கூட்டுக் குர்பானி பங்குகள்
ஆடுகளைக் குர்பானி கொடுப்பது:
“நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது?” என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் “ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்; நூற்கள்: திர்மிதீ 1425, இப்னு மாஜா 3137, முஅத்தா921
மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஒரு ஆட்டை அறுத்துக் குர்பானி கொடுக்கலாம் என்பது விளங்குகின்றது.
மாடு அல்லது ஒட்டகத்தில் கூட்டுக் குர்பானி:
ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு’ எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.” (முஸ்லிம் 2538)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.” (முஸ்லிம் 2537)
“ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி); ஆதாரம்: அபூதாவூத் (2425)
எனவே, மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில், மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம். ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து பெறும் தெளிவுகள்:
1) ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுக்கலாம்.
2) ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.