சூஃபிகளின் அவதாரக் கொள்கை Vs கிறிஸ்தவர்களின் திரித்துவக் கொள்கை
புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.”
(அல்-குர்ஆன் 5:17)
மேற்கண்ட வசனத்தில் ஈஸா (அலை) அவர்கள் தான் அல்லாஹ் எனக் கூறுபவரை இறை நிராகரிப்பாளர்கள் என அல்லாஹ் கூறுகின்றான்!
அதாவது கத்தோலிக்க கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கர்த்தரே பரிசுத்த ஆவியாகவும் இயேசுவாகவும் அவதரித்திருப்பதாக நம்பிக்கைக் கொண்டு திரித்துவக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராக இருப்பவர்! அதாவது கர்த்தர், பரிசுத்த ஆவி மற்றும் இயேசு என்பவர்கள் மூவர் அல்லர்! மாறாக அம்மூவரும் ஒருவர் தான் என்ற திரித்துக்கோட்பாட்டை நம்புபவர்கள்!
இவ்வாறு ஈஸா (அலை) தான் அல்லாஹ் எனக் கூறுபவர்களைத் தான் இறை நிராகரிப்பாளர்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.
காரணம் என்னவெனில் “அல்லாஹ் என்பவன் இந்த அகிலங்கள் மற்றும் அதில் உள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் ஆவான்! எனவே படைப்பாளன் என்பவன் வேறு! அவனது படைப்பினங்கள் என்பது வேறு! படைப்பாளனே படைப்பினமாக அவதரித்ததாக கூறியதால் தான் அல்லாஹ் இந்த கொள்கையுடையவர்களை இறை நிராகரிப்பாளர்கள்” எனக் கூறினான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்” (அல்-குர்ஆன் 3:59)
இப்போது நம்மவர்களின் விசயத்திற்கு வருவோம்!
நம்மவர்களின் சிலர் இஸ்லாமிய பெயர்களைத் தாங்கிக்கொண்டு எந்த கொள்கையை கிறிஸ்தவர்கள் கொண்டிருந்ததால் அவர்களை அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறினானோ அதைப் போன்ற கொள்கைகளையும் கொண்டிருக்கின்றனர்.
நம்மிடையில் சூஃபிக் கொள்கையுடையவர்கள்,
“அல்லாஹ்வே அவனது தூதராக இப்பூவுலகில் அவதரித்திருக்கின்றான்” என்றும்
“அவர்களைக் கொண்டே மற்ற சிருஷ்டிகள் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கின்றன” என்றும்
நம்பிக்கைக் கொண்டு மாபெரும் வழிகேட்டில் உழன்று கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் தாம் வழிகெட்டு தட்டழைவதில்லாமல் பிற முஸ்லிம்களையும் வழிகெடுத்து நிரந்தர நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக ஆக்குவதற்கு எத்தனிக்கின்றனர்.
நவூதுபில்லாஹ் மின்ஹா!
இவர்களின் பொய்யான இந்தக் கூற்றுக்களை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்!
இன்னும் சிலரோ இதற்கும் இன்னும் ஒருபடி மோசமாக சென்று “இறைவன் தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!” என்ற துருப்பிடித்த தத்துவத்தை இஸ்லாமிய தத்துவமாக நமதூர் மக்களிடையே தினிக்க முயல்கின்றனர்.
இவர்கள் தங்களின் இந்தக் கொள்கைக்கு அரபியில் வஹ்தத்துல் உஜூத் என்று பெயரிட்டு முஸ்லிம்களிடையே போதித்து நிரந்தர நரகத்திற்கு ஆள் சேர்க்கின்றனர்!
இந்த இந்த வஹ்தத்துல் உஜூத் கொள்கையாளர்களிடம், “இறைவன் அனைத்திலும் இருப்பான்” என்றால் “சிலைகள், கல், மண், பாறைகள், ஏன் அசிங்கமான பொருள்களிலும் கூட அல்லவா இருக்கவேண்டும்” அதற்கு உங்களின் பதில் என்ன? என்று கேட்டால் “உங்களுக்குப் புரியாது” என்று பசப்பு வார்த்தையைக் கூறுவர் இந்த இஸ்லாமிய பெயர் தாங்கிகள்!!
எனவே அன்பு இஸ்லாமிய சொந்தங்களே! “இஸ்லாம் என்பது தெளிவான மார்க்கம்! இதில் எவ்வித குழப்பமும் இல்லை!”
அல்லாஹ் தனது திருமறையில் கூறுவது போல அவனே இப்பிரபஞ்சங்கள் மற்றும் அதிலுள்ளவர்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன்!
ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வின் படைப்புகளே! இவர்கள் அனைவரும் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்; *நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.” (அல்-குர்ஆன் 2:252.)
“முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா?” (அல்-குர்ஆன் 3:144)
“(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்.” (அல்-குர்ஆன் 9:128)
“இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை” (அல்-குர்ஆன் 18:56)
“(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை” (அல்-குர்ஆன் 21:7)
“அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்” (அல்-குர்ஆன் 22:75)
“இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.” (அல்-குர்ஆன் 24:54)
“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.” (அல்-குர்ஆன் 46:9)
எனவே அல்லாஹ்வே படைப்பாளன்! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உட்பட மற்றவை அனைத்தும் அவனது படைப்பினங்களே!
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி துதராகவும் அல்லாஹ்வின் உண்மை அடியாராகவும் இருக்கின்றார்கள்!
இதுவே ஒருவரை மறுமையில் சொர்க்கத்திற்கு கொண்டு சேர்க்கும் அகீதாவாகும்.
இதற்கு மாற்றமாக, “அல்லாஹ்வே ரசூலாக இப்பூவுலகிற்க்கு வந்தான்” என்று அல்லாஹ்விடம் கேட்கவேண்டிய பிரார்த்தனைகளை அவனது தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டு நபி (ஸல்) அவர்களை வழிபடும் “வஹதத்துல் உஜூத்” என்ற பெயரில் மக்களை வழிகெடுப்பவர்களை விட்டும் முஸ்லிம்கள் வெகுதூரம் விலகியிருக்க இருக்கவேண்டும்.
மேலும் இந்த “வஹ்தத்துல் உஜூத் கொள்கையாளர்களின் வழிகேடுகளை” மக்களின் முன்பாக தோலுரிக்கவும் முஸ்லிம்கள் தயங்கக் கூடாது!