அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 8

தஃவாவின் போது எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்?

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிய போது அவர்களிடம்,

‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள்.

அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.

அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.

அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

ஏகத்துவவாதியாக இருக்க வேண்டியதன் அவசியம்!

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள்.

நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும்.

(அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க,

நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்’ என்று பதிலளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)

மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்” என ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

இரக்கமுடையவர்களுக்கே அல்லாஹ் இரக்கம் காட்டுவான்!

உசாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களின் புதல்வியரில் ஒருவரின் (ஸைனப் (ரலி) அவர்களின்) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ ஸைனபிடம் சென்று,

‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியது தான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச் சொல்’

என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால், அவர்களின் புதல்வியார், (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கண்டிப்பாக வரவேண்டுமெனச் சொல்லி தம் தூதுவரை மீண்டும் அனுப்பிவைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து ஸஅத் இப்னு உபாதா(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி) ஆகியோரும் எழுந்தனர். (அங்கு சென்றவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் அக்குழநதை தரப்பட்டது. அப்போது தோல் பைக்குள் உள்ள காற்றைப் போன்று அது (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைச் சொரிந்தன.

அப்போது ஸஅத் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்களே!)’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,

‘இது அல்லாஹ் தன் அடியார்களில் உள்ளங்களில் (இயல்பாகவே) வைத்துள்ள இரக்க உணர்வாகும்; அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்களுக்கே இரக்கம் காட்டுவான்’

என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்ததாகக் கூறுகிறவர் பொய்யுரைத்துவிட்டார்!

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஆயிஷா (ரலி) அவர்கள்,

‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103).

மேலும்,

முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’

என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)’ என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

‘இன்னும் அதிகம் இருக்கிறதா? எனக் கேட்கும் நரகம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்போது நரகம், ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும்;

இறுதியில் அகிலங்களின் அதிபதி (யான அல்லாஹ்,) நரகத்தில் தன்னுடைய பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக் கொள்ளும் பிறகு,

‘போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!’ என்று கூறும்.

சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான்” என அனஸ் (ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மூன்று வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: புகாரி)

வாரி வழங்குவதால் வற்றாத அல்லாஹ்வின் கரம்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. இரவும் பகலும் (மழை மேகத்தைப் போல் அது தன் அருள மழையைப் பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனுடைய கரத்திலுள்ள (செல்வத்)தை வற்றச் செய்து விடவில்லை என்பதைப் பார்த்தீர்களா? வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு (முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்), நீரின் மீது இருந்தது. அவனுடைய இன்னொரு கரத்தில் தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; அவனே உயர்த்துகிறான்”

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

அல்லாஹ் ரோஷமுள்ளவன்!

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்:

ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், ‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்’ என்று சொல்ல, இச்செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள்,

‘ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் தன் ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்) அனைத்தையும் தடைசெய்துவிட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகிறவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. எனவேதான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புகிறவர் வேறெவருமில்லை. எனவே தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” (ஆதாரம்: புகாரி)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *