட்டும் அவன் மிகத் தூயவன்!
இது போன்ற நச்சுக் கருத்துள்ள சிந்தனைகள் விசயத்தில் அனைத்து சூபிகளுமே ஒருமித்த கருத்தில் இருக்கின்றனர். சூபித்துவ நூல்களில் இவை நிறைந்து காணப்படுகின்றன.
அல்-குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவும் கூறுவது என்னவென்றால் அல்லாஹ்வே அகிலங்கள் மற்றும் அதிலுள்ளவைகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன்!
எனவே ‘படைப்பாளன் வேறு! படைப்பினங்கள் என்பது வேறு!’ என்பது தான் இஸ்லாமிய அகீதா!
‘படைத்தவனும் படைப்பினமும் ஒன்று தான்’ என்று கூறுவது வழிகெட்ட சூஃபிகளின் அகீதா!
அல்லாஹ் கூறுகின்றான்!
“எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.” (அல்-குர்ஆன் 6:1)
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (அல்-குர்ஆன் 2:21)
எனவே அன்பு சகோதரர்களே! இதுநாள் வரையில் நாம் அறியாமையில் காலம் காலமாக நம் முன்னோர்களின் வழிமுறை எனப் பின்பற்றி வந்த வழிகேடுகளான ஷாதுலிய்யா, காதிரிய்யா மற்றும் ஷிஸ்திய்யா போன்ற தரீக்காக்களின் நாசத்தை விட்டும் உடனடியாக தவிர்ந்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழிமுறையில் பின்பற்றி நடக்க வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்! ஆமீன்!
ஆதாரம்: சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
‘சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும்’ என்ற எ.சி. முஹம்மத் ஜலீல் (மதனி) அவர்களால் எழுதப்பட்ட நூல் தமிழுலகில் பிரபல்யமானது என்பது அறிந்த விடயம். மேற்படி நூலில் இஹ்யா உலூமித்தீனில் 1-254 பக்கத்தில் வரக்கூடிய, “அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார் . ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே , அவனை நோக்கியே , அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே” என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் அரபு மொழிபெயர்ப்பில் அதற்கான பக்கத்தில் குறித்த வாசகம் இல்லை என்று ஒரு சகோதரர் கூறினார். எனவே குறித்த வாசகத்திற்கான புத்தகத்தின் பிரதியை சமர்பிக்க முடியுமா?