மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்
மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது!
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” (7:31)
துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது!
“பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி
(குறிப்பு: பீடி, சிகரெட்டின் துர்வாடையுடன் பள்ளிக்கு வருபவர்கள் மேற்கண்ட ஹதீஸை நினைவு படுத்திக்கொள்ளட்டும்)
பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவது கூடாது!
“அல்லாஹ்வின் அடிமைகளாகிய பெண்களை மஸ்ஜிதுகளுக்குச் செல்வதிலிருந்து தடுத்து வைக்காதீர்கள். அவர்கள் நறுமணம் பூசிக்கொள்ளாமல் செல்லவேண்டும்’. அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத் ‘நறுமணம் பூசிய பெண்கள் நம்முடன் இரவுத் தொழுகையில் கலந்துக் கொள்ளக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத், நஸயீ.
மஸ்ஜிதினுள் நுழையும் போது ஓத வேண்டிய துஆ!
‘அல்லாஹூம்ம ஃபதஹ் லீ அப்வாப ரஹ்மதிக’ அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
மஸ்ஜிதினுள் நுழைந்தவுடன் காணிக்கை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்!
‘நீங்கள் பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர வேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), “நீர் தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார். “(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!: என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம்: புகாரி
அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவது உள்ளச்சத்தின் வெளிப்பாடு ஆகும்!
“இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.” (22:32)
மஸ்ஜிதினுள் எச்சில் / சளியை துப்புவது கூடாது!
கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். ‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!” என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு ‘அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி
குறிப்பு: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுகளின் தரை மண்ணால் இருந்ததால் பாதத்திற்கு கீழே உழிந்தால் மண்ணமால் மூடிவிடலாம். தற்போது அவ்வாறு இல்லையாதலால் மஸ்ஜிதினுள் எச்சிலைத் துப்புவது அதை அசுத்தப்படுத்துவதாகும் என்பதை உணரவேண்டும்.
மஸ்ஜிதில் அசுத்தத்தைக் கண்டால் சுத்தப்படுத்த வேண்டும்!
“நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் போது பிறருக்கு இடையூறு தரும் வகையில் ஓதுவது கூடாது!
நபியவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். (அப்போது) மக்கள் சப்தமிட்டு ஓதுவதை செவியுற்றார்கள். உடன் திரையை விலக்கி, “உங்களில் ஒவ்வொருவரும் (தொழுகையில்) தமது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவே உங்களில் சிலர் மற்ற சிலருக்கு நோவினை தரவேண்டாம். சிலரை விட மற்ற சிலர் ஓதுவதில் (சப்தத்தை) உயர்த்த வேண்டாம்.” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: அபுதாவூத்
மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரிடமும் பிரார்த்திக்க கூடாது!
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (72:18)
வெளியில் காணாமல் போன பொருள்களை பள்ளியில் அறிவித்து தேடுவது கூடாது!
“காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் “அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக்கிடைக்காமல் செய்வானாக!” என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து “(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் வியாபாரம் செய்வது கூடாது!
“பள்ளிவாசலில் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், “அல்லாஹ் உன்க்கு லாபத்தை தராமல் இருப்பானாக!” என்று கூறுங்கள். அறிவிப்பவர் : அபுஹூரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி
பள்ளியிலிருந்து வெளியேறும் போது ஓத வேண்டி துஆ!
‘அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக’ அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
palliyil vaithu kaatru pirindhal kooduma?(adhu samayam palliyinul vaeru yaarum illai.) adhanai adakkinal vayiru thondharavu kodukkiradhu!
idhu patri vilakkavum.