முஸ்லிம்களின் நற்பண்புகள்- Part 2
மனைவியிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்!
குணங்களில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : திர்மிதி, அஹ்மத்.
குழந்தைகளிடத்தில் அன்பு செலுத்துதல்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
குழந்தைகளுக்கு தொழுகையைக் கற்றுக் கொடுத்தல்!
ஏழு வயதை அடைந்த குழந்தையை தொழும்படி ஏவுங்கள். பத்து வயதை அடைந்த பிறகு (தொழவில்லையானால்) அடியுங்கள். படுக்கையை விட்டும் பிரித்து விடுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அம்ர் இப்னு ஷூஐப் (ரலி), ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத்
அண்டை வீட்டாரைப் பேணுதல்!
“அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.
மல, ஜலம் கழிப்பதன் ஒழுங்குகள்!
சிறுநீர், மலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குதல், வலது கையால் சுத்தம் செய்தல், விட்டை, எலும்புகளைக் கொண்டு சுத்தம் செய்தல் இவையனைத்தையும் எங்களுக்கு நபி (ஸல்) தடை செய்தார்கள். அறிவிப்பவர் : ஸல்மான் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
சாப்பிடுவது, குடிப்பதன் ஒழுங்கு முறைகள்!
(சாப்பிடும் போது) அல்லாஹ்வின் பெயரைக் கூறு. வலது கையால் சாப்பிடு. உனக்கு முன்னுள்ள பகுதியிலிருந்து சாப்பிடு என நபி (ஸல்) எனக்குக் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் இப்னு அபூஸலமா (ரலி), ஆதாரம் : புகாரி.
உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்; சாப்பிடுகிறான் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸல்), ஆதாரம் : முஸ்லிம்.
தூங்குவதன் ஒழுங்கு முறைகள்!
நான் பள்ளிவாசலில் வயிற்றின் மீது (குப்புற) படுத்திருந்தேன். அப்Nபுhது ஒரு மனிதர் எனது காலை அசைத்து இப்படிப்பட்ட படுக்கையினால் அல்லாஹ் கோபம் கொள்கிறான் எனக் கூறினார். நான் (திரும்பி) பார்த்தேன் நபி (ஸல்) அவர்கள் (நின்று கொண்டிருந்தார்கள்) என எனது தந்தை கூறினார்கள். அறிவிப்பவர் : யஈஸ் இப்னு திகீஃபா (ரலி), ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத்.