குர்பானி கொடுப்பவரின் குடும்பத்தார்களும் நகம், முடி களைவது கூடாதா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி); ஆதாரம்: நஸயீ (4361)

“(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம்.”

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி); ஆதாரம்: முஸ்லிம் 3997

மேற்கண்ட நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் அனைத்தும் குர்பானி கொடுக்க இருப்பவரைக் குறித்தே வருகின்றன. எனவே, குடும்பத்தின் தலைவர் தன்னுடைய குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பதால் அவர் தான் மேற்கண்ட சட்டங்களுக்கு உட்பட்டவராகின்றார்.

மேற்கண்ட நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் அனைத்தும் யார் சார்பாக குர்பானி கொடுக்கப்படுகின்றதோ அதாவது, குடும்ப உறுப்பினர்களைக் குறித்து வரவில்லை!

எனவே, “துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்ற சட்டம் குர்பானி கொடுப்பவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பொருந்தாது.

அவ்வாறு குர்பானி கொடுக்க இருப்பவரின் குடும்ப உறுப்பினர்களும் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரையில் முடி, நகம் களைவது கூடாது என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினர்களுக்கு கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால், அது போன்ற கட்டளைகளைப் பார்க்க முடியவில்லை!

அல்லாஹ் அஃலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed