சனி பிணம் தனியே போகாது – சிந்தனைக்காக
மாற்று மதத்தவர்களைப் பொருத்தவரை அவர்களில் சிலர் சனி கிரகத்தை தங்களுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கடவுளாகக் கருதுவர்! அவர்களின் நம்பிக்கைகளில் சில!
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார்.
பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்.
சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.
சனியின் வாகனம் காக்கை.
ஆயுள் காரகனாக செயல்படும் சனி கலகங்கள், அவமதிப்பு, நோய், போலியான வாழ்வு, அடிமை நிலை, கடுகு, உளுந்து எள்ளு, கருப்பு தானியங்கள், இயந்திரங்கள், ஒழுங்கற்ற செயல்கள், விஞ்ஞான கல்வி, இரும்பு உலோகங்கள், அன்னிய நாட்டு மொழிகள், ஏவலாட்கள், எடுபிடி, திருட்டு, சோம்பல் முதலியவற்றிற்கும் காரகம் வகிக்கிறார்.
சனி தான் நின்ற வீட்டிலிருந்து 3,7,10 ம் வீடுகளை பார்வை செய்கிறார்.
சனி சூரியனை பார்வை செய்தால் மிகவும் கஷ்டப்பட்டே உணவு உண்ண வேண்டும். பல சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சனி சுக்கிரனை பார்வை செய்தால் இல்வாழ்வில் நிம்மதி இருக்காது. சனி சந்திரனை பார்வை செய்தால் உடல் நிலையில் பாதிப்பு, தாய்க்கு தோஷம் உண்டாகும்.
சந்தை கூட்டத்தில் செருப்பை வீசினாலும் சனியன் பிடித்தவன் தலையில் சரியாக விழும் என்பது பழமொழி.
ஒரு மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வந்தால் நாட்டில் பஞ்சம் வரப்போவதற்று அறிகுறியாகும்.
சனி பிணம் துணை தேடும் என்பார்கள். ஒருவர் சனிக்கிழமையில் இறந்துவிட்டால் அடுத்த சனிக்கிழமையில் மேலும் ஒரு இழப்பு நிகழும். சைவர்கள் சனிக்கிழமைகள் இறந்தவர்களை கொண்டு செல்லும் போது ஒர தேங்காயையும், அசைவர்கள் ஒரு கோழியையும் கட்டிக் கொண்டு செல்வது பரிகாரமாகும்.
ஒருவருடைய ஜெனன ராசிக்கு 12 ல் சனி வரும் போது ஏழரை சனி தொடங்குகிறது. ஒவ்வொரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் சந்திரனுக்கு 12,1,2,ல் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரை சனி என்று கூறப்படுகிறது. மாளிகையில் வசிக்கும் மன்னரைகூட மண்குடிசைக்கு தள்ளக்கூடிய வலிமை சனிக்கு உண்டு. சனி இறைவனையும் விட்டு வைப்பதில்லை என புராணங்கள் கூறுகின்றன.
சனி பகவான் ஜெனன காலத்தில் நீசம் பெற்றோ, பலஹீனமாக அமையப் பெற்றோ இருந்தாலும், பிறக்கும் போதே ஏழரைச் சனி, அஷ்டமச் சனியில் பிறந்தவர்களுக்கும் கோட்சார ரீதியாக ஏழரைச் சனி, அஷ்டம சனி வரும் காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும்.
இப்படி இன்னும் பல நம்பிக்கைகள் இருக்கின்றன. அவர்களின் நம்பிக்கைகள் அவர்களுக்கு! அதை நாம் விமர்சிக்க விரும்பவில்லை! அதற்கு எந்த தேவையும் நமக்கில்லை!
ஆனால் அந்த நம்பிக்கைகளை நமது மார்க்கத்தில் நம்மவர்கள் தினிப்பதை தான் நாம் கடுமையாக விமர்சிக்கின்றோம்!
சனி பிணம் தனியே போகாது
வெட்டியானுக்கு இலாபம்
கோழி!
என்ற ஹைக்கூ கவிதை மிகப் பிரபலமானது! இந்த கவிதைக் கேற்ப நம்மில் யாரேனும் சனிக்கிழமைகளில் இறந்துவிட்டால் அல்லது வெள்ளிக்கிழமை அன்று இறந்து சனிக்கிழமை அடக்கம் செய்யும் போதும் அந்த ஜனஸாவுடன் கோழியையும் சேர்த்து அனுப்புகின்றனர்!
இறந்தது பெண்ணாக இருந்தால் பெட்டைக் கோழியையும் ஆணாக இருந்தால் சேவல் கோழியையும் அனுப்புகின்றனர்!
காரணம் மேற்கூறப்பட்ட மாற்று மதத்தவர்களின் நம்பிக்கை!
இந்த நம்பிக்கை ஒருவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றும் செயல் என்பதை அறியாமல் படிக்காத பாமரர் முதல் படித்த மாமேதைகள் வரை நமதூரில் இந்த மூட நம்பிக்கையைப் பின்பற்றுகின்றனர்!
காரணம்! பயம்! பயம்! பயம்!
நம்ம வீட்டில் இன்னொரு இழவு விழுந்தால் என்ன செய்வது என்ற பயம்!
இத்தகைய நம்பிக்கையுடையவர்கள் தங்களின் இஸ்லாமிய பெயர்களை மாற்றிவிட்டு இந்த நம்பிக்கைகளையுடைய மாற்று மதத்தவர்களின் பெயர்களை வைத்துக் கொள்வது தான் நமது மார்க்கத்திற்கு நல்லது!
காரணம் இத்தகைய நம்பிக்கையுடையவர்கள் இஸ்லாத்தைவிட்டே வெளியேறியவர்களாவார்கள்!
அல்லாஹ் கூறுகின்றான்:
அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? (அல்-குர்ஆன் 23:80)
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்-குர்ஆன் 39:42)
ஒருவனை உயிர் வாழச் செய்வதும் மரணிக்கச் செய்வதும் அல்லாஹ்வே என்ற அடிப்படை இஸ்லாமிய அறிவுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் படைப்பாகிய சனிக் கிரகம் அந்தக் காரியத்தைச் செய்கிறது என்ற நம்பிக்கை தான் ஒருவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் செயல்!
சனிக் கிரகம் மட்டுமல்ல! இந்த சூரியக் குடும்பத்திலுள்ள அனைத்து கிரகங்கங்களையும் இதுவல்லாத இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் அதில் உள்ள கோடானு கோடி நட்சத்திர மண்டலங்களையும், கிரகங்களையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ்வே என்ற நம்பிக்கை தான் ஒருவனை இஸ்லாமிய வட்டத்திற்குள் சேர்க்கும்!
இறைவனின் படைப்பாகிய சனி கிரகம் மனிதனின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது என்ற பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சிந்தனையிலிருந்து முஸ்லிம்கள் வலிகியிருந்து சனிக் கிழமைகளில் இறந்தவரின் ஜனாஸாவிற்கு பின்னால் கோழிகளை அனுப்புவதை தவிர்த்து உண்மையான முஸ்லிம்களாக வாழ முற்படுவோமாக!