சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூவர்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: –
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.
அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்” என்று கூறினார்.
உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன.
பிறகு அவ்வானவர், ‘எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடு தான்… (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று கூறினார்.
பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்” என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது.
அவ்வானவர், ‘எச்செல்வம் உனக்கு விருப்பமானது?’ என்று கேட்டார். அவர், ‘மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, ‘இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்” என்று கூறினார்.
பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான்.
அவ்வானவர், ‘உனக்கு எச்செல்வம் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.
பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று கூறினார்.
அதற்கு அந்த மனிதர், ‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார்.
உடனே அவ்வானவர், ‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?’ என்று கேட்டதற்கு அவன், ‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான்.
உடனே அவ்வானவர், ‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று கூறினார்.
பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான்.
வானவரும், ‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று கூறினார்.
பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான என் வாழ்வதாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்” என்று சொன்னார்.
(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்” என்று கூறினார்.
உடனே அவ்வானவர், ‘உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்” என்று கூறினார் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
ஆதாரம் : புகாரி.