ஜகாத் பெற தகுதி படைத்தவர்கள்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஜக்காத் கொடுப்பதும் ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்திக் கூறும் பெரும்பாலான இடங்களில் எல்லாம் இந்த ஜக்காத்தைப் பற்றியும் மிக மிக வலியுறத்திக் கூறியிருக்கிறான்.

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜக்காத் கொடுக்க மறுத்த கூட்டத்தினரோடு யுத்தப் பிரகடனம் செய்கின்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜக்காத் விளங்குகிறது. எனவே நாம் ஜக்காத்தை ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி கணக்கிட்டு கொடுத்து வருவது அவசியமாகும்.

ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

(ஜகாத் என்னும்) தானங்கள்

தரித்திரர்களுக்கும்,
ஏழைகளுக்கும்,
தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்,
அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
கடன் பட்டிருப்பவர்களுக்கும்,
அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),
வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
(அல்-குர்ஆன் 9:60)

இவர்களே ஜக்காத் பெற தகுதியுடையவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். ஆனால் நம்மில் சிலர் அறியாமையினால் பள்ளிவாசல் கட்டுதல், பள்ளிக் கூடங்கள் கட்டுதல் மற்றும் இன்ன பிற பொது சேவைகளுக்காகவும் மற்றும் இறைவன் கூறிய எட்டு வகையினரல்லாத பிறருக்கும் தமது ஜக்காத் தொகையிலிருந்து செலவழித்து விட்டு தாம் ஜக்காத் கொடுத்துவிட்டதாக எண்ணுகின்றனர். இவர்கள் மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவு பெற கடமைப்பட்டுள்ளார்கள்.

இறைவன் வலியுத்திக் கூறியுள்ள இஸ்லாத்தின் மிக முக்கியமான இந்தக் கடமையை முறைப்படி நாம் நிறைவேற்ற வேண்டும். அதற்காக நாம் ஜக்காத் கொடுக்க வேண்டிய அளவு என்ன? யார் யாருக்கு கொடுக்கலாம் என்பதை இஸ்லாமிய அறிஞர்களின் துணையோடு தெரிந்துக் கொள்வது நம்மீது கடமையாக இருக்கிறது.

அல்லாஹ் நம்மனைவருக்கும் அதற்குரிய வாய்ப்பைத் தந்து அவன் இட்ட கட்டளையை முறைப்படி பேணி நடக்க அருள் புரிவானாகவும்.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed