ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு.
ஸப்க் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹிஜ்ரி 1433-8-26 ல் வெளியான செய்தி.
ரியாத் பகுதியில் நடந்த நெகிழவூட்டும் சமப்வம்!:
இருபது வயதே நிறைந்த இளம் பெண் ஸுஜுதில் இருக்கும் போது இவ்வுலகத்தை விட்டு பிரிந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாகும். அவரது கணவர் “நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் ஆணையத்தில்” பணிபுரிகின்றார் அவருக்கு தனது மனைவியின் இத்திடீர் பிரிவு கடும் திடுக்கத்தை ஏற்படுத்தியது.
அவரது மனைவியை பொறுத்த வரையில் தன்னை நன்மையான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்கின்ற, இஸ்லாமிய அழைப்புப் பணி செய்கின்ற, அல்குர்ஆனை மனனமிட்டு வரக்கூடிய ஒரு சிறந்த பெண்ணாவாள். ஒவ்வொரு நாள் காலையிலும் தனது கணவருடன், தான் கற்கும் பல்கலைகழகத்திற்குச் செல்வது அவளது வழமை. அன்றும் தனது கணவருடன் செல்வதற்கு ஆயத்தமாகி லுஹாத் தொழுகையை தொழுது வருவதாக கணவரிடம் கூறிவிட்டு தொழுகைக்குச் செல்கிறாள். ஆனால் அது அவள் தொழும் இறுதித் தொழுகை என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கணவர் வேறு அலுவல்களில் ஈடுபட்டுவிடுகின்றார், நீண்ட நேரமாகியும் மனைவி திரும்பாததை பார்த்து மனைவி தொழுத இடத்திற்கு வருகின்றார். மனைவியின் ரூஹ் ஸுஜுதிலே பிரிந்திருப்பதைக் கண்டு திடுக்குறுகின்றார்.
ஆம் அன்புக்குரியவர்களே! அல்லாஹ்வின் வார்த்தைகள் உண்மையானதாகும், “மேலும் எந்த ஒரு ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கேற்ப அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை” (ஆல இம்ரான் 3: 145).
தொழுகையில் ஸுஜுத் என்பது அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கும் நிலையாகும், இந்நிலையில் உயிர் கைப்பற்றப்படுவதென்பது எவ்வளவு உயரிய பாக்கியமாகும். நாம் நமது இறுதி முடிவு சிறந்ததாக அமையவே அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திக் வேண்டும்.
சினிமா நடிகர்கள், நடிகைகள் மீது மோகங்கொண்டு அவர்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் நமது இளம் சமூகமே! இந்நிகழ்வில் நமது வாழ்க்கைக்கு எத்தனை எத்தனை படிப்பினைகள் என்பதை சிந்திப்போமாக!.
அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள்: “ஒரு அடியான் எந்நிலையில் மரணிக்கின்றானோ அதே நிலையில் தான் நாளை மறுமையில் எழுப்பபடுவான்”. (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), முஸ்லிம்).
நமது இறுதி முடிவும் சிறந்ததாக அமைவதற்கு வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
தமிழாக்கம்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி