பாங்கு, இகாமத் மற்றும் அவற்றுக்கான மறுமொழி

பாங்கு சொல்வதன் அவசியம்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லவேண்டும். மேலும் உங்களில் (சன்மார்க்க அடிப்படையில்) பெரியவர் இமாமத் செய்ய வேண்டும். அறிவிப்பவர் : மாலிக்பின் ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ , ஆதாரம் : புகாரீ, முஸ்லிம்.

தனித்துத் தொழும் போதும் பாங்கு மற்றும் இகாமத் சொல்லி தொழவேண்டும்: –

ஒரு மலையின் மேற்பகுதியில ஆடுமேய்த்துக் கொண்டிருக்கும் ஒருவர், தானே பாங்கு சொல்லித் தொழும் போது, உங்கள் இறைவன் மிக சந்தோஷம் அடைகிறான். (மேலும் மலக்குகளை நோக்கி) ”இதோ எனது இவ்வடியான் என்னை பயந்தவனாக பாங்கு சொல்லி தொழுவதைப் பாருங்கள்! அவன் பாவங்களை நான் மன்னிப்பதோடு, அவனை நான் சுவர்க்கத்திலும் நுழைய வைப்பேன்” என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற, நான் கேட்டிருக்கின்றேன். அறிவிப்பவர் :உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் : அபூதாவுத், நஸயீ

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்): –

”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் –
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் –
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

ஹய்ய அலஸ்ஸலாஹ் –
ஹய்ய அலஸ்ஸலாஹ்

ஹய்ய அலல்ஃபலாஹ் –
ஹய்ய அலல்ஃபலாஹ்

”அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் –
லா இலாஹ இல்லல்லாஹு”

பஜ்ருடைய பாங்கு: –

மேற்கூறப்பட்ட பாங்கு பஜ்ருடைய தொழுகையைத் தவிர அனைத்து தொழுகைகளுக்கும் பொதுவானவையாகும்.

பஜ்ருடைய பாங்கில் மற்ற தொழுகைகளில் பாங்கு கூறுவது போல ஆரம்பித்து, ‘ஹய்ய அலல்ஃபலாஹ்’ என்று கூறியதற்குப் பிறகு

அஸ்ஸலாத்து ஹைருன் மினன் னவ்ம்
அஸ்ஸலாத்து ஹைருன் மினன் னவ்ம்

என்று இருமுறை கூவிட்டு, மற்ற தொழுகைக்கான பாங்கைப் போலவே

அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் –
லா இலாஹ இல்லல்லாஹு”

என்று கூறி பாங்கை நிறைவு செய்ய வேண்டும்.

பாங்குக்கு மறுமொழி கூறுவதன் அவசியம்: –

உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்துள்ளார்கள்:

பாங்கு சொல்பவர் ””அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் ”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும்.

பிறகு அவர் ”அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்” என்றால் நீங்களும் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லவேண்டும்.

பிறகு அவர் அஷ்ஹது அன்ன முகம்மதர் ரசூலுல்லாஹ் என்றால்” நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லவேண்டும்.

பிறகு அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ், என்றால், அப்போது நீங்கள் ”லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று சொல்ல வேண்டும்;

பிறகு அவர் ”ஹய்ய அலல்ஃபலாஹ்” என்றால் அப்போதும் நீங்கள் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லவேண்டும்;

பிறகு அவர் ”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லவேண்டும்;

பிறகு அவர் ”லாஇலாஹ இல்லல்லாஹ்” என்றால் நீங்களும் ”லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று உள்ளத்தின் உறுதியுடன் கூறினால் அத்தகையோர் சுவர்க்கம் புகுவர்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரங்கள் : முஸ்லிம், அபூதாவுத்

பாங்குக்குப் பின் ஸலவாத்து ஓதினால் நபி صلى الله عليه وسلم அவர்களின் பரிந்துரை கிடைக்கும்: –

அப்துல்லாஹ் பின் அம்ரு رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன். பாங்கு சொல்பவரின் பாங்கை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவது போன்றே கூறுங்கள். பின்னர் என்மீது ஸலவாத் ஓதுங்கள்! ஏனெனில் எவர் என் மீது ஒரு ஸலவாத் ஓதுவாரோ அதன் காரணமாக அல்லாஹ் அவர் மீது பத்து ஸலவாத் ஓதுகிறான். பின்னர் அல்லாஹ்விடம் எனக்காக ”வஸீலாவைக்” கேளுங்கள்; நிச்சயமாக அது சுவர்க்கத்தில் அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே அன்றி மற்றெவருக்கும் கிடைக்காததோர் உயர்பதவி, அவர் நானாக இருக்கலாம் என்று நல்லாதரவு வைக்கிறேன். எவர் ”வஸீலா” வென்னும் அவ்வுயர் பதவி எனக்குக் கிடைப்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றாரோ, அவருக்கு எனது ஷஃபாஅத்து பரிந்துரை கிடைக்கும். ஆதாரங்கள் : முஸ்லிம், அபூதாவுத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத்

பாங்கு துஆ: –

‘அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்”” என்று பிராத்தனை செய்தால் அவருக்கு மறுமையில் எனது பரிந்துரை (கடமையாகிவிட்டது) கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – ஜாபிர் (ரலி) புகாரி

பொருள்: பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக!

“வஸீலா என்பது சுவர்க்கத்திலுள்ள ஒரு உயர்வான நிலையாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் எவராவது ஒருவருக்குத் தான் கிடைக்கும். அது எனக்காக இருக்க வேண்டும் என நான் ஆதரவும், நம்பிக்கையும் வைக்கிறேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – ஆதாரம்: முஸ்லிம்

தொழுகைக்கான இகாமத்: –

”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்-
ஹய்ய அலஸ்ஸலாஹ்
ஹய்ய அலல்ஃபலாஹ்
கத்காமத்திஸ்ஸலாஹ் –
கத்காமத்திஸ்ஸலாஹ்
”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாஇலாஹ இல்லல்லாஹ்

இகாமத்துக்கான மறுமொழி: –

அபூ உமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவித்துள்ளார்கள். பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ”இகாமத்” சொல்லத் துவங்கி, ”கத்காமத்திஸ்ஸலாஹ்” என்று அவர் கூறும்போது, நபி صلى الله عليه وسلم அவர்கள் (அதற்கு பதில் சொல்லும் வகையில்), ”அகாமஹல்லாஹுவ அதாமஹா” (அல்லாஹ் அதை நிலைநிறுத்தி, நேமமாக்கியருள்வானாக!) என்று கூறினார்கள். ஏனைய இகாமத்துடைய வாசகங்களுக்கு (மேலே) உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் அறிவிப்பில் உள்ளவாறு பாங்கின் வாசகங்களுக்கு பதில் சொன்னது போல் பதில் சொன்னார்கள். ஆதாரம் : அபூதாவுத்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...