வெட்கம் பற்றி நபியவர்களின் கூற்று

மனிதனுக்கு வெட்கம் இல்லாது போகின்ற போதுதான் கீழ்தரமான எல்லா விடயங்களையும் செய்ய தலைப்படுகிறான். கீழ்தரமான விடயங்கள் சமூக விழுமியங்களைத் தகர்க்க வல்லது. மற்றும் சமூகச் சீர்கேடுகளுக்கு சாலை அமைக்கவல்லது. எனவேதான் முஹம்மது (ஸல்) அவர்கள் இப்படி வெட்கம் பற்றி உணர்த்துகிறார்கள்.

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

”நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை கடந்து சென்றார்கள். அவர் தன் சகோதரருக்கு, ”வெட்கப்படுதல்” பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ”அவரை விட்டு விடு! வெட்கம் என்பது, இறை நம்பிக்கையில் உள்ளதாகும்” என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘வெட்கம் என்பது, நல்லதைத்தவிர வேறொன்றைக் கொண்டு வராது என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ”வெட்கம் அனைத்தும் நல்லதே” என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது. (ரியாளுஸ்ஸாலிஹீன்: 682)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘இறைநம்பிக்கை (ஈமான்), எழுபது அல்லது அறுபது சில்லரை கிளைகளாகும். அவற்றில் மிக மேலானது, ”லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்வானது, பாதையில் உள்ள இடையூறு தரக்கூடியதை நீக்குவதாகும். மேலும் வெட்கம் கொள்வது, இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘கன்னிப் பெண் தன் அறையில் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பதை விட மிகக் கடுமையாக வெட்கம் கொள்பவர்களாக நபி(ஸல்) இருந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

One thought on “வெட்கம் பற்றி நபியவர்களின் கூற்று”

Leave a Reply to thahirmoulavi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *