அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 5
மார்க்க விஷயங்களில் எளிதாக நடந்து கொள்ளுங்கள்; மக்களை வெறுப்பேற்றாதீர்கள்!
“(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றி விடாதீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.
போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதே!
அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார்கள் : “நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் ‘அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் ‘மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்’ என்று பதிலளித்தார்கள். ஆதாரம் : புகாரி.
அண்ணலார் (ஸல்) அவர்களின் மன்னிக்கும் பெருந்தன்மை!
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக எதிலும் (யாரையும்) ஒரு பேதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தாலே தவிர (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.) அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.
நபி (ஸல்) அவர்களின் நளினம்!
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் : “ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். ஆதாரம் : புகாரி.
நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களிடம் காட்டிய பரிவு!
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் : “நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் ‘அபூ உமைரே! பகுதி உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?” என்று கூடக் கேட்பார்கள். ஆதாரம் : புகாரி.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் : “நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்” ஆதாரம் : புகாரி.
இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்: –
“இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
விருந்துபசாரம் மூன்று நாட்களாகும்!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும். (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர் (ரலி), ஆதாரம் : புகாரி.
அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழுங்கள்!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
மனிதன் யார் மீது அன்புவைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்: –
“இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்றார்கள்.” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.