காணாமல் போன பொருள்களைக் கண்டெடுத்தல் பற்றிய சட்டங்கள்
மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுந் நபவி மற்றும் பிற இங்களில் காணாமல் போன பொருள்களைக் கண்டெடுத்த பற்றிய சட்டங்கள்
மஸ்ஜிதுல் ஹரமில் கண்டெடுத்த பொருள்கள் பற்றிய சட்டங்கள்:
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கா மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறைநம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கிறதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெறலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்கள். அப்பாஸ்(ரலி), ‘இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிர் புல்லைத் தவிரத்தான்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ்(ரலி) என்பவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் இப்னு முஸ்லிம்(ரஹ்) கூறினார்:) நான் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்னும் அபூ ஷாஹ்(ரலி) அவர்களின் சொல் எதைக் குறிக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத்தான் (எழுதிக் கொடுக்கச் சொன்னார்)” என்று பதிலளித்தார்கள். (ஆதாரம்: புகாரி 2434)
மேற்கண்ட “இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது” என்ற நபிமொழியின்படி, மஸ்ஜிதுல் ஹரமில் கீழே கடந்த பொருள்களை எடுத்தவர் அதன் அறிவிப்பாளர் வந்து நம்முடைய பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வரை அறிவிக்க வேண்டும். அதை எடுத்தவரே வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதியில்லை.
எனவே, இத்தகைய பொருள்களை எடுப்பது கூடாது. இத்தகைய பொருள்களை தவறுதலாக எடுத்துவிட்டால் இத்தகைய பொருள்களை பாதுகாத்து நிர்வகிக்கும் துறையைச் சார்ந்த அதிகாரிகளிடம் அவற்றை ஒப்டைத்து விடவேண்டும். அவர்கள் அதற்குரிய முறையானவற்றைச் செய்வார்கள்.
ஏனைய இடங்களில் கண்டெடுத்த பொருள்கள் பற்றிய சட்டங்கள்:
உபை இப்னு கஅப் (ரலி) அறிவித்தார்.
நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். எனவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.
அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) கூறினார்:
அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) ஸலமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘(நான் அறிவித்த ஹதீஸில்) நபி(ஸல்), அவர்கள், ‘மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா, அல்லது ‘ஓராண்டுக்காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா என்று நான் அறியமாட்டேன்” (அதாவது ‘எனக்கு நினைவில்லை”) என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 2426)
மற்றொரு நபிமொழியில்,
ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ (ரலி) கூறினார்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய். பிறகு, அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதைப் பற்றி (அடையாளம்) தெரிவிப்பவர் எவராவது உன்னிடம் வந்தால் (அவரிடம் ஒப்படைத்து விடு.) இல்லையென்றால் அதை உன் செலவுக்கு எடுத்துக்கொள்” என்று கூறினார்கள்.
அந்த கிராமவாசி, ‘இறைத்தூதர் அவர்களே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து)விட்ட ஆட்டை என்ன செய்வது?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி, ‘வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?’ என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபி(ஸல்) அவர்களின் திருமுகம் (வெறுப்பால் மங்கலாகி) நிறம் மாறிவிட்டது. பிறகு, ‘உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடனே அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப்பையும் உள்ளதே! நீர் நிலைகளுக்கு அது செல்கிறது; மரத்திலிருந்து தின்கிறது” என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 2427)
மேற்கண்ட நபிமொழிகளின் அடிப்படையில், ஒருவர் ஏதேனும் பொருளைக் கண்டெடுத்தால் அதை ஒரு வருடம் முழுவதும் அறிவிக்க வேண்டும்! அப்போது அதன் உரிமையாளர் வந்து அதைக் கேட்டால் அவரிடம் அந்தப் பொருளை ஒப்படைத்துவிட வேண்டும்.
ஒரு வருடமாக தொடர்ந்து அறிவிப்பு செய்து கொண்டிருந்த போதிலும் அதை உரிமைக் கோர யாரும் முன்வரவில்லையெனில் மேற்கண்ட நபிமொழிகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
மஸ்ஜிதுந் நபவியில் கண்டெடுத்த பொருள்கள் பற்றிய சட்டங்கள்:
மதினாவின் மஸ்ஜிதுந் நபவியில் கண்டெடுத்தப் பொருள்களைப் பொருத்தவரை மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது!
சில அறிஞர்கள், மஸ்ஜிதுல் ஹரமில் கண்டெடுத்தப் பொருள்களுக்குரிய சட்டங்கள் மஸ்ஜிதுந்நபவிக்கும் பொருந்தும் என கூறுகின்றனர். மாற்றுக் கருத்துடைய அறிஞர்களோ, மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் மஸஜிதுல் ஹரமின் சட்டங்களாக கூறப்பட்டவை மஸ்ஜிதுந் நபவிக்குப் பொருந்தாது. ஏணைய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் சட்டங்கள் மஸ்ஜிதுந் நபவிக்கும் பொருந்தும். மஸ்ஜிதுந் நபவியில் ஒருவர் ஏதேனும் பொருளைக் கண்டெடுத்தால் அதை ஒரு வருடம் முழுவதும் அறிவிக்க வேண்டும்! அப்போது அதன் உரிமையாளர் வந்து அதைக் கேட்டால் அவரிடம் அந்தப் பொருளை ஒப்படைத்துவிட வேண்டும். அதற்குள் யாரும் உரிமை கோராவிட்டால் கண்டெடுத்தவர் தமதாக்கிக் கொள்ளலாம் என்கின்றனர்.
இந்த விசயத்தில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், இத்தகைய பொருள்களை பாதுகாத்து நிர்வகிக்கும் துறையைச் சார்ந்த அதிகாரிகளிடம் அவற்றை ஒப்டைத்து விடவேண்டும். அவர்கள் அவற்றை ஒருவருடத்திற்கும் மேலாகக் கூட பாதுகாத்து அவற்றுக்கு உரிமையுடையவர் வந்துக் கேட்டால் திருப்பி ஒப்படைப்பார்கள்; அல்லது டிரஸ்டில் சேர்த்து விடுவர்.
அல்லாஹ் அஃலம்.