மரணித்தவர்களுக்காக கூலிக்கு ஆள்வைத்து குர்ஆன் ஓதலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 05: மரணித்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அங்கு அல்குர்ஆன் ஓதுவது, மரித்தோரின் வீட்டில் கூலிக்கு அல்குர்ஆனை ஓதுவதின் சட்டமென்ன? நாம் அவர்களை மரித்தோருக்கு கருணைக் காட்டுபவர்கள் என்று தான் அழைப்போம்!
பதில் : மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு ஒருவரின் ஜனாஸாவை அடக்கியதன் பின் அங்கு அல்குர்ஆனை ஓதுவது தெளிவான வழிகேடான பித்அத்தாகும். இவ்வாறான நடைமுறைகள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. அன்னார் அவ்வாறு செய்வதற்கு ஏவவோ, அல்லது அவர்களோ செய்யவில்லை.
நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் ஜனாஸாவை அடக்கிவிட்டு அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து ‘உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள், அவரது உள்ளம் உறுதியுடன் இருப்பதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், ஏனெனில் அவர் இப்பொழுது விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.”
மண்னறையில் அல்குர்ஆன் ஓதப்படுவது நன்மையாக இருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு வழிகாட்டியிருப்பார்கள். மரணித்தவரின் வீட்டில் கூடி அல்குர்ஆனை ஓதுவதற்கு, நபி (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ, தாபிஈன்களிடமோ, அதைத் தொடர்ந்து வந்தவர்களிடமோ எந்த முன்மாதிரியுமில்லை.
ஒரு முஸ்லிம் அவனுக்கு கவலைதரும் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் அவன் பொருமையை மேற்கொள்ள வேண்டும், இன்னும் அவன் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்ப் பார்த்து செயல்பட வேண்டும். பொருமையாளனின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள்: ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்; அல்லாஹும்ம ஃஜுர்னி பீ முஸீபதி வஹ்லுப் லீ ஹய்ரன் மின்ஹா’.
மரணம் நடைபெற்ற அவ்வீட்டில் கூடி அல்குர்ஆன் ஓதுவது, உணவு வகைகள் செய்து பரிமாறுவது அனைத்தும் வழிகெட்ட பித்அத்தாகும்.