துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்
அல்லாஹ்வால் சிறப்பித்துக் கூறப்பட்ட நாட்கள் தான் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்:
“விடியற் காலையின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக” (அல்-குர்ஆன் 89:1-2)
அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள்:
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உலக நாட்களில் மிகவும் அமலகள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும். இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் ‘லா இலாஹ இல்லல்லாஹு‘ என்றும் ‘அல்லாஹு அக்பர்‘ என்றும் ‘அல்ஹம்துலில்லாஹ்‘ என்றும் அதிகமதிகமாகச் சொல்லுங்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூலகள்: முஸ்னத் அஹ்மத், தப்ரானி)
நபி (ஸல்) அவர்களும் இந்த பத்து நாட்களைச் சிறப்பித்துக் கூறியிருக்கின்றார்கள்:
“துல்ஹஜ் மாதத்தில் முதல் 10 நாட்களில் செய்யப்படும் நல் அமல்களைப்போல அல்லாஹ்விற்கு பிரியமான அமல் வேறு இல்லை” என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்பொழுது, ‘அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதையும் விடவா?’ என நபித்தோழர்கள் கேட்டார்கள்.
“ஆம்! அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதை விடவும்தான். என்றாலும் போரில் உயிரையும், பொருளையும் தியாகம் செய்து வீர மரணமடைந்தவரைத் தவிர” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி); நூல் : புகாரி
துல்ஹஜ் பிறை 9, அரஃபா தினத்தின் சிறப்புகள்:
“நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
“அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரபா நாளாகும். இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செயவதில்லை.அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து,இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான்.” (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); ஆதாரம்: முஸ்லிம்)
“அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்” என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
குறிப்பு:– அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.
“அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)
அதிகமதிகம் தக்பீர் கூறுவதன் மூலம் இந்நாட்களைச் சிறப்பிக்க வேண்டும்:
“ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாக இல்லை. ஆகவே, ‘லாஇலாஹா இல்லல்லாஹ்‘, ‘அல்லாஹு அக்பர்‘, ‘அல்ஹம்துலில்லாஹ்‘ போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத்)
“இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.”
ஆதாரம் – புஹாரி.
இப்னு ஹஜர் (ரஹ்) கூறினார்கள்:
“துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்! தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை!” (பத்ஹுல் பாரி)
“ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாக இல்லை” என்ற நபிமொழிக்கேற்ப பின்வரும் அமல்களைச் செய்து இந்த நாட்களைச் சிறப்பிக்கலாம்:
1) முதல் 9 நாட்கள் நோன்பு நோற்கலாம். பத்தாவது நாள் பெருநாளாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது! அதிலும் குறிப்பாக பிறை 9 அன்று அரஃபாவுடைய தினத்தன்று நோன்பு நோற்பதன் மூலம் இரண்டு வருட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது.
2) அதிகமதிகம் தக்பீர் (அல்லாஹு அக்பர்), தஹ்மீல் (அல்ஹம்துலில்லாஹ்), தஹ்லீல் (லாஇலாஹா இல்லல்லாஹ்) கூறி அல்லாஹ்வைப் போற்றிப் துதிப்பது!
3) ஹஜ், உம்ரா செய்வது
4) குர்பானி (உழ்ஹிய்யா) கொடுப்பது
5) நஃபிலான வணக்கங்கள், தொழுகை போன்ற இபாதத்களில் நேரத்தை செலவிடுவது
போன்ற நற்செயல்களை செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.