சிந்திக்கும் ஆற்றலை சிதைக்கும் சூஃபித்துவம்

சூஃபித்துவம் என்றாலே அறிவுக்கு பொருந்தாத மூடக்கொள்கைகள் நிறைந்தது என்றும் சிந்திக்கும் ஆற்றல் உடையவர்கள் அந்தக் கொள்கையில் இருக்க இயலாது என்றும் கூறலாம்.

ஓரளவிற்கு சிந்திக்கும் திறனுள்ளவர்கள் அதில் சேர்ந்தால் கூட முரீது வியாபாரம் என்ற பெயரில் இவர்கள் அந்த முரீதை மூளைச் சலவைசெய்து அவர்களின் மூளையை மழுங்ககடித்து சுத்தமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லாத அளவிற்கு செய்து விடுவர்!

இதை நாமாக சொல்லவில்லை! முரீதீன்களின் உழைப்பிலே சுகமாக உட்கார்ந்துக் கொண்டு வயிறு வளர்க்கும் போலிகளான ஷைகுமார்கள் இவ்வாறு செய்தால் தான் அவர்களின் அந்த சூஃபியிஸக் கொள்கையில், சூஃபியிஸ தரீகத்தில் இருக்க முடியும் என்பதாக உளறி வைத்திருக்கின்றனர்.

இவர்களின் சுய சிந்தனையை மறுக்கின்ற இந்த கொள்கை என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்:

இவர்களின் இந்த வழிகெட்ட சித்தாந்தத்தின்படி தரீக்கத்துந் நார் என்ற நரகத்தின் பாதையிலே பயனிக்கும் இவர்களின் ஷைகுமார்களிடத்தில் முரீது வாங்கிய ஒருவன் அவர்களின் போலி ஷைகு கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித மறுப்போ, வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டும்! அப்பொழுது தான் அவர்களுக்கு மோட்சத்தை இந்த போலி குருநாதர் பெற்றுத் தருவார் என்று அப்பாவி முரீதீன்களுக்கு இவர்களிடம் சேருகின்ற ஆரம்பத்திலேயே கூறி அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக சிதைத்து விடுகின்றனர் இந்த போலி செய்குமார்கள்!!

சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல்,

‘ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷேக்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும்! அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ இருக்கக் கூடாது! அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக் கூடாது! அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவி உட்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர், அறிவைத்தேடல் போன்ற எவற்றிலுமோ ஈடுபடக் கூடாது!

(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)

அல்லாஹ்வின் அருள்மறைக் கூட கண்மூடித்தனமாக தன்னைப் பின்பற்ற சொல்லாமல் சிந்தித்து தெளிவு பெறுமாறு மனிதனின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது! ஆனால் இந்த அறிவை அடகுவைத்த கூட்டமோ, தங்களின் முரீதீன்களின் சிந்தனைச் சக்தியை சிதைத்துக் கொண்டிருக்கின்றது!

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் – சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம். (அல்-குர்ஆன் 6:126)

நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்-குர்ஆன் 15:75)

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம் நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அல்-குர்ஆன் 16:44)

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்-குர்ஆன் 4:82)

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்-குர்ஆன் 39:27)

இவ்வாறு இன்னும் பல வசனங்களில் மனிதர்களின் சிந்தனையைத் தட்டி எழுப்புகின்ற விதத்திலே அல்லாஹ் தன்னுடைய வேத வசனங்களை அருளியிருக்கின்றான்!

ஆனால் வழிகேட்டில் உழன்றுக் கொண்டிருக்கும் சூஃபித்துவ ஷைகுகளோ தங்களின் முரீதீன்கள் சிந்திக்கவே கூடாது என்பதாக பிதற்றிக் கொண்டுள்ளனர்!

வழிகெட்ட தரீக்காவிலே சேர்ந்த ஆரம்பத்திலேயே இவ்வாறு முளை சலவை செய்யப்பட்ட அப்பாவி முரீது அந்த போலியான செய்குமார்கள் செய்கின்ற மார்க்க முரணான காரியங்களையெல்லாம் எப்படி தட்டிக் கேட்பார்கள்?

அவ்வாறு தாங்கள் செய்கின்ற தகிடுதத்தங்களைப் பற்றி தங்களின் முரீதீன்கள் கேட்கக்கூடாது என்பதற்காகத் தானே இதுபோல் பயமுறுத்தி முளை சலவை செய்கின்ற சித்தாத்தங்களை சூஃபித்துவ கோட்பாடுகளாக ஆக்கிவைத்துள்ளனர்?

இதை நாமாக சொல்லவில்லை! இந்த அசிங்கங்களையும் ஆண்மீகம் என்ற பெயரிலே இவர்களே உளறி வைத்துள்ளனர்!

ஷேக் றிபாயிஃ கூறுவதைப் பாருங்கள்..

‘ஒரு முரீதுக்கு இருக்க வேண்டிய பண்புகளிலொன்றுதான் தனது ஷேக் எப்போதும் நேரிலும், மறைவிலும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக உணரவேண்டும். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊழியஞ் செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். எந்த வேலையைச் செய்யும் போதும் அவரது நினைவு மனதில் வரவேண்டும்.

அவர் செய்யும் எந்தவிதமான மோசமான காரியங்களையும் கண்டு அதைக் கண்டிக்கக் கூடாது. ஒரு முறை இப்படித்தான் ஒரு ஷேக்கின் வீட்டுக்கு அவரது முரீதானவர் சென்ற போது தனது ஷேக் ஒரு அழகிய பெண்ணிடம் சல்லாபித்து, அவளைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு உடலுறவில் ஈடுபட்டிருக்கக் கண்டார். இதைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற அவர் அவசரப் பட்டு ‘என்ன காரியம் பண்ணிவிட்டீர்’? என ஷேக்கைக் கண்டித்து விட்டார்.. உடனே அவர் ஷேக்கிடமிருந்து கற்ற அனைத்து நெறிகளும் அவரிடமிருந்து அந்த இடத்திலேயே பறிக்கப்பட்டுவிட்டன!

(நூல்: கிலாததுல் ஜவாஹிர்; பக்கம் :278)

இப்படியாக அந்த அப்பாவி முரீதுகளை பயமுறுத்தி போலிகளான இந்த ஷைகுமார்கள் காமக் களியாட்டங்களிலும் அந்நிய பெண்களுடன் சரச சல்லாபங்களிலும் ஈடுபட்டால் கூட அதை முரீது பார்த்து எதுவும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு குரு – சிஷ்யன் பக்தியை ஊட்டி போலி ஷைகுமார்களின் அடிமைகளாக முரீதுகளை மாற்றுகின்றனர்!

அடுத்ததாக ஒருவரை நேரிலும் மறைவிலும் எந்நேரமும் சதா கண்காணித்துக் கொண்டிருப்பவன் அல்லாஹ் அல்லவா?

அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான் (அல்-குர்ஆன் 2:110)

அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான் (அல்-குர்ஆன் 3:15)

இதுபோல் இன்னும் பல வசனங்களில் அடியார்களை எந்நேரமும் உற்று நோக்கக்கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதாகக் கூறுகின்றான். பார்க்கவும்: 3:20, 5:71, 8:39, 17:17, 25:20, 31:28, 33:9, 34:11, 35:45, 41:40, 42:27, 57:4, 60:3, 84:15)

அல்லாஹ் தனக்கு மட்டுமிருப்பதாக கூறும், ‘அடியார்களை எந்நேரமும் உற்று நோக்கும் ஆற்றலை’ இவர்கள் தங்களின் ஷைகுகளுக்கு இருப்பதாக எப்படி கூறுகின்றார்கள்?

ஓஹ்! சிந்திக்கும் அறிவை செய்குமார்களிடத்தில் அடகுவைத்துவிட்ட இவர்களுக்குத் தான் “எல்லாமே அல்லாஹ்வாயிற்றே!” நீயும் அல்லாஹ்! நானும் அல்லாஹ்! பிறகெங்கே இன்னொரு அல்லாஹ்?

நவூதுபில்லாஹ்!

வழிகேட்டின் மொத்த வடிவம் தான் இந்த சூஃபித்துவமும் அதன் கொள்கைகளும் என்றால் மிகையாது!

முஸ்லிம்கள் இவர்களின் வழிகேடுகளை விட்டும் தூர விலகி தங்களின் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!

உதவிய நூல்கள்:
1) சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும்
2) Reality of Sufism in the light of Quraan and Sunnah

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “சிந்திக்கும் ஆற்றலை சிதைக்கும் சூஃபித்துவம்”
  1. the essay about soufism [purer] excellent, the big shame is some islamic scholor also falls in sorfism,

    basheer ahamed, sivagangai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *