மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்
அல்லாஹ் கூறுகிறான்: –
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)
மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் அமல்கள் செய்வதற்குரிய கால, நேரங்கள் எல்லாம் நாம் உயிருடன் இருக்கும் போது தான். மரணம் நம்மை வந்தடைந்தவுடன் நம்முடைய நன்மை தீமை பதிவேடுகள் மூடப்படும். ஆகவே நல்ல அமல்கள் செய்வதற்கு இதுதான் நேரமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன் அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள் இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள் இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்).
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), ‘நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள் இன்னும்: நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்! எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன’ (என்று கூறுவான்)” (அல்-குர்ஆன் 6:93-94)
“மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: ‘எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்’ என்று” (அல்-குர்ஆன் 8:50)
மரணமும், மண்ணறை வாழ்க்கையும் மறைவான விஷயங்களில் உள்ளவைகள். இறந்தவர் எவரும் திரும்பி வந்து அவர்களுடைய நிலைமையைப் பற்றி விளக்குபவர்களாக இல்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இந்த விஷயங்களைப்பற்றி கூறியிருக்க வேண்டும். கப்ரின் நிகழ்வுகளைப் பற்றி முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் ஹதீஸின் மூலமாக கூறியுள்ளார்கள். இதன் மூலம் மண்ணறையில் நமக்காக என்ன வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எனதருமை சகோதர, சகோதரிகளே! நாம் இவற்றை மிக மிக கவனமாகப் படித்து அந்த தவிர்க்க முடியாத இறப்பை சந்திப்பதற்கு நாம் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
-
அல்லாஹ்விடம் வருத்தப்பட்டு பாவமன்னிப்பு தேடக் கூடிய நேரம் இதுதான்!
-
நாளை என்பது வராமல் போகலாம்!
-
மரணம் நம்மை வந்தடைந்து விட்டால் மன்னிப்புக்கான கதவுகள் நிரந்தரமாக மூடப்படும்!
-
மறுபடியும் திரும்பி வந்து நல்ல செயல்கள் செய்வதற்கு சிறிதும் சந்தர்ப்பம் கிடைக்காது!
-
மண்ணறையின் வேதனையில் இருந்து வெற்றி பெறுவதற்கு அல்லாஹ்வுடைய வேதத்தை பொருளுணர்ந்து ஓதி அதன் படி அமல் செய்வதுதான் சிறந்த வழி!
-
முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கப்ரில் இறைவனைப் பற்றியும் நபி صلى الله عليه وسلم அவர்களை பற்றியும் கேள்வி கேட்கப்படும்! என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் – இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான் மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்” (அல்-குர்ஆன் 14:27)
நபி صلى الله عليه وسلم அவர்களின் பிராத்தனை: –
“அல்லாஹ்வே நான் நரகத்தைவிட்டும் நரகத்தின் தண்டனையை விட்டும் கப்ரின் வேதனையை விட்டும் அதிகமான செல்வத்தை விட்டும் ஏழ்மையை விட்டும் மற்றும் தஜ்ஜாலின் சோதனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
இறந்தவரின் உடல் கப்ருக்கு எடுத்துச் செல்லப்படும் போது: –
“மரணித்த ஒருவரை மண்ணறைக்கு எடுத்துச் செல்லும் போது மூன்று விஷயங்கள் அவரை பின் தொடர்ந்து செல்கின்றன; அவருடைய உறவினர்களும், சொத்துக்களும் திரும்பி விடுகின்றது. அவர் செய்த செயல்கள் மட்டும் அவரோடு தங்கி விடுகிறது”
மண்ணறை குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்: –
“மறுமையின் முதல் பிரவேசம் மண்ணறை! ஒருவர் அதிலே மீட்சி அடைந்து விட்டால் அடுத்த நிகழ்வுகள் அவருக்கு சுலபமானதாக இருக்கும். ஒருவர் அதிலே மீட்சி அடையவில்லை என்றால் அவரைத் தொடரக்கூடிய அடுத்து நிகழ்வுகளை அவர் கடினமாக காண்பார். மண்ணறையை விட கொடுரமான ஒரு இடத்தை நான் எப்போதும் கண்டதில்லை” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
“மண்ணறை என்பது சுவர்க்கத்தின் ஒரு தோட்டமாகவோ அல்லது நரகத்தின் ஒரு படுகுழியாகவோ இருக்கும்”
“நான் தான் புகழிடத்தின் வீடு! நான் தான் தனிமையின் வீடு! நான் தான் புழுதியின் வீடு! மற்றும் நான் தான் புழுக்களின் வீடு! என்று மண்ணறை சொல்லக்கூடிய ஒருநாள் வரும். ஒரு முஃமின் இறந்த உடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்! என் மீது நடமாடியவர்களில் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர்கள்; நான் இன்றைய தினம் உங்கள் மீது பொறுப்பு அமர்தப்பட்டுள்ளோம்; நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்; நான் எவ்வாறு உங்களை நடத்தப்போகிறேன் என்பதை பாருங்கள்! என்று மண்ணறை சொல்லும். பிறகு அது கண்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு விரிவாக்கப்படும். சொர்க்கத்தின் ஒரு வாசல் அவருக்காக திறக்கப்படும். ஆனால் ஒரு நிராகரிப்பாளர் இறந்த உடன், உமக்கு எந்த வரவேற்பும் இல்லை; என் மீது நடமாடியவர்களில் நீர் தாம் மிகவும் வெறுப்புக்குரியவர்! இன்று உங்கள் மீது நான் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன்! நீர் என்னிடம் வந்துவிட்டீர்கள்! நான் உங்களை எவ்வாறு நடத்தப்போகிறேன் என்பதை பார்ப்பீர்கள்; மலைப்பாம்புகள் அவர்கள் மீது ஏவப்படும்; அந்தப்பாம்பு எப்படிப்பட்டதென்றால் ஒரு பாம்பு இந்த பூமியின் மீது சுவாசித்தால் இந்த உலகம் உள்ளவரை ஒரு புல் பூண்டு கூட முளைக்காது; மேலும் அது மறுமைக்காக எழுப்பபடும் நாள்வரை கடித்துக்கொண்டே இருக்கும்”
கப்ரில் நடக்கும் வேதனை குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்: –
“அல்லாஹ்வுக்கு சமமாக மற்றவர்களை அழைத்து பிரார்த்திப்பவர்கள், மண்ணறையில் கடினமான சோதனையை சந்திப்பார்கள். மண்ணறையில் இறந்தவர்களை அடக்குவதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள் என்று நான் பயப்படாமலிருந்தால் நிச்சயமாக நான் உங்களுக்கு மண்ணறையில் நடக்கும் வேதனையை கேட்கச் செய்திருப்பேன்”
“நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்” என்று கூறினார்கள்.
“அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் صلى الله عليه وسلم குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ , ஆதாரம் : புகாரி)
கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ:-
“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!” அறிவிப்பவர் : அபூஹுரைரா, رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்” அறிவிப்பவர் : புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.
கப்ருகளை வணங்கும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுதல்: –
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: –
“யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர்” (நூல் : புகாரி)
“அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள்” (நூல் புகாரி மற்றும் முஸ்லிம்)
“இறைவா என்னிடைய கப்ரை வணங்கும் இடமாக ஆக்கிவிடாதே! யார் நபி மார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக எடுத்துக்கொண்டார்களோ அவர்களின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானதாக இருக்கும்”
கருனையாளனான வல்ல அல்லாஹ் முஸ்லிமான நம் அனைவரையும் கப்ருடைய வேதனையிலிருந்தும், மறுமையில் நரக வேதனையிலிருந்தும் காப்பாற்றி ஈடேற்றம் அளித்திடுவானாக!
Assalamu Alaikkum Var Vb,
We are getting excellent information about Inslam.
Masha Allah……