இஹ்ராம் அணிந்தவருக்கு தடை செய்யப்பட்டவைகள் – ஹஜ் உம்ரா சட்டங்கள்
1) இஹ்ராம் அணிந்தவர் தலை மற்றும் உடலிருந்து முடியை களைவது கூடாது.
தலையில் பிரச்சனை உள்ளவர்கள் தலைமுடியை மழித்துக்கொள்ள மார்க்கம் அனுமதிக்கின்றது. ஆனால் அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும்.
“ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் – ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” (அல்-குர்ஆன் 2:196)
அப்துல்லாஹ் இப்னு மஃகல் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
“நான் கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், ‘என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02: 196) இறைவசனம் அருளப்பட்டது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருக்க, நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன்;
நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! உம்மிடம் ஓர் ஆடு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள்; நான் ‘இல்லை!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘(தலையை மழித்து) மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்று கூறினார்கள்’ என்றார்கள்.
ஆதாரம்: புகாரி 1816
2) இஹ்ராம் அணிந்தவர் நகங்களை களைவது கூடாது.
“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி); ஆதாரம்: நஸயீ (4361)
3) உடல் மற்றும் ஆடைகளில் நறுமணங்கள் பூசுவது கூடாது.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்’ எனக் கூறினார்.
ஆதாரம்: புகாரி 1816.
“குங்குமம் பூசப்பட்ட, வரஸ் (வரஸ் என்பது நல்ல நறுமணமுடை ஒரு மஞ்சல் தாவரமாகும், அதனைக் கொன்டு பூசப்படும்) பூசப்பட்ட ஆடைகளை நீங்கள் அணிய வேண்டாம்”
ஆதாரம்: புஹாரி முஸ்லிம்.
4) இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, செய்விக்கவோ அல்லது பெண் பேசுவதோ கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது.”
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி); ஆதாரம்: புகாரி 2752
“இஹ்ராமுடைய ஆடையை அணிந்தவர் திருமணம் முடிக்க மாட்டார் திருமணம் முடிக்கப்படவும் மாட்டார். திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபடவுமாட்டார்”
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.
5) இஹ்ராம் அணிந்தவர் உடலுறவில் ஈடுபடுவது கூடாது.
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.” (அல்-குர்ஆன் 2:197)
6) தரையில் உயிர்பிராணிகளைக் கொல்வது, வேட்டையாடுவது கூடாது.
“ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.” (அல்-குர்ஆன் 5:94)
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.” (அல்-குர்ஆன் 5:95)
“உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக – ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.” (அல்-குர்ஆன் 5:96).
இஹ்ராமுடைய நிலையில்தரையில் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இஹ்ராமுடைய ஆடையை அணிந்தவருக்கு உணவுக்காக கோழியை அல்லது கால்நடைகளை அல்லது கடலில் இருக்கின்ற பிராணிகளை அறுப்பதற்கு அனுமதியுண்டு. அதே போல கடலில் உள்ளவைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, இஹ்ராமுடைய ஆடையை அணிந்திருக்கும் மனிதர்களுக்கு, உணவாக உட்கொள்ள முடியாத, விஷமுள்ள தேள்,பாம்பு போன்ற மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிராணிகளை கொல்வதற்கும் அனுமதி இருக்கிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!’
இதை இப்னு உமர்(ரலி) ஹஃப்ஸா(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.
7) ஆண்கள் தலையை மறைக்கக் கூடாது.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்’ எனக் கூறினார்.
ஆதாரம்: புகாரி 1816.
8) ஆண்கள் தைத்த ஆடைககளை அணிவதோ தலையை தலைப்பாகை, தொப்பி, துணி, போன்றவற்றைக் கொண்டு மறைப்பதோ கூடாது.
‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது.
பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); ஆதாரம்: புகாரி 134
மேற்கூரையிட்ட கூடாரத்தின் உள்ளே இருப்பதற்கோ அல்லது குடையை பயன்படுத்துவதிலோ தவறில்லை.
சிலர் இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் மேற்கூரையில்லாத வாகளங்களில் பயனித்து வருகின்றனர். இஸ்லாம் இதுபோல் கூறவில்லை. இவ்வாறு செய்வது தேவயற்றது.
9) பெண்கள் முகத்தை மறைப்பது மற்றும் கையுறைகள் அணிவது கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!”
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); ஆதாரம்: புகாரி 134
எனவே, இஹ்ராமுடைய நிலையில், பெண்கள் முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால், அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:
“பிரயான குழுவினர்கள் எங்களை கடந்து செல்பவராக இருந்தார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நாங்கள் இருந்தோம்; அவர்கள் எங்களை அண்மித்த போது நாங்கள் முகங்களை மூடிக்கொண்டும் அவர்கள் எங்களை விட்டு தூரமான பொழுது நாங்கள் முகங்களை திறந்து கொண்டோம்”
ஆதாரம்: அபூதாவூத்.
பெண்கள் தங்க ஆபரணங்களை அணிவதற்கு தடையில்லை.
10) இதுவல்லாமல் ஹரம் எல்லைக்குள் தடை செய்யப்பட்ட செயல்களையும் இஹ்ராம் அணிந்த நிலையிலும் இஹ்ராம் அணியாத நிலைகளிலும் செய்வது கூடாது. அவைகளாவன:
10.1) கீழே கிடக்கும் பொருள்களை எடுப்பது கூடாது. அப்படி எடுப்பதாயிருந்தால் அதை அதன் உரிமையாளரிடமோ அல்லது அத்தகைய பொருள்களை பாதுகாப்பவர்களிடமோ அவற்றை ஒப்படைத்துவிட வேண்டும்.
10.2) ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம், செடிகளை வெட்டுவது கூடாது
10.3) ஹரத்தின் புனிதத்தன்மையை கெடுக்கும் எந்த செயலையும் செய்வது கூடாது.
மக்கா நகரின் புனிதத் தன்மையைப் பற்றியும் அதில் பேணப்படவேண்டிய ஒழுங்கு முறைகளையும் பற்றி அறிய:
- மக்கா நகரின் புனிதத் தன்மை, அதை கண்ணியப்படுத்த வேண்டிய அவசியம்
- புனித மக்கா நகரின் சிறப்புகள் யாவை?
- மஸ்ஜிதுல் ஹரமில் பேணப்படவேண்டிய ஒழுங்கு முறைகள்