அத்தியாயங்களின் விளக்கம் – 21 முதல் 30 வரை
21) சூரத்துல் அன்பியா – நபிமார்கள்
112 வசனங்களைக் கொண்ட அல்-குர்ஆனின் 21 வது அத்தியாயமாகும். அல்லாஹ் பல நபிமார்களின் வரலாற்றை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.
“இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!” (21:85)
யூனுஸ், ஸகரிய்யா, இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் (அலை) என பல நபிமார்களை குறிப்பிடுகின்றான்.
22) சூரத்துல் ஹஜ் – ஹஜ் கிரியை
22 வது அத்தியாயம் 78 வசனங்ளைக் கொண்டது. நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு புனித ஆலயத்தை சுத்தம் செய்துவிட்டு பின்வருமாறு கட்டளை இடுமாறு ஏவுகின்றான்.
“ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).” (22:27)
23) சூரத்துல் முஃமினூன் – நம்பிக்கையாளர்கள்
118 வசனங்களை கொண்டுள்ள 23 வது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் நம்பிக்கையாளர்களின் பண்புகளை பட்டியலிடுகின்றான். தொழுகை, வீணான பேச்சுக்களை தவிர்த்தல், ஜக்காத், கற்பை பாதுகாத்தல், அமானிதங்களை பேணுதல், இறுதியாக மீண்டும் தொழுகையை ஞாபகப்படுத்துகின்றான்.
இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசை பின்வருமாறு கூறுகின்றான்:
இத்தகையோர் தாம் (சவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்:
“இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்” (23:10,11)
24) சூரத்துந் நூர் – வெளிச்சம்
64 வசனங்களை கொண்ட 24 அத்தியாயம் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட இட்டுக் கட்டு சம்பவத்தை குறிப்பிட்டு ஆயிஷா தூய்மையானவர்கள் என்பதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முகமாக 11-26 வசனம் வரை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் இருந்து வஹியின் மூலம் அறிவித்து நயவஞ்சகர்களின் முகத்திரையை கிழித்தான்.
25) சூரத்துல் புர்கான்- பிரித்தறிவிக்கும் வேதம்
அத்தியாயம் 25; வசனங்கள் 77
அர்-ரஹ்மானின் அடிமைகளின் பண்புகளை இவ்வத்தியாயத்தின் 64 வது வசனம் தொடக்கம் 76 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
“உலகத்தாரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தை, அசத்தியத்தை) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்” (25:01)
26) சூரத்துஷ் ஷுஅரா – கவிஞர்கள்
அத்தியாயம்: 26; வசனங்கள்: 227
நபி மூஸா (அலை), இப்றாஹீம் (அலை) ஆகியோரின் வரலாற்றை குறிப்பிடும் இந்த அத்தியாயத்தின் இறுதியில்,
“இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்”
என 224 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
27) சூரத்துந் நம்ல் – எறும்பு
அத்தியாயம் 27; வசனங்கள் 93
ஸுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய அருட்கொடைகளை வழங்கியிருந்தான். உலகில் உள்ள ஜீவராசிகளை வசப்படுத்திக் கொடுத்து அவை பேசும் மொழியையும் கற்றுக் கொடுத்தான். ஓர் எறும்பு பேசிய சம்பவத்தை இவ்வத்தியாயத்தின் 18 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
“எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ‘எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)’ என்று கூறிற்று.”
28) சூரத்துல் கஸஸ் – வரலாறு
அத்தியாயம் 28; வசனங்கள் 88
அல்-குர்ஆனின் பல இடங்களில் நபி மூஸா (அலை) அவர்களது சமுதாயத்தை பற்றிய வரலாற்றை அல்லாஹ் எமக்கு அதிகமதிகம் ஞாபகப்படுத்துவதன் மூலம் அந்த சமுதாயத்தை போன்று நாமும் நன்றி கெட்டவர்களாக மாறிவிடக் கூடாது என்பதனை சுட்டிக் காட்டுகின்றான்.
“நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.” (28:03)
29) சூரத்துல் அன்கபூத் – சிலந்தி
அத்தியாயம் 29; வசனங்கள் 69
அல்லாஹ் அல்லாதோரை அழைத்து தமது வணக்கங்களை திருப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு உதாரணமாக சிலந்தியின் வீட்டை (வலையை) குறிப்பிடுகின்றான்.
“அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும்” (29:41)
30) சூரதுர் ரூம் – ரோம் தேசம்
அத்தியாயம் 30; வசனங்கள் 60
உலக வல்லரசாக இருந்த ரோம் தேசம் தோல்வியுறுவது தொடர்பாகவும் இறை நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் முன்னறிவிப்பு இவ்வத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம் பெருகின்றது. இச்செய்தி முஸ்லிம்களுக்கு மகிழ்சியளித்தது.
“ரோம் தோல்வியடைந்து விட்டது; அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்” (30:2-3)