முஹம்மது நபியின் முன்னறிவிப்புகள்
அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
மனித குலத்தின் நேர்வழிக்காக அவ்வப்போது இறைத்தூதர்களை அனுப்பிய இறைவன், அந்த தூதர்களை உண்மையான தூதர் தான் என்று மெய்ப்பிப்பதற்காக அவர்களுக்கு அற்புதங்களையும் எதிர்காலத்தைப் பற்றிய சில செய்திகளையும் வழங்கினான். அந்து தூதர்கள் இறைவன் தங்களுக்கு வழங்கிய பணிகளைச் செவ்வனே செய்து அவன் அவர்களுக்கு அருளிய எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் இறைவன் தங்களுக்கு அறிவித்தவாறே மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இந்த முன்னறிவிப்புகள் ஒருவரை இறைவனின் உண்மையாயான தூதர் உன்பதை இவ்வுலகிற்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. தூதுத்துவத்தை நிரூபிப்பதற்கு ஒருவருடைய வாய்மையும் மிக மிக இன்றியமையதாததாகும். அந்த தூதர் கூறியவைகள் முன்னால் நிகழ்ந்த நிகழ்வுகளாகவோ அல்லது அவருடைய தினசரி வாழ்க்கையிலோ அல்லது எதிர்காலத்தில் நிகழக் கூடியதாகவோ இருக்கலாம். அவைகள் உண்மையானவைகளாகவும் அந்த தூதர் கூறியபடியே நடைபெறக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இந்த வகை முன்னறிவிப்புகளை பல இறைத்தூதர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இறைவன் அவனுடைய இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் வழங்கிய முன்னறிவிப்புகளல்லாது நபி (ஸல்) அவர்கள் தங்களின் பொன் மொழிகளின் மூலம் பற்பல முன்னறிவிப்புகளை கூறியிருக்கிறார்கள்.
அவைகளில் பல அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்திலே நிறைவேறி விட்டன. இன்னும் சில நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு சில காலங்களுக்குப் பின் நிறைவேறின. இன்னும் சில அவ்வப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறன. இன்னும் பல இனி வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் நிறைவேற இருக்கின்றன.
ஹூதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
“முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் போது உலக முடிவு நாள் வரை நடக்கவுள்ள அனைத்து அடையாளங்களையும் ஒன்றைக் கூட விட்டுவிடாமல் கூறினார்கள். அவைகளில் சில நினைவில் உள்ளன. சில மறந்து விட்டன. அந்த உரைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறிய அடையாளங்களில் சில நடந்தேறின. ஆனால் நான் அவைகள் நடைபெறுவதற்கு முன்பு அவற்றை மறந்து விட்டேன். ஒருவர் மறந்துவிட்ட மனிதனை பார்த்த உடனே உணர்ர்ந்துக் கொள்வது போல் அந்த நிகழ்வுகள் நடந்தபோது நான் அவற்றை உணர்ந்துக் கொண்டேன்”
இவ்வாறு நபி (ஸல்) அவர்களால் கூறப்பட்டவைகளில் 160 முன்னறிவிப்புகள் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் காலத்திலும் நடந்து விட்டன. அவைகளில் சிலவற்றை இந்த சிறிய கட்டுரையில் காண்போம்.
1) கி.பி. 623 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு) மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடனான பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவர்கள் கொல்லப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். பின்னர் பத்ரு போர் நடைபெற்று முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே அப்போரில் எதிரிகள் கொல்லப்பட்டனர் என்பதை அப்போரில் கலந்துக் கொண்ட நபித்தோழர்கள் அறிந்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு மெய்பிக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.
2) கி.பி. 626 (ஹிஜ்ரி 5) ஆம் ஆண்டு நடைபெற்ற அல் அஹ்ஸாப் (அகழ்) போரின் போது, நபி (ஸல்) அவர்கள், ‘இது தான் மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடன் நடைபெறும் இறுதி போராகும்’ என்று முன்னறிவிப்பு செய்தார்கள். அவ்வாறே அந்தப் போருக்குப் பிறகு மக்காவாசிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் போர் நடைபெறாமல் மக்காவாசிகள் முஸ்லிம்களானார்கள். இதுவும் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை மெய்பித்தது.
3) முஹம்மது (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் எனக்குப் பிறகு என்னுடைய குடும்பத்தார்களில் நீ தான் முதலாவதாக மரணிக்கக் கூடியவர் என்று கூறினார்கள். இதில் இரண்டு விதமான முன்னறிவிப்புகள் இருக்கின்றன. அவைகள், முதலில் நபி (ஸல்) அவர்கள் தான் மரணிப்பார்கள் என்பதாகும். இரண்டாவது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களில் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு முதலாவதாக மரணிப்பவர் ஃபாத்திமா (ரலி) அவர்களாவார் என்பதாகும். இந்த இரண்டும் அவ்வாறே நடைபெற்றன.
4) தன்னுடைய இறப்பிற்குப் பிறகு ஜெரூஸலம் வெற்றிக் கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிரிட்டானியா கலைக்களஞ்சியத்தின்படி, இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 638 ஆம் ஆண்டு ஜெரூஸலம் வெற்றிக் கொள்ளப்பட்டது.
5) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு பாரசீகம் வெற்றிக் கொள்ளப்படும் என்று முன்னறிவிப்புச் செய்தார்கள். பிரிட்டானியா கலைக் களஞ்சியத்தின்படி அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலங்களில் கி.பி. 636 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக பாரசீகத்தின் பகுதிகள் முஸ்லிம்களால் வெற்றிக் கொள்ளப்பட்டு கி.பி. 642 ஆம் ஆண்டு முழுமையாக முஸ்லிம்களின் வசம் வந்தது.
6) நபி (ஸல்) அவர்கள் எகிப்து வெற்றிக் கொள்ளப்படும் என்று முன்னறிவிப்பு செய்தார்கள். பிரிட்டானியா கலைக்களஞ்சியத்தின்படி, கி.பி. 639 ஆம் ஆண்டு அம்ர் (ரலி) அவர்கள் மிகக் குறைந்த படையினரான 4000
முஸ்லிம் வீரர்களைக் கொண்டு எகிப்தை வெற்றிக் கொண்டார்கள் என்பதை அறிய முடிகிறது.
7) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு துருக்கியர்களோடு சண்டை நடைபெறும் என்று முன்னறிவிப்பு செய்தார்கள். உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கும் துருக்கியர்களுக்கும் சண்டை நடைபெற்றது.
8.) முதல் கடல் மார்க்கமான சண்டை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் என்றும் உம்மு ஹரம் (ரலி) என்ற பெண் ஸஹாபி இதற்கு சாட்சியாக இருப்பார்கள் என்றும் முன்னறிவிப்பு செய்தார்கள். மேலும் கான்ஸ்டன்டினோபில் முஸ்லிம்களால் தாக்கப்படும் என்றும் முன்னறிவிப்பு செய்தார்கள்.
முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முதல் கடல்வழி மார்க்கமான சண்டை நடைபெற்றது. நபி (ஸல்) அவர்கள் அறிவித்தவாறே உம்மு ஹரம் (ரலி) அவர்கள் இதற்கு சாட்சியாக இருந்தார்கள். அதுபோலவே ஹிஜ்ரி 52 ஆம் ஆண்டில் யஜித் இப்னு முஆவியா (ரலி) அவர்கள் முதன் முதலாக கான்ஸ்டன்டினோபில் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.
9) கி.பி. 626 ஆம் ஆண்டு அஹ்ஸாப் (அகழ்) போரின் போது நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்டு முற்றுகையிடப்பட்டு குர்ஆன் குறிப்பிடுகின்றது போல மிகவும் கஷ்டமான சூழலில் முஸ்லிம்கள் தவித்துக்கொண்டிருந்த வேளையில் ரோம், பாரசீகம் மற்றும் ஏமன் முஸ்லிம்களால் கைப்பற்றப்படும் என்று முன்னறிவிப்பு செய்தார்கள். முஸ்லிம்கள் அந்த அஹ்ஸாப் போரின் போது இருந்த நிலையை குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: –
“உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள். அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், ‘அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை’ என்று கூறிய சமயத்தையும் நினைவு கூருங்கள். (குர்ஆன் 33:10-12)
நபி (ஸல்) அவர்களின் கூற்றே மெய்பிக்கப்பட்டது.
10) நபி (ஸல்) அவர்கள் தாம் வாழும் காலத்தில் தன்னை ஒரு இறைத்தூதர் என்று பொய் கூறிவரும் ஒருவன் நபி (ஸல்) அவர்கள் வாழும் போதே நேர்வழி பெற்ற ஒருவரால் கொல்லப்படுவான் என்று முன்னறிவிப்பு செய்தார்கள். அவ்வாறே ஏமன் தேசத்தில் தன்னை இறைத்தூதர் என்று பொய் சொல்லித் திரிந்த அல் அஸ்வத் அல் அனஸி என்பவன் ஃபைரோஜ் அல் தய்லமி என்பவரால் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே கொல்லப்பட்டான்.
மேலும் உலக முடிவு நாளுக்கு முன்னர் நடை பெறவுள்ள இன்னும் பல முன்னறிவிப்புகள் இருக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் அனைத்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தின் ஆதாரங்களாக உள்ளன. இறைவனால் தூதுச் செய்தி அறிவிக்கப்படாமல் அன்றி வேறு எந்த வகையிலும் இத்தகைய உண்மையான முன்னறிவிப்புகளை ஒருவரால் நிச்சயமாக செய்ய இயலாது.
இவைகள் அனைத்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பொய் கூறுபவர் அல்ல! மாறாக அவர் மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்ட, மனித குலம் நரக நெருப்பிலிருந்து மீட்சி பெற அகில உலகங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட உண்மையான இறைத்தூதர் என்பதையே நிரூபித்துக் கொண்டிருக்கிறது.