பர்ஸக் என்னும் திரை
“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல் குஆன் 23:99-100)
இந்த வசனத்தின் மூலம் நாம் பெற வேண்டிய தெளிவுகளும், படிப்பினைகளும் ஏராளம் இருக்கின்றன.
இந்த வசனத்தில், இறந்து விட்ட ஒருவன் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப வருவதற்காக அனுமதி கேட்கிறான். அதுவும் நன்மையான காரியங்களைச் செய்வதற்காக. ஆனால் அவனுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு அல்லாமல் அவர்களுக்கு முன்னே பர்ஸக் என்னும் திரையையும் இட்டுவிடுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். இவ்வளவு தெள்ளத் தெளிவாக இறைவன் கூறியிருக்க, இறந்தவர்கள் ஆவியாக இவ்வுலகிற்கு வந்து சிலரை பிடித்து ஆட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம்களில் சிலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம், நல்ல நிலைமையில் இருக்கின்ற மனிதன் திடீரென்று அசாதாரணமான நிலைக்கு மாறி ஆட்டம் போடுதல், கூச்சல் போடுதல், பிற மொழிகளில் பேசுதல், தானாக சிரித்தல், மற்றவர்களை ஏசுதல், அச்சுறுத்தல் போன்ற காரியங்களைச் செய்வதால் தான். இந்த வகையான காரியங்களைச் செய்யும் ஒருவனைப் பேய் பிடித்து விட்டதாகவும், இறந்தவனின் ஆவி அவனின் உடலில் புகுந்து அவனை அவ்வாறு ஆட்டுவிப்பதாகவும் கூறி அவனுக்கு தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை செய்துக் கொடுத்து பாமர மக்களை ஏமாற்றி அதன் மூலம் வயிறு வளர்க்கும் ஏராளமான போலிகள் எல்லா சமுதாய மக்களிடமும், குறிப்பாக நமது சமுதாய மக்களிடம் அதிகம் இருக்கிறார்கள்.
மூட நம்பிக்கைகளை அறவே ஒழித்துக் கட்டிய மார்க்கம் நமது இஸ்லாமிய மார்க்கம். நமது மார்க்கத்தில் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இவைகள் அனைத்தும் மனிதனை வழிகெடுப்பதற்கான ஷைத்தானின் ஏமாற்று வேலைகள். மனநோயாளிகளையும், சித்தம் கலங்கியவர்களையும் பேய், பிசாசு பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாக நம்புபவரை, அவரது இந்த நம்பிக்கையானது தமது ஈமானையும் இழக்கச் செய்யும் குப்ரான காரியங்களைச் செய்வதற்குத் தூண்டிவிடும். இதை நம்பக் கூடிய ஒருவன், தனது உயிரினும் மேலான ஈமானை இழந்து, சமாதிகளில் கையேந்தி நிற்கச் செய்து இணைவைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்படமாட்டாத பெரும்பாவத்திற்கு ஆளாகி, பூசாரிகளிடமும், மாந்தரிகம் செய்யும் இறைமறுப்பாளாகளிடமும், தட்டு, தாயத்து போன்றவற்றைச் செய்து விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும் போலி ஆலிம்களிடமும் ஏமாந்து தமது பொருளாதாரத்தையும் இழந்து நிற்கும் கேவலமான நிலைமைக்கு தள்ளிவிடும். மரணித்த ஆத்மா இவ்வுலகில் எவ்வகையிலும் தொடர்பில்லாத பர்ஸக் உலகில் இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவற்றையெல்லாம் மீறி இவ்வுகிற்கு பேயாக, ஆவியாக வந்து மனிதனைப் பிடித்தாட்டுகிறது என்பதை நம்புவது, இறைவனின் வல்லமையில் குறை காண்பதாகும். இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்.
இன்னும் சிலர் வேறு வகையான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். அதாவது இறைவனின் நேசர்கள் எனப்படும் வலியுல்லாக்கள் எனப்படுவோர் அவர்களின் சமாதிகளில் உயிரோடு இருப்பதாகவும், மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதாகவும் நம்பி அவர்களிடம் பிரார்த்தித்து வருகின்றனர். இது இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணை வைத்தல் எனும் மாபெரும் பாவமாகும்.
மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு எவ்வித அதிகாரமுமில்லை என்றும் ஒருவருக்கு நன்மையையோ அல்லது தீமையையோ செய்யும் அதிகாரம் இல்லை என்றும் திருமறையின் பல வசனங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
அல்லாஹ் கூறுகிறான் :
“அல்லாஹ் எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை (தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்” (அல்-குஆன்: 39:42).
மேலும் நபி (ஸல்) அவாகள் கூறுகிறாகள்:
“உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள். தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திமதி ஹதீஸ் சுருக்கம்)
என் குடும்பத்தாடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க தீய ஆத்மா இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பாகளா? மாட்டார்கள். எனவே “மரணித்த மனிதனின் தீய ஆவி இவ்வுலகில் சுற்றித்திகிறது; அது பிற மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்டுவிக்கிறது” என்று கூறுவது எல்லாம் கற்பனையும், ஏமாற்று வேலையும் ஆகும்.
எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ள மரணித்த ஆத்மா இவ்வுலகில் பேயாக அலைகிறது, மனிதர்களைப் பிடித்தாட்டுகிறது என்று நம்புகின்றவனும், நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புவனும் மேற்கண்ட குர்ஆனின் வசனங்களையும், ஹதீஸையும் நிராகரித்தவர் போல் ஆவார்.
அல்லாஹ் இத்தகைய தீய செயல்களிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும். ஆமீன்.
ALLAHU YEN MANITHARKALUKKU MARATHIYAI KODUTHAAN ??