இறுதித் தூதரின் அழகிய பொறுமை

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை படிக்கும் எந்த ஒரு மனிதனாலும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பிலும், அவர்களின் வரலாற்றைப் படிப்பவர் பல்வேறு பிரயோசனங்களையும் அடைந்து கொளவார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. குறிப்பாக நபியவர்களது வாழ்க்கையில் அவர்கள் கடைபிடித்த பொறுமை மானிடத்திற்கே பெரும் முன்மாதிரியாக இருப்பதை அவதானிக்கலாம்.

இறைவனின் ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்வதில் பொறுமை, குடும்ப வாழ்க்கையில் பொறுமை, பாசமிகு உறவுகளை இழக்கும் சந்தர்ப்பத்தில் பொறுமை, எதிரிகளை போர் களத்தில் சந்திப்பதில் பொறுமை, நல்லறங்களை செய்து இறை திருப்தியை பெற்றுக் கொள்வதில் பொறுமை, தீயவைகளை விட்டு தன்னை விலக்கிக் கொள்வதில் பொறுமை என நபியவர்கள் தனது வாழ்நாளில் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொறுமை காத்தார்கள் என்றால் அது மிகையாகாது.

பொறுமையை உபதேசம் செய்வதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் தங்களது நடைமுறை வாழ்விலும் இப்படித்தான் பொறுமை காக்க வேண்டும் என்று செயற்படுத்திக் காட்டுவதிலும் பின் நிற்க்கவில்லை.

மக்காவில் 13 வருடங்கள் முஷ்ரிகீன்களை (இணைவைப்பாளர்களை) எதிர்கொள்வதிலும், மதீனாவில் 10 வருடம் முனாஃபிகீன்களை (நயவஞ்சகர்களை) எதிர்கொள்வதிலும் என்று மொத்த 23 வருட நபித்துவ வாழ்க்கையிலும் பொறுமைக்கு உதாரண புருஷராக நபியவர்கள் வாழ்ந்து மறைந்தார்கள். நபியவர்களால் இந்த அளவு பொறுமையான ஒரு வாழ்க்கை வாழ முடிந்தது என்றால் அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு அவ்வப்போது பொறுமையைக் கொண்டு வஹியின் மூலம் உபதேசித்துக் கொண்டு இருந்தமை மிகப் பெரும் காரணமாய் அமைந்தது.

அல்-குர்ஆன் நெடுகிலும் இறைவன் தனது நபி துவண்டு விடக் கூடாது என்பற்காக அவ்வப்போது ‘நபியே நீர் பொறுமையை கடைபிடிப்பீராக!’ என்ற ஏவலை 14 இடங்களில் ஞாபகப்படுத்துவதை பார்க்கின்றோம். இவ்வாறு நேரடியாக ‘நீ பொறுமைக் கடைப்பிடிப்பீராக’ என்று இறைவனால் நபியவர்களுக்கு ஞாபகப்படுத்தப்பட்ட அல்-குர்ஆனிய வசனங்கள் இறக்கப்பட்ட தொடரை அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளனர். அந்த தொடரை நாம் இப்போது அவதானிப்போம்.

1) நபிப்பட்டம் கிடைத்த ஆரம்ப நாற்களில் இவ்வாறு அல்லாஹ் பொறுமையைக் கொண்டு உபதேசம் செய்தான்.

“இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.” (74:7)

2) மக்காவாசிகளின் ஏகத்துவத்தை ஏற்க மறுக்கும் போது..

“(நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக. அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.” (10:109)

3) முன் சென்ற நபிமார்களின் வரலாறுகளை நினைவுகூர்ந்து விட்டு எல்லாம் வல்ல அல்லாஹ் நபியைப் பார்த்து பின்வருமாறு உபதேசிக்கின்றான்.

“(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம். நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).” (11:49)

4) நபியே நீங்களும், உங்களை பின்பற்றுபவர்களும் இந்த மார்க்கத்தில் உறுதியாக இருந்து இறை வணக்கங்களினூடாக இறைநெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று முன் சென்ற வசனங்களில் கூறிவிட்டு, இதற்கு பொறுமை தேவை என்பதை இந்த வசனத்தில் விளக்குகின்றான்.

“(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.” (11:115)

5) மக்கத்து குறைஷிகள் ஏகத்துவத்தை ஏற்காமல் மறுப்பது, அவர்களின் சூழ்ச்சிகளின் போது கவலை வேண்டாம். பொறுமை வேண்டும் என்கின்றான் எல்லாம் வல்ல அல்லாஹ்.

“(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது. அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் – அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.” (16:127)

6) முஸ்லிம் அல்லாதவர்கள் உம்மை கேளி, கிண்டல் செய்வது, உம்மை வசைபாடுவது போன்ற நடவடிக்கைகளின் போதும் பொறுமை அவசியம் என்கின்றான் இறைவன்.

“ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக! இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக. மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.” (20:130)

7) இறை நம்பிக்கையற்றவர்களின் பேச்சு உம்மை கலக்கமடையுமாறு செய்திட வேண்டாம்!

“ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.” (30:60)

8) தொடர்ந்தும் இறைநிராகரிப்பாளர் விஷயத்தில பொறுமையை கடைபிடிக்குமாறு இறைவன் கூறுகின்றான்.

“இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவரகா இருந்தார்.” (38:17)

9) அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியானதாகும் எனவே நீர் பொறுமை காப்பீராக என கூறுகின்றான்.

“ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!” (40:55)

10) உலுல் அஸ்ம் (திடசித்தமுடைய நபிமார்கள்) அதாவது நபி நூஹ், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகிய நபிமார்களைப் போன்று பொறுமை கொள்வீராக!

“(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேணிடிதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?” (46:35)

11) உம்மை அவர்கள் ஒன்றும் செய்திட முடியாது. நீர் எமது கண்கானிப்பில் உள்ளீர். நீர் பொறுமை காக்க வேண்டும்.

“எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு (துதி) செய்வீராக.” (52:48)

12) அழகிய பொறுமையை பற்றி அல்லாஹ் ஞாபகப்படுத்துகின்றான்.

“எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக! நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர். ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.” (70:5-7)

13) அவர்கள் உமக்கெதிராக அள்ளி எறியும் வசைபாடல்களின் போது அழகிய முறையில் மக்கத்து குறைஷிகளாகிய அந்த மக்களை வெறுப்பீராக என அல்லாஹ் ஏவுகின்றான்.

“அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான – முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.” (73:10)

14) கடைசியாக…

“ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக. அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.” (76:24)

இவ்வாறு இறைவழிகாட்டல்களுடன் தனது எல்லா நிலைகளிலும் பொறுமை காத்த எம் கோமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறைவனுடைய விஷத்தில் யாராவது அத்துமீறும் போது, குறிப்பாக இறை சட்டங்களில் மற்றும் இறைவனுக்கு இணைகற்பிக்கக் கூடிய விஷயங்களில் மிகக் கடுமையாக கோபப்படுவர்கள். மேலும் குறித்த வார்த்தை மக்களின் பார்வையில் சாதாரண வார்த்தையாக இருந்தாலும் உடனே அதனை கண்டித்து திருத்திக் கொடுக்கக் கூடியவர்களாக நபியவர்கள் இருந்தார்கள் என்பதனையும் ஒரு முஸ்லிம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

<

p style=”text-align: justify;”>மௌலவி M. ரிஸ்கான் முஸ்தீன் மதனி
03-01-2019

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *