சூனியம் செய்வது
ஜுல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையம், சவூதி அரேபியா, வெளியிட்ட,
‘மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்!’ எச்சரிக்கை! என்ற நூலில் இருந்து…
நூலாசிரியர்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
சூனியம் செய்வது
பரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியமும் அடங்கும்.
சூனியம் செய்வது ‘குஃப்ர்’ எனும் இறை நிராகரிப்பாகும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை.
சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
“(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்” (2:102)
மேலும் கூறுகிறான்:
“சூனியக்காரன் எங்கு சென்றாலும் (ஒரு போதும்) வெற்றி பெறமாட்டான்” (20:69)
சூனியம் பார்க்கச் செல்பவன் காஃபிராவான்.
அல்லாஹ் கூறுகிறான்:
“அவர்கள் சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் ஒருபோதும் நிராகரிப்பவர் – காஃபிர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று கூறி எச்சரிக்காத வரையில் எவருக்கும் அந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை” (2:102)
சூனியக்காரன் பற்றிய சட்ட நிலை, அவனைக் கொலை செய்ய வேண்டும். அவனுடைய சம்பாத்தியம் விலக்கப்பட்டது, மோசமானது என்பதாகும். அறிவீனர்களும் அக்கிரமக்காரர்களும் பலவீனமான ஈமான் உடையவர்களும் சிலரின் மீது வரம்பு மீறுவதற்காக அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்காக சூனியம் செய்ய சூனியக்காரர்களிடம் செல்கிறார்கள்.
மேலும், மக்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சூனியத்தை எடுப்பதற்காக சூனியக்காரர்களிடம் செல்வதன் மூலம் ஹராமான செயலைச் செய்கிறார்கள். இத்தகையவர்கள் மீது கடமை என்னவெனில், அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் போன்ற அவனுடைய வார்த்தைகள் மூலம் நிவாரணம் தேட வேண்டும்.