பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே
“நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)
“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்” (அல் குஆன் 23:18)
நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.
இதைப் பற்றி “The Bible, The Qura’n and Science” என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The qura’n and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-
Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர். உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)
இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார். 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.
ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டது என டாக்டா மாஸ் புகைல் கூறினார்.
இதுபோல் இன்னும் பல திருமறையின் வசனங்களை ஆய்வு செய்த டாக்டர் மாரிஸ் புகைல், தமது நூலின் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார். “நாம் எடுத்து விளக்கிய அறிவியல் உண்மைகளிலிருந்து, மனித முயற்சிகளுக்கு சவாலாக இருந்துக் கொண்டிருக்கும் இந்த குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்ற முடிவைத் தவிர வேறெதுவுக்கும் நம்மால் வரமுடியவில்லை”.
“நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.