இணை வைத்தல்
ஜுல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையம், சவூதி அரேபியா, வெளியிட்ட,
‘மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்!’ எச்சரிக்கை! என்ற நூலில் இருந்து…
நூலாசிரியர்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
இணை வைத்தல்
விலக்கப்பட்டவைகளில் பொதுவாகவே இதுவே மிகப் பெரியதாகும்.
அபூபக்ரா (ரலி) அறிவிப்பதாவது:
“பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்!
அதற்கு நாங்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம்.
அதற்கவர்கள்,
- அல்லாஹ்வுக்கு இணை வைப்பது,
- பெற்றோரை நிந்திப்பது
என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து,
அறிந்து கொள்ளுங்கள்!
- பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான்,
அறிந்து கொள்ளுங்கள்!
- பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான்”
என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள்.
புகாரி (5976), முஸ்லிம்.
எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்; இணைவைத்தலைத் தவிர. எனவே, இணைவைத்தலுக்கு பிரத்தியேகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“திண்ணமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்” (4:48)
இணை வைத்தலில் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடக்கூடிய மிகப் பெரும் இணை வைத்தலும் உண்டு. இத்தகைய இணை வைத்தலைச் செய்பவர் தவ்பா செய்யாமல் இறந்து விட்டால் நிரந்தர நரகத்தில் வீழ்வார். முஸ்லிம்கள் வாழும் பெரும்பாலான ஊர்களில் பரவலாகக் காணப்படுகின்ற இந்த இணை வைத்தலின் வகைகளை பின்வரும் அத்தியாயங்களில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.