முந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்

உலகில் உள்ள மதங்களில் முந்தைய இறைத்தூதர்களையும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் நம்ப வேண்டும் என வலியுறுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான். இவ்வாறு நம்பிக்கை கொள்வது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் (ஈமான்) மிக முக்கியமானதாக இருக்கிறது. முந்தைய தீர்க்கதரிசிகளையும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் ஒருவர் நம்ப மறுத்தால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது.

மேலும் இறைத்தூதர்கள் அனைவரும்,

– கண்ணியமானவர்கள் என்றும்,
– ஸாலிஹான நல்லடியார்கள் என்றும்,
– அவர்களிடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்றும்,
– அவர்களை மரியாதைக்குறைவாகவோ அல்லது அவர்களின் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படும் விதத்திலோ பேசக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

தீர்க்கதரிசிகள் அனைவரும் நேர் வழிசார்ந்த ஸாலிஹான நல்லடியார்களாவார்கள்: –

அல்லாஹ் கூறுகிறான்: –

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் – இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே. (அல்-குர்ஆன் 6:84-85)

(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார். (அல்-குர்ஆன் 19:51)

இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம். (அல்-குர்ஆன் 21:72)

இன்னும், லூத்தையும் (நபியாக்கி) – நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர். (அல்-குர்ஆன் 21:74)

இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே! (அல்-குர்ஆன் 21:85-86)

முந்தைய இறைத்தூதர்களுக்கும் வேதம் வழங்கப்பட்டது: –

அல்லாஹ் கூறுகிறான்: –

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்-குர்ஆன் 4:163)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது
பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 5:46 )

முந்தைய இறைத்தூதர்களின் மீதும் அவர்களுக்கு இறக்கப்பட்டதின் மீதும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டக் கூடாது: –

அல்லாஹ் கூறுகிறான்: –

(முஃமின்களே!)’நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்’ என்று கூறுவீர்களாக. (அல்-குர்ஆன் 2:136)

‘அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 3:84)

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: ‘நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்’ என்று கூறுகிறார்கள். (அல்-குர்ஆன் 2:285)

யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:152)

அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார். (அல்-குர்ஆன் 37:37)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *