நரகவாசி, சொர்க்கவாசி என பிறரைக் கூறுவது
அரபி மூலம்: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ
‘உயிரோடு வாழும் ஒரு மனிதரைப் பார்த்து நீ நரகத்திற்கு உரியவன் என்றோ அல்லது சுவர்க்கத்திற்கு உரியவன் என்றோ தீர்ப்பளிப்பதை கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என சவுதி அரேபிய மூத்த அறிஞர் குழுவின் உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான் அல் மனீஃ அவர்கள் மார்க்கத் தீர்ப்பளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளிக்கும் போது குறிப்பிட்டார்கள்.
அவர் தொடர்ந்து கூறும்போது, ‘ஒரு மனிதர் உயிர்வாழும் போது அவரின் செயல்பாடுகளை வைத்து எந்த ஒரு மனிதராலும் இறுதித் தீர்மானத்திற்கு வந்துவிட முடியாது. காரணம், குறித்த மனிதனின் கடைசி நிமிடங்கள் எவ்வாறு இருக்கப் போகின்றது? என்பது நம்மால் ஊகிக்க முடியாத ஒன்றாகும். இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாக்குமூலம் சான்றாக இருக்கின்றது.
“நிச்சயமாக ஒரு மனிதர் சுவர்க்க வாசிகளின் செயல்களில் ஈடுபட்டு, அவருக்கும் சுவர்க்கத்திற்கு ஒரு முழம் அளவு இருக்கும் போது அவருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட (எழுதப்பட்டது) குறிக்கிட்டு, அவர் நரக வாசிகளின் செயலில் ஈடுபட்டு நரகத்தில் நுழைந்து விடுவார். மேலும் இன்னுமொரு மனிதர், நரகவாசிகளின் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நரகத்திற்கும் அவருக்கும் ஒரு முழம் அளவு இருக்கும் போது அவரது இறுதித் தருவாயில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது குறுக்கிட்டு அவர் சுவர்க்கவாசிகளின் செயலை செய்து இறுதியில் அவர் சுவர்க்கம் நுழைவார்” (ஆதாரம்: புகாரி 3208, முஸ்லிம் 2643)
தொடர்ந்து ஷெய்க் அவர்கள் விளக்கமளிக்கையில்,
“நிச்சயமாக ஒரு மனிதனுடைய உள்ளம் அல்லாஹ்வின் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளது. அல்லாஹ் நாடியவாறு அந்த உள்ளத்தை புரட்டுகின்றான்” (ஆதாரம்: இப்னுமாஜா 199, இமாம் அல்பானி ‘ஸஹீஹ் என தீர்பளித்துள்ளார்கள்)
மேற்குறிப்பிட்ட நபிமொழிகளின் அடிப்படையில், நாம் யாரைப் பார்த்து “காஃபிர்” என்றோ அல்லது “நரகவாசி” என்றோ தீர்ப்பளித்தோமோ, அவர் கடைசி நிமிடத்தில் நல்லவராக மாறிவிட வாய்ப்பிருக்கின்றது என்பதே இஸ்லாமிய வழிகாட்டலாகும்.
மேலும், நாம் இப்படி அவசரப்பட்டு தீர்பளிப்பதாவது, அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ள ஒரு விஷயத்தில் தலையிடுவது போன்று ஆகிவிடும். காரணம் அல்லாஹ் அனைவரது முடிவையும் நிர்ணயம் செய்து வைத்துள்ளான். அந்த நிர்ணயத்தின் இறுதி முடிவை யாரும் அறிந்து விட முடியாது.
சில வேலை ஒரு நல்ல மனிதர் கூட கடைசி நேரத்தில் வழி தவறி, கெட்டவராக மாறவிடும் சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
தமிழாக்கம்: M. ரிஸ்கான் முஸ்தீன் மதனி
அல் கப்ஜி, சவுதி அரேபியா.
01/01/2019