எதற்கு முன்னுரிமை?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும் உரித்தானது!
‘யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு’ என்று சுயநலத்தின் மொத்த உருவாய் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்!
தர்ஹா, சமாதி வழிபாடுகள், தட்டு, தாயத்து என்று இணை வைப்பின் உச்சத்தில் உழன்றுக் கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களிடையே ஏகத்துவம் வீறுகொண்டு எழுவதைப் பொறுக்காத ஷைத்தானின் சதிவலையின் காரணமாக ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்’ என்று உறுதிமொழி ஏற்றிருக்கின்ற ஏகத்துவவாதிகளுக்கிடையில் இருக்கும் கருத்து முரண்பாடுகள் மறுபுறம்,
‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல் குர்ஆன் ஹதீஸைப் போதிப்பவர்களுக்கிடையில் இருக்கும் இந்த கருத்து முரண்பாடுகளினால் குதூகலமடைந்த குராஃபிகளும், ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களும் வீறுகொண்டெழுந்திருக்கின்றனர்.
ஷிர்க் செய்பவர்களிடமும், இணை வைப்பவர்களிடமும் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிட்டு ‘சுன்னத் ஜமாஅத் போர்வையில் உலாவரும் சூஃபிகளிடமும் ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் போதெல்லாம் அவர்கள் நமக்கு எதிராக எடுத்துவைக்கும் ஆயுதங்கள் ஏகத்துவ சொந்தங்களாகிய நாம் நமக்கிடையே பகிர்ந்துக்கொண்டிருக்கும் கருத்துப்பரிமாற்றங்களைத் தான்!
வழிகேடர்களைப் பொருத்தவரையில் ஏகத்துவப் பிரச்சாரங்கள் மக்களிடையே சென்றடையாமல் தடுக்கவேண்டும்! அதற்காக அவர்கள் எந்த நிலைக்கும் கீழிறங்கி செல்லக்கூடியவர்கள்!
எனதருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
நாம் ஒவ்வொருவரும் நம்மீது சுமத்தப்பட்டடுள்ள பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம். அதில் ஒன்று தான் ஒவ்வொருவரும் தம்மையும், தம் குடும்பத்தார்களையும் மற்றும் தம்மைச் சார்ந்தவர்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது!
அல்லாஹ் கூறுகின்றான்:
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)
அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று தமது வாயினால் கூறிக்கொண்டே அல்லாஹ்வின் பண்புகளையும், சிஃபத்துக்களையும் அவனுடைய சிருஷ்டிக்களான அவுலியாக்களுக்கும், நபிமார்களுக்கும், இறை நேசர்களுக்கும் வழங்கி அவர்களை அழைத்து, உதவிகோரி அவர்ககளிடம் பிரார்த்திப்பதன் மூலம் அவர்களை வணங்கி வழிபட்டு அவர்களையும் ‘வேறு இலாஹ்களாக’ ஏற்படுத்திக்கொண்டு, ஷிர்க் என்னும் மாபெரும் பாவமாகிய இணை வைப்பைச் செய்து நிரந்தர நரகத்தின் படுகுழியை நோக்கி வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளை மீட்டெடுப்பதைவிட வேறு முக்கிய செயல்கள் நமக்கு இருக்கின்றனவா? இதற்கல்லவா நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்?
ஏக இறைவனை மட்டுமே வணக்கத்திற்கு உரியவனாக ஏற்று, ஷிர்க் மற்றும் பித்அத்துகளை தவிர்ந்து வாழும் எனதருமை ‘அல்லாஹ்வை மட்டும் வணக்கத்திற்குரியவனாக ஏற்றிருக்கும் முஸ்லிம்’ சகோதர, சகோதரிகளே!
நீங்கள் உண்மையில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்புபவராக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!
நமது ஒவ்வொரு செயல்களுக்கும் அல்லாஹ்விடம் பதில்கூறியே ஆகவேண்டும் என்பதனையும் மறந்துவிடாதீர்கள்! நாம் ஒவ்வொரு முறையும் பிறருக்கு போதிக்கின்ற இறைவனின் எச்சரிக்கையை நமக்கு நாமே கூறிக்கொண்டு நம்மை சீர்திருத்திக்கொள்வோம்!
“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்! இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:8)
சகோதரர்களே!
ஒருவர் பூமி நிறைய பாவங்கள் செய்திருப்பினும் இறைவனுக்கு இணைவைக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்தித்தால் அல்லாஹ் அவன் பாவங்களை மன்னிப்பதாக இருக்கின்றான்’ என்ற நபிமொழியை நாம் மறந்துவிடக் கூடாது.
எனவே நம்முடைய செயல்களிலேயே தலையாய செயலாக, ‘பூமி நிறைய பாவங்களை விட மிகப்பெரிய பாவமாகிய ஷிர்க்‘ என்பதை விட்டும் நம் சகாதர, சகோதரிகளை மீட்டெடுப்பதையே அமைத்துக்கொள்ள வேண்டும்! அதற்கே நாம் அதிக முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
யா அல்லாஹ் சத்தியம் எங்கிருந்து வந்தாலும், அதை யார் கூறினாலும் அந்த சத்தியத்தை ஏற்று நாங்கள் தவறு செய்திருப்பின் எங்களைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!
உள்ளங்களைப் புரட்டுபவனே! உன்னிடம் நாங்கள் மன்றாடிக் கேட்கின்றோம்! ஷைத்தானின் தூண்டுதல்களினால் சிதறுண்டு கிடக்கும் ஏகத்துவ சொந்தங்களின் உள்ளங்களை ஒன்றினைத்து ஒன்று சேர்வதற்கு உதவி செய்திடுவாயாக!
யா அல்லாஹ்! ஷைத்தானின் தீய சூழ்ச்சிக்கு உட்பட்டு ஏகத்துவவாதிகளுக்கிடையில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளில் எங்களின் சக்திகளை, நேரங்களை வீணடிக்காமல் அவைகளை,
1) நிரந்தர நரகத்திற்கு வழிகோலுகின்ற ஷிர்க் மற்றும்
2) வழிகேட்டிற்கு இட்டுச்சென்று அதன் மூலம் நரகத்திற்கு வழிவகுக்கும் பித்அத்
3) அல்லாஹ்வையே நிராகரிக்கும் கொள்கையாகிய சூஃபியிஸ வழிகேடுகள்
போன்ற செயல்களைச் செய்பவர்களைச் சீர்திருத்துவதில் திருப்புவதற்கு உதவி செய்வாயாக!