அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்தலும் அறுத்துப் பலியிடுதலும்
ஜுல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையம், சவூதி அரேபியா, வெளியிட்ட,
‘மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்!’ எச்சரிக்கை! என்ற நூலில் இருந்து…
நூலாசிரியர்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்தலும் அறுத்துப் பலியிடுதலும்
அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்வதும் இணை வைத்தலாகும். சிலர் சமாதிகளுக்கு விளக்கேற்ற நேர்ந்து கொள்வதைப் போல.
அதுபோல அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதும் மிகப்பெரும் இணைவைத்தலைச் சார்ந்ததாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘(நபியே)! நீர் உமது இறைவனுக்காகத் தொழுவீராக! மேலும் (இறைவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!’ (108:2)
‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபிப்பானாக’ என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அலீ (ரலி); நூல் (முஸ்லிம்)
அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடும் போது சில சமயம் ஹராமான இரண்டு காரியங்கள் ஒரே நேரத்தில் நடந்து விடும்.
ஒன்று,
அல்லாஹ் அல்லாதவருக்காக அறுப்பது!
மற்றொன்று,
அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுப்பது!
இவ்விரண்டு முறையில் அறுத்தாலும் அதைப் புசிப்பது ஹராமே!
அறியாமைக் காலத்துப் பலியிடுதல் சில நமது காலத்தில் பரவலாக உள்ளது! அதுதான் ஜின்களுக்காக அறுத்துப் பலியிடுவதாகும்.
அதாவது, ஒரு வீட்டை வாங்கினால் அல்லது புதிதாக ஒரு வீடு கட்டினால் அல்லது ஒரு கிணறு தோண்டினால் ஜின்களின் தொல்லைகளுக்குப் பயந்து அவ்விடத்திலோ அல்லது அதன் படிக்கட்டிலோ ஒரு பிராணியைப் பலியிடுவார்கள்.
இதுவும் மிகப்பெரிய இணை வைத்தலாகும்.