குலாவின் சட்டங்கள்
குலாஃ கொடுப்பதற்கு உண்டான சட்டத்தை விவரிக்கவும்.
– சகோதரர் நியாஸ், சுவனத்தென்றல் வாசகர்.
தனது கணவன் மூலம் முழுமையாக தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி அடையாமல் தனது கணவனோடு தொடர்ந்தும் வாழ்ந்தால் விபச்சாரம் என்ற கொடிய பாவத்தில் ஈடுபட வேண்டி வரும் என்ற முடிவுக்கு வந்த மனைவி, தனது கணவனிடம் பெற்றுக் கொண்ட மஹர் தொகையையோ அல்லது வேறு ஒரு செல்வத்தையோ கணவனுக்கு திருப்பி கொடுத்து விட்டு திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் சட்ட நிலையை ‘குலாஃ’ என்று சொல்லப்படும்.
மேற்படி நிர்பந்தமான நிலையில் ஒரு மனைவி இந்த தீர்மானத்தை எடுக்கும் உரிமையை இஸ்லாம் அவளுக்கு வழங்கியுள்ளது.
“இன்னும் ‘நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது’ என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.” (2:229)
நபியவர்களது காலத்தில் ஸாபித் இப்னு கைய்ஸ் (ரழி) அவர்களின் மனைவிக்கு இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டு நபியவர்களிடம் விஷயத்தை சொன்ன போது,
“‘நீ உனது கணவனிடம் இருந்து பெற்றுக் கொண்ட தோட்டத்தை திருப்பிக் கொடுத்துவிடுவாயா?” என்று கேட்கவே
அந்தப் பெண்னும் ‘ஆம் நான் தயார்’
என்று சொன்னதும் நபியவர்கள் ஸாபித் (ரழி) அவர்களைப் பார்த்து,
‘உனது தோட்டத்தை நீ திருப்பி எடுத்துக் கொண்டு அவளை விட்டு விடு’
என்று சொல்லி அந்த திருமண ஒப்பந்தத்தை முறித்து விட்டார்கள்.” ஆதாரம் புகாரி (5273)
சின்னச் சின்ன காரணங்களுக்காவெல்லாம் இந்த கடுமையான முடிவுக்கு ஒரு பெண் செல்லுவதை மார்க்கம் தடை செய்கின்றது.
தனது கணவனை விட அழகான ஒரு ஆணை பார்த்து விட்டு, ‘நான் உன்னை விட்டு விட்டு அந்த மனிதனை திருமணம் செய்யப் போகின்றேன்’ என்ற தீர்மானங்களுக்கு வருவதை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கின்றது.
மேற்கூறிய சம்பவத்தில் குறித்த பெண் தனது நிலையை நபியவர்களிடம், ‘நான் பாவத்தில் (விபச்சாரம்) விழுந்து விடுவேன் என்று பயப்படுகின்றேன்’ என்று விபரித்ததை நாம் கட்டாயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.