முஸ்லிம்களின் நற்பண்புகள்- Part 3

வாய்மையைப் பேணுதல்!

‘ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்’ (அல்-குர்ஆன் 9:119)

சந்தேகமானதை பின்பற்றாமல் உறுதியானதைப் பின்பற்றுதல்!

“எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்” (அல்-குர்ஆன் 17:36)

மென்மையைக் கடைப்பிடித்தல்!

‘எவர் மிருதுவான தன்மையை தடை செய்கிறாரோ அவர் நல்லது அனைத்தையும் தடை செய்து கொள்கிறார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.

பிறரை சபிக்காமல் இருத்தல்!

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

மேலும் நபி (ஸல்) அவர்கள், ‘அதிகம் சபிப்பது உண்மையானவர்களுக்கு அழகல்ல’ என்று கூறியிருக்கிறார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

ஆணவம் கொள்ளாதிருத்தல்!

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்” (அல்-குர்ஆன் 31:18)

தற்பெருமை கொள்ளாதிருத்தல்!

“மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்! (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது! மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது” (அல்-குர்ஆன் 17:37)

பிறரை கேவலமாக எண்ணாதிருத்தல்!

தனது சகோதர முஸ்லிம் ஒருவனை கேவலமாக எண்ணுவது அவன் கெட்டவன் என்பதற்கு போதுமான (அடையாளமா)கும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

அளவு நிறுவையில் மோசடி செய்யாதிருத்தல்!

“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)

கர்வம் கொள்ளாதிருத்தல்!

“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)

பிறருக்கு அநீதி இழைக்காமல் இருத்தல்!

“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியாதிருத்தல்!

எவன் தனது ஆடையை பெருமைக்காக (கரண்டைக்கு கீழே) தொங்க விடுவானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான் என நபி (ஸல்) கூறிய போது அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எனது கீழாடை நான் சரி செய்து கொண்டிருந்தாலே தவிர கீழே இறங்கி விடுகிறது என்றார்கள். நீர் பெருமைக்காக செய்பவர்களில் உள்ளவர் அல்லர் என்றார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.

ஆண்கள் தங்கத்தினால் ஆன மோதிரம் மற்றும் செயின்களை அணியாமல் இருத்தல்!

எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தங்கமும், பட்டாடையும் ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : திர்மிதி.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *