மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
“உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்:
- உங்கள் தாய்மார்களும்,
- உங்கள் புதல்வியரும்,
- உங்கள் சகோதரிகளும்,
- உங்கள் தந்தையின் சகோதரிகளும்;
- உங்கள் தாயின் சகோதரிகளும்,
- உங்கள் சகோதரனின் புதல்வியரும்,
- உங்கள் சகோதரியின் புதல்வியரும்,
- உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும்,
- உங்கள் பால்குடி சகோதரிகளும்,
- உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்;
- அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை.
- உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது.
- இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது – இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்),நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.”
- “இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
(இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:23-24.)
“முன்னால் நடந்து போனதைத் தவிர,
- (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும். (அல்குர்ஆன் 4:22.)
ஒரு முஃமின் விபச்சாரம் செய்பவர்களை திருமணம் செய்து கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது:
- “விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்;
- விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது” (அல்குர்ஆன் 24:3)
அதுபோல் மணமக்களைத் தேர்வுசெய்வு செய்யும் போது நல்லொழுக்கமுள்ளவர்களை, மார்க்கப்பற்றுள்ளவர்களைப் தீய செயல்களில் ஈடுபடாதவர்களைப் பார்த்து தேர்வுசெய்ய வேண்டும்!
- “கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும்
- கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்:
- நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும்
- நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.” (அல்குர்ஆன் 24:26)
பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்.
உங்களுக்குப் பாலூட்டிய செவி-த் தாய்மார் களையும் (நீங்கள் மணப்பது விலக்கப்பட் டுள்ளது) (எனும்4:23ஆவது இறைவசனம்). இரத்த உறவினால் மணமுடிக்கக் கூடாத வர்களைப் பால்குடி உறவினாலும் மணமுடிக்கக் கூடாது.
“பிறப்பு எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கிய உறவுகளாக்கி விடும்” என்று சொன்னார்கள்.” ஆதாரம்: முஸ்லிம்
பால்குடி சகோதரிகளை மணமுடிக்கலாகாது!
உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்கள்:
நான் (உம்மு யஹ்யா பின்த் அபி இஹாப் எனும்) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன். பின்னர் ஒரு கறுப்பு நிற (அடிமைப்) பெண் எங்களிடம் வந்து “நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும் உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டினேன். (இந்த வகையில் நீங்கள் இருவரும் சகோதரத்துவ உறவுடையவர்கள்)” என்று கூறினாள். எனவே (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து மதீனாவிற்கு) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘நான்’ இன்னவர் மகள் இன்னவளை மணந்துகொண்டேன். அப்பால் ஒரு கறுப்பு நிறப்பெண் எங்களிடம் வந்து என்னை நோக்கி ‘நான் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருக்கிறேன்’ என்று பொய் சொல்கிறாள்” என்று சொன்னேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு என்னைப் புறக்கணித்தார்கள். மீண்டும் நான் நபியவர்களின் முகத்துக்கு நேராக வந்து ‘அவள் பொய் தான் சொல்கிறாள்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியதாக சொல்லிவிட்ட நிலையில் அந்தப் பெண்ணுடன் நீ எப்படி (இல்லறம் நடத்த முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்துவிட்டுவிடு!” என்று (யோசனை) கூறினார்கள். ஆதாரம்: புகாரி
அத்தையையும், சிறிய தாயையும் மணமுடிக்கலாகாது!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’:
“(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) ஆதாரம்: புகாரி
மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் வேறொரு கணவனை மணந்து, அவன் அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டு,பின்னர் அவனும் மணவிலக்குச் செய்து, அவளது காத்திருப்புக் காலம் (இத்தா) முடியாத வரை அவள் முதல் கணவனுக்கு (வாழ்க்கைப்பட) அனுமதிக்கப்படமாட்டாள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவளை இன்னொருவர் மணந்துகொண்டார். பின்னர் அவளிடம் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவரும் தலாக் சொல்லிவிட்டார். இந்நிலையில் அவளை அவளுடைய முந்தைய கணவர் மணமுடித்துக்கொள்ள விரும்பினார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய இன்பம்) அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாவது கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்காத வரை அது முடியாது” என்று கூறிவிட்டார்கள். ஆதாரம்: முஸ்லிம்
பால்குடித் தந்தையின் (இரத்த) உறவினரும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர்தாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து, என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார்.-அபுல்குஐஸ் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை ஆவார்.- பர்தா (ஹிஜாப்) சட்டம் அருளப்பட்ட பின் இச்சம்பவம் நடைபெற்றது. அப்போது நான், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காமல் அஃப்லஹ் (ரலி) அவர்களுக்கு அனுமதியளிக்கமாட்டேன். ஏனெனில், அபுல்குஐஸ் எனக்குப் பாலூட்டவில்லை; அவருடைய துணைவிதான் எனக்குப் பாலூட்டினார்” என்று கூறினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் பால்குடித் தந்தை) அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். உங்களிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க எனக்கு விருப்பமில்லை. (எனவே, அவருக்கு நான் அனுமதியளிக்க வில்லை)” என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதியளி” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதன் அடிப்படையில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள், “இரத்த உறவால் எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக நீங்கள் ஆக்குவீர்களோ அந்த உறவுகளைப் பால்குடி உறவின் மூலமும் நெருங்கிய உறவுகளாக ஆக்கிவிடுங்கள்” என்று கூறுவார்கள்.. ஆதாரம்: முஸ்லிம்
பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸா (ரலி) அவர்களின் புதல்வியை மணமுடித்துக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர் எனக்கு (திருமணம் செய்ய) அனுமதிக்கப்பட்டவர் அல்லர். ஏனெனில், அவர் என் பால்குடிச் சகோதரரின் மகளாவார். மேலும், இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக ஆகுமோ, அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் நெருங்கிய உறவுகளாக ஆகிவிடும்” என்று கூறினார்கள்.